2024-02-06 915

தயம்மும் செய்யும் போது முதலில் தடவுவது முகத்தையா? அல்லது மணிக்கட்டுகளையா?

தயம்மும் செய்யும் போது முதலில் தடவுவது முகத்தையா? அல்லது மணிக்கட்டுகளையா?   

தயம்மம் செய்யும் முறையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுக்கும் போது  “தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து அதில் ஊதி விட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி இப்படிச் செய்வது உமக்குப் போதும் என அம்மார் (ரழி) அவர்களுக்கு கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புஹாரி 338, முஸ்லிம் 552

மேற்படி ஹதீஸீல் நபி(ஸல்) அவர்கள் கைகளை மண்ணில் அடித்து, ஊதிய பின் முகத்தையும் இரு மணிக்கட்டுகளையும் தடவிக்கொள்ளுமாறு  முன் பின் எந்த உறுப்பு என குறிப்பிடாமல் வந்திருப்பதை அவநானிக்கலாம்

ஆனால் இதே செய்தியை அம்மார்( ரழி) கூறும் போது செவியுற்ற ஷகீக் (றஹ்) தெளிவாக குறிப்பிட்டு அறிவிப்பது புஹாரி கிரந்தத்தில் பின்வருமாறு இடம்பெற்றிருக்கிறது

“பூமியின் மேல் அவரின் மணிக்கட்டைக் கொண்டு ஓர் அடி அடித்து பின் அதை உதறினார்கள் . பின்னர் அவரின் இடது கையினால் அவரின் (வலது) மணிக்கட்டின் வெளிப்பகுதியின் மீது அல்லது அவரின் (வலது) கையினால் இடது (மணிக்கட்டின் ) வெளிப்பகுதியின் மீது தடவினார்கள் . பின் அவரின் முகத்தை அதைக் கொண்டு தடவி “ இவ்வாறு செய்து கொள்வது உனக்கு போதுமாகும்  என்றார்கள் 

இவ்வாறே அபுதாவூத் கிரந்தத்திலும் பின்வருமாறு தெளிவாக வருகிறது “தனது இரு மணிக்கட்டுகளின் மீது வலதைக் கொண்டு இடதின் மீதும் இடதைக் கொண்டு வலதின் மீதும் தடவினார்கள் . பின்னர் முகத்தை தடவினார்கள் “

எனவே மேலுள்ள ஆதாரமான இந்த அறிவிப்புகள்  , முதலில் கையை தடவி விட்டு பின்னர் முகத்தை தடவ வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடுவதால் அதன் அடிப்படையில் முதலாவதாக இரு மணிக்கட்டுகளின் வெளிப்புறத்தில் தடவியதன் பின்னர் முத்தை தடவுவதே சரியான முறையாகும் என்பதை புரிந்து கொள்ள முடியும் 

பதில்- மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி