2024-01-26 763

மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?

மண்ணால் தயம்மும் செய்யும் போது முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டுமா?

எம்மில் பலர் தயம்மும் செய்யும் முறையில் முகத்திற்கும், கைகளுக்கும் வெவ்வேறாக இரு அடி அடிக்க வேண்டும் என அறிந்து வைத்திருக்கிறோம். 

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை  என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி உங்களுக்கு நினைவிருக்கின்றதா? 

நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து அதில் ஊதி விட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!  எனக் கூறினார்கள்  என்று தெரிவித்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புஹாரி 338, முஸ்லிம் 552

ஆனால் நாம் மேற்கூறிய ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தயம்மும் செய்யும் முறையை கற்றுக்கொடுக்கும் போது “நீ பூமியில் ஒரு அடி அடிப்பது அதுவே உனக்கு போதுமானதாகும்” என சொல்லிக்கொடுக்கிறார்கள். 

நபி(ஸல் ) அவர்களது வழிகாட்டலில் இரு அடி அடிப்பது ஆதாரபூர்வமாக பதிவாகவில்லை. மாறாக தயம்மும் செய்கையில் இரு அடி அடிக்க வேண்டும் என்பது இப்னு உமர்(றழி) அவர்களது ஒரு கூற்றாகும். 

ஸஹாபாக்களைப்பொறுத்தவரையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபிகளார்(ஸல்) அவர்களது முன்னிலையில் இருக்கமாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டிய முறை இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஸஹபாக்களின் இந்நிலையை பல சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

தயம்மும் செய்யும் போது முழங்கை வரை தடவ வேண்டுமா?    

தயம்மும் செய்யும் போது முழங்கை வரை தடவிக்கொள்ள வேண்டும் என்பதை பலர் சொல்கிறார்கள். இடது உள்ளங்கையால் முதலில் வலது கையை வெளிபுறமாக மேலிருந்து கீழாக முழங்கை வரை தடவிச்சென்று பின்னர் உட்புறமாக கீழிருந்து மேலாக தடவிக்கொள்ள வேண்டும் என பல மத்ஹப் புத்தகங்களிலும் எழுதி வைத்துள்ளார்கள்.

ஆனால் ஹதீஸ்களில் வரும் வார்த்தைகளோ மணிக்கட்டு மற்றும் முகம் மத்திரம் ஆகும்.  நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முழங்கை வரை தடவ வேண்டும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரபூர்வமான செய்தியும் கிடையாது.  இவையெல்லாம் அவர்களது சொந்தக்கருத்துக்கள். அதற்கு வஹியில் எந்த ஒரு நேரடி ஆதாரமும் கிடையாது. 

முடிவாக

நபி(ஸல்) அவர்கள் தயம்மும் செய்வதை மிக எளிமையாகவே கூறித்தந்துள்ளார்கள். இரண்டு கைகளையும் நிலத்தில் அடித்து விட்டு உதற வேண்டும் அல்லது ஊதிவிட வேண்டும். பின்னர் இரு மணிக்கட்டுகளிலும், முகத்திலும் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து கொள்வது போதுமானதாகும் எனவும் கூறிவிட்டார்கள்.

இது தான் வுழு மற்றும் கட்டாயக்குளிப்புக்காக செய்யப்படும் தயம்மும் முறையாகும்.

அல்லாஹ் தஆலா எம் அனைவருக்கும் நபி வழியில் மார்க்க சட்டங்களை விளங்கி நடக்க நல்லருள்பலிப்பானாக.

பதில்- மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி