2024-01-20 677

தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?

தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியமா?

சிலர்  தயம்மும் செய்வதற்கு புழுதியுள்ள மண் அவசியம் என்பதை சட்டமாக்குகின்றனர். ஆகவே கையில் ஊதும் போது புழுதி பறக்காத வண்ணம் மெதுவாக ஊத வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

தயம்மும் செய்யும் போது புழுதி உள்ள மண்ணால் தான் செய்ய வேண்டும் என்பதற்கான எந்த ஆதரபூர்வமான செய்தியும் கிடையாது.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை  என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி  உங்களுக்கு நினைவிருக்கின்றதா?  நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து அதில் ஊதி விட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!  எனக் கூறினார்கள்  என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்:  அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புகாரீ 338, முஸ்லிம் 552

மேற்படி ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் பூமியில் கைகளை அடித்த பின்னர் ஊதிக்கொள்ளுமாறு சொல்லிக்கொடுக்கிறார்கள்.  சில அறிவுப்புக்களில் உதறிக்கொள்வது என்றும் இடம்பெறுகிறது. அதாவது கைகளை மன்ணில் அடித்த பின்னர் அதை ஊதுவது அல்லது உதறுவதாகும். 

ஊதும் போது வேகமாக ஊதுவதா மெதுவாக ஊதுவதா என்பது பற்றி அறிஞர்கள் பற்பல கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால், நபி(ஸல்) அது பற்றி எதுவும் விரிவாக கூறவில்லை. ஆனால் ஊதிக்கொள்ளுமாறு கற்றுத்தந்திருக்கிறார்கள். 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம்-

நபி(ஸல்) அவர்களது வழிகாட்டலின் படி மண்ணில் நாம் கையை படுத்திவிட்டு பின்னர் அதில் ஊதிவிட்டோமென்றால் அதில் உள்ள புழுதி பறந்து விடுகிறது, பிறகு அதைக்கொண்டு முகத்தையும், மணிக்கட்டுகளையும் தடவும் போது அவற்றில் புழுதி படலாம். அல்லது படாது விடலாம். 

ஆக தயம்மும் செய்யும் போது அதற்குரிய அங்கங்களுக்கு புழுதி படவேண்டுமென்ற நிபந்தனை கிடையாது.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

‎ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ

நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான (பூமியின் ) மேற்பரப்பை நாடுங்கள் (தயம்மும் செய்து கொள்ளுங்கள் அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். (ஸூரா மாஇதா:06) 

இந்த குர்ஆன் வசனத்தில் “ஸஈத்” எனும் வார்த்தை இடம்பெறுகிறது. இது பூமியின் மேற்பரப்பை குறித்து நிற்கும். அல்லாஹ் சுத்தமான புவிமேற்பரப்பில் தயம்மும் செய்துகொள்ளுமாறு கூறுகிறான். ஆகவே தயம்மும் செய்யப்படும் மண் சுத்தமாக இருக்க வேண்டுமே தவிர அதில் புழுதி இருக்க வேண்டும் அல்லது காய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.

ஆகவே கடல் மண் போன்றவற்றிலும் தயம்மும் செய்யலாம் என்பதை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாமும் அதைந்தான் சரிகாண்கிறோம். 

பதில்- மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி