2024-03-16 708

வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல்

வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல் -
வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை.
இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத தெரியப்படுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை வெளியிட்டோம். விரும்பிய சகோதரர்கள் அவற்றைக் கேட்பதன் மூலம் எமது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இதே வேளை எமது கருத்தைச் செவியுற்ற சில மௌலவிமார்கள் அதில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதை அறிகின்றோம். (நன்நோக்கமுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக)
என்றாலும், மாற்றுக் கருத்துடையோரின் வாதங்களை அவதானித்த போது அதில் பல தவறுகள் இருப்பதாக நாம் அறிவதால் எமது வீசீடியில் உள்ள விளக்க உரையுடன் சேர்ந்ததாக இதனை எழுதுகின்றேன்.
'ஷாத்' ஆன ஹதீஸ்
இந்த ஹதீதின் ஆய்வில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்காக ஹதீஸ் கலையிலுள்ள ஓர் அடிப்படை விதியை ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றேன். ஆதாரமற்ற பலஹீனமான ஹதீத்களின் வகைகளில் ஒன்று 'ஷாத்' எனப்படும் வகையாகும். அதாவது மிகவும் நம்பகமான ஒரு அல்லது பல அறிவிப்பாளர்களின் அறிவிற்பிற்கு மாற்றமாக அவர்களைவிட நம்பகத்தன்மையில் குறைவானவர் அறிவிக்கின்ற செய்திக்கு 'ஷாத்' என்று ஹதீத் கலை அறிஞர்கள் கூறுவார்கள். இவ்வாறான செய்தி ஏற்கப்படமுடியாத பலஹீனமான ஹதீதின் வகையில் சேர்க்கப்பட்டுவிடும்.
உதாரணம்:
இதனை ஓர் உதாரணத்துடன் விளக்குவோம் ஒருவரிடமிருந்து இருவர் ஓர் செய்தியைக் கேட்கின்றார்கள். அச்செய்தியை அவ்விருவரும் அறிவிக்கும் போது ஒருவருக்கொருவர் மாற்றமாக அறிவிக்கின்றனர். அல்லது ஒருவரைவிட மற்றொருவர் அறிவித்து அந்த அறிவிப்பில ஒருவருக்கொருவர் மாற்றமாகி விடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த இரண்டு அறிவிப்பாளர்களில் ஒருவா மிகவும் நம்பகத்தன்மைக்குரியவராகவும் மற்றவர் அவரைவிட நம்பகத்தன்மையில் தாழ்ந்தவராக அல்லது தவறு விடுபவா என்று குறைகூறப்பட்டவராக இருந்தால் மிகவும நம்பகத்தன்மைக்குரியவரின் அறிவிப்பையே நாம் ஏற்கவேண்டும். அவருக்கு மாற்றமாக அல்லது அவரைவிட மேலதிகமாக அறிவித்த தவறுவிடக்கூடிய அல்லது நம்பகத்தன்மையில் தாழ்ந்தவரின் அறிவிப்பை புறக்கனித்துவிட வேண்டும்.
இங்கு இந்த இரண்டாமவரின் அறிவிப்பிற்கு 'ஷாத்' எனப் பெயரிட்டு அது மறுக்கப்படுகிறது. இந்த இரண்டாமவர் வேறு பல இடங்களில் சரியாகவும் அறிவித்திருக்கலாம் என்றாலும் இச் சந்தர்பத்தில் , அவரின் அறிவிப்பைத் தட்டிவிட்ட காரணம் அவரைவிட மிக நம்பகமானவர் எல்லோராலும் ஏற்றுக கொள்ளப்படுபவர் இவருக்கு மாற்றமாக அறிவித்ததனாலாகும்.
இந்த விதிகளை சரிவரப்புரிந்து கொண்டால் வித்ரின் குனூத் ஓதுகின்ற ஹதீது தொடர்பான எமது வாதங்களையும் நியாயமாகப் புரிந்து கொள்ளமுடியும்.
வித்ர் குனூத் ஹதீஸ்:
இப்போது அந்த ஹதீதுனுள் சுருக்கமாக நுழைவோம். ஏனென்றால், இதன் விபரம் வீசிடிகளில் பேசப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தேன்.
இந்த ஹதீதை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் 'புரைத்' என்பவரிடம் இருவர் குறிக்கப்பட்ட செய்தியைச் செவியுருகின்றார்கள்.
முதலாமவர் : ஷுஃபா (இவர் மிக மிக நம்பகமான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதியான அறிவிப்பாளர்)
இரண்டாமவர் : யூனூஸ் (இவர் நம்பகமானவர், என்றாலும் பலரின் விமர்சனத்திற்குட்பட்டவர்.) இச் செய்தியை முதலாமவரான ஷுஃபா தெரிவிக்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரழி) அவர்களுக்கு 'அல்லாஹும்மஹ்தினி' என்று ஆரம்பிக்கும் ஓர் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றே அறிவிக்கின்றார். (நூல் : இப்னுஹுஸைமா) வித்ரின் குனூத்தில் அந்த துஆவை ஓதுமாறு கூறியதாக முதலாமவரான இந்த ஷுஃபாவைத் தொட்டும் எந்த ஆதாரமான அறிவிப்பிலும் இடம்பெறவில்லை. இதைப்பற்றி வீசீடியில் கூறியிருந்தோம்.
இவரை விட நம்பகத் தன்மையில் குறைந்த பலரின் விமர்சனத்துக்குள்ளான அறிவிப்பாளரான யூனூஸ் என்பவர்தான வித்ரின் குனூத்தில் இந்த துஆவை ஓதுமாறு நபிகளார் ஹசன் (ரழி)க்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகின்றார்.
நாம் ஆரம்பத்தில் கூறிய ஹதீத்கலை விதியின் பிரகாரம் இவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் நாம் வீசீடியில் தெரிவித்திருந்தோம். என்றாலும் எம்முடைய கருத்துக்குப் பதிலளிக்க முற்பட்ட சில சகோதரர்கள் எமக்கொரு விடயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அதாவது முதலாம நபரான ஷுஃபாவும் வித்ரின் குனூத்தில் இந்த துஆவை நபிகளார் ஓதுவதற்குக் கற்றுக் கொடுத்தார்கள் என அறிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆதாரம் எமக்கும், இப்னு ஹுஸைமா போன்ற மாபெரும் இமாம்களுக்கும் தெரியாததனால்தான் வித்ரில் குனூத் இல்லை என்று கூறியதாகவும், தெரிந்திருந்தால் வித்ரில் குனூத் உள்ளது என்று அவரும் நாமும் ஏற்றுக் கொண்டிருப்போம் என்றும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
விமர்சனத்தின் பதில்
இவர்களின் இக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனென்றால் மாற்றுக்கருத்துடையவர்கள் வைக்கும் இந்த ஆதாரத்தையும் இந்த ஆதாரத்திலுள்ள பிழைகளையும் அறிந்த பின்புதான் நாம் எமது கருத்தை வெளியிட்டோம். இதுவும் 'ஷாத்' என்ற பலஹினமான ஹதீதாகும்.
இதன் விபரம் சுருக்கமாக பின்வருமாறு :
இதனைப் புரிந்து கொள்ளுவதற்காக கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள பலஹீனமான ஹதீதின் வகைகளில் ஒன்றான 'ஷாத்' என்பதின் வரைவிலக்கணத்தை மீண்டும் உங்கள் மனக் கண் முன்னே வைத்துக் கொள்ளுங்கள்.
வித்ரின் குனூத்தில் இந்த துஆவை ஓதுமாறு இமாம் ஷுஃபா அறிவித்ததாக மாற்றுக் கருத்துடையோரால் குறிப்பிடப்பட்ட இச்செய்தியை 'ஷுஃபா'விடம் இருந்து செவியுற்றவர் 'அம்ருப்னு மர்சூக்' என்பவர். (இவர் பலரின் விமர்சனத்திற்கு உற்பட்டவர்) ஒரு சாரார் இவரை நம்பகமானவர் எனச் சொல்லியிருந்தாலும் இவரின் மனனசக்தியில் மோசமானவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவரை இமாம் புஹாரி அவர்களும் ஆதாரமானவராகக் கருதவில்லை
இது ஒரு புறம் இருக்க..
இந்த 'ஷுஃபா'விடம் இருந்து இந்த செய்தியைக் கேட்ட மிகவும் உச்சக்கட்ட நம்பகத் தன்மைக்குரிய மிகப் பெரும் 'ஷுஃபா'வின் நான்கு மாணவர்கள் இந்த 'அம்ருப்னு மர்சூக்'கிற்கு மாற்றமாக அறிவித்துள்ளார்கள். இவர்கள் யாரும் 'வித்ரின் குனூத்தில்'என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹும்ம மஹ்தினி என்று ஆரம்பிக்கும் ஓர் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றுதான் குறிப்பிடுகின்றார்கள்.
1. யஹ்யா இப்னு ஸயீத் (மனன சக்தியில் மலைபோன்றவர்) இவரின் அறிவிப்பை இமாம் இப்னு முன்திரிற்குரிய 'அவ்ஸத்' தில் காணலாம்.
2. அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ் (மிக உறுதியான எல்லா இமாம்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவிப்பாளர்) இவரின் அறிவிப்பை இமாம் அபுல் ஹஸனின் 'அத்துயூரியாத்'தில் காணலாம்.
3. யசீத் இப்னு சுரைஃ ( மிக உறுதியான நம்பகத்தன்மையின் மிக உயர் நிலைக்குரியவர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் இமாம்) இவரின் அறிவிப்பை ஸஹீஹ் இப்னு ஹுசைமாவில் காணலாம்.
4. முஹம்மது இப்னு ஜஃபர் (உறுதியான அறிவிப்பாளர். இமாம் புஹாரி, முஸ்லிம் போன்றோரால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஷுஃபாவின் மாணவர்களில் மிகவும் நம்பகத் தன்மைக்குரியவர் என்று குறிப்பாக பல இமாம்களாலும் குறிப்பிடப்பட்டவர்) இவரின் அறிவிப்பை இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் போன்றோரின் ஸஹீஹ் என்ற கிரந்தங்களில் காணலாம்.
மேற்குறிப்பிட்ட நான்கு அறிவிப்பாளர்களும் நபிகளாரின் பொன்மொழிகளை அதன் தூய வடிவில் அறிவிப்பதில் அனைத்து இமாம்களின் சான்றிதழ்களையும் பெற்றவர்கள்.
சுருக்கவுரை :
மொத்தத்தில் ஷுஃபா என்பவரிடமிருந்து ஐந்து பேர் குறிக்கப்பட்ட இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள். நம்பகத்தன்மையின் உச்சக்கட்டத்திலுள்ள நான்கு பேர் வெறுமனே 'ஒரு துஆவை கற்றுக் கொடுத்ததாக' அறிவிக்கிறார்கள்.
ஐந்தாம் நபரான மாற்றுக் கருத்துடையோரால் ஆதாரத்திற்குரியவராக முன்வைக்கப்பட்ட 'அம்ருப் இப்னு மர்சூக்' என்பவர்தான், அந்த மனன சக்தியின் மலைகளுக்கு மாற்றமாக 'வித்ரின் குனூத்தில் ஓதுமாறு நபிகளார் கற்றுக்கொடுத்தார்' என்று அறிவித்துள்ளார்.
இதனால் இந்த தனிப்பட்ட அறிவிப்பு முன் கூறிய விதியின் பிரகாரம் பலஹீனமான ஹதீதின் வகையில் ஒன்றான 'ஷாத்' என்ற வகையைச் சேர்ந்ததாக மாறிவிடும் என்பதை நடுநிலமையான பார்வையில் விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது மிக நம்பகத் தன்மைக்குரிய நான்கு பேர் கொண்ட செய்தியைத்தான். அதுவே ஆதாரமாகக் கொள்ளப்படும். எனவே 'வித்ருடைய குனூத்தில்' அல்லாஹும்ம மஹ்தினி என்று ஓத நபிகளார் கற்றுக்கொடுத்ததாக மிக நம்பகமான எந்த ஒரு அறிவிப்பாளராலும் வராததால்தான் இமாம் இப்னு ஹுசைமா (ரஹ்) அவர்கள் இதனை 'நான் ஆதாரமாகக் காணவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
ஷாதான, பலஹீனமான ஹதீதின் வகையைப் புரிந்து கொள்வதற்கு மிக எடுத்துக்காட்டாக இருப்பதற்கு இந்த ஹதீதின் இந்த ஆய்வுத் தொகுப்பு போதுமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
இதை ஒருவர் மறுக்கின்ற போது அவருடைய வாதம் எனக்கு எப்படி புலப்படுகின்றது என்றால், ஒரு தராசில் ஒருதட்டில் ஆயிரம் கிலோவையும், மறுதட்டில் நூறு கிலோவையும் வைத்தால் நூறு கிலோ உள்ள தட்டுத்தான் கதிக்கும் என்று ஒருவர் வாதிடுவதைப் போன்றுள்ளது. அல்லாஹ் எல்லோருக்கும் நடுநிலைமையான நேர்த்தியான சிந்தனையையும் நேர்வழியையும் காட்டுவானாக...
நபி (ஸல்) அவர்கள் அவரின் பேரன் ஹஸன் (ரழி) அவர்களுக்கு சிறுபிராயத்தில் ஓதுவதற்கு கற்றுக்கொடுத்த இந்த துஆவை நாமும் எமதுபிள்ளைகளுக்கு மனனமிடுவதற்கும் அடிக்கடி ஓதுவதற்கும் கற்றுக் கொடுப்போமாக.
அறிவுரை:
இறுதியாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
'இப்னு ஹுஸைமா இப்போது இருந்திருந்தால் மாற்றுக்கருத்துடையோரின் ஆதாரத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தை மாற்றியிருப்பார்கள்' என மாற்றுக்கருத்துடையோர் கூறியிருப்பது மிகத்தவறான கூற்றாகும்.
ஏனெனில் குறிக்கப்பட்ட செய்தியை இமாம் இப்னு ஹுஸைமா தமது கிரந்தத்தில் பதியாதிருந்து அல்லது அதைப்பற்றி பேசாதிருந்தது அவருக்கு அச்செய்தி தெரியாமல் இருந்ததால்தான் என்று கூற முடியாது.
ஏனெனில் நபிமொழிக் கிரந்தங்களை வெளியிட்ட ஒவ்வொரு இமாமும் தங்கள் கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ள ஹதீத்களை மட்டும் தான் அறிவார்கள் என்று எந்த ஒரு ஹதீத் கலை அறிவுள்ள அறிஞனும் கூறமாட்டான். பல இலட்சம் ஹதீத்களைத் திரட்டிய இமாம்கள் சில ஆயிரம் ஹதீத்களையே தங்கள் கிரந்தங்களில் பதிவு செய்தார்கள். ஏனையவைகளை பல காரணங்களுக்காக குறிக்கப்பட்ட கிரந்தத்தில் பதியாமல் விட்டுவிட்டார்கள். இது சாதாரண ஹதீத்கலை அறிவுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதை நான் விவரிக்கத் தேவையில்லை.
குறிக்கப்பட்ட மாற்றுக்கருத்துடையோரால் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் இந்த அறிவிப்பு 'ஷாத்' என்ற வகையைச் சார்ந்ததாகவே எமது ஆய்வில் இணங்கண்டிருந்தோம். அதனால் பேச்சுச் சுருக்கம் கருதி, விதிவஞ்சி அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்த்து வீசிடியில் பேசியிருந்தோம். எமக்கு அச்செய்தி தெரியாது என்பதனாலல்ல. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இவ்வாறே இப்னு ஹுஸைமா (றஹ்); அவர்களும் இதனை பலஹீனம் என்று கண்டதால் சுருக்கமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு தனது கிரந்தத்தில் பதியாமல் விட்டிருக்க முடியும்.
எனவே நாம் தவறாக விளங்கிய ஓர் ஆதாரத்தை வைத்து அதே ஆதாரத்தை இறந்து போனவர்களைச் சுட்டிக்காட்டி அவர் இருந்திருந்தால் அவரும் என்னையே பின்பற்றுவார் எனக் கூறுவது மறைவான ஞானத்தில் கைவைப்பது போலல்லவா வரும். இவ்வாறு வார்த்தைகளைப் பிரயோகிப்பது சரியான இஸ்லாமிய நம்பிக்கைக்கு புறம்பானது என்பதை சகோதர வாஞ்சையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்
.
- அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் வழங்குவானாக -
அன்ஸார் தப்லீகி