2024-01-14 727

நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?

நபி வழியில் தயம்மும் செய்வது எப்படி?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

சகோதரர்களே நாங்கள் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பின்பற்றி மறுமை வெற்றியைத்

தேடுகிறோம். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தது தான் மார்க்கம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். நபி(ஸல்) ஒரு விடயத்திற்கு வழிக்காட்டியிருந்து அதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்க்கமாக ஆக மாட்டாது. 

ஆகவே, நாம் சிறுபராயத்தில் பாடசாலைகளில் மார்க்க சட்டங்களில் சிலதை படித்திருப்போம். பின்னர் அதே விடயங்களை வேறு விதமாக மௌலவிமார்களினூடாக கற்றிருப்போம். இவ்வாறு ஒரே இஸ்லாமிய சட்டங்கள் ஒன்றுக்கொன்று முறணாக வெவ்வேறு விதமாக எம்மை வந்தடையும் போது நபி(ஸல்) அவர்களது வழிகாட்டலோடு நின்றுகொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில், நாம் பாடசாலையில் கற்கும் போது எமக்கு இஸ்லாம் பாடத்தில்  தயம்மும் முறை சொல்லித்தரப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த தயம்மும் முறையில் திருத்தப்பட வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன.

இந்த தயம்மும் செய்யும் முறையை பற்றிய முழு வழிகாட்டல் நாமனைவரும் ஆதரபூர்வமான ஹதீஸ் கிரந்தம் என ஏற்றுக்கொண்ட ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியிருப்பதைக்காணலாம்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து,  எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை  என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி,  உங்களுக்கு நினைவிருக்கின்றதா?  நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி,இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!  எனக் கூறினார்கள்  என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) நூல்கள்: புகாரீ 338, முஸ்லிம் 552

இந்தச்செய்தி பல கிரந்தங்களில் இடம்பெறுகிறது. ஒரு அறிவிப்பில் இல்லாத வார்த்தை மற்ற அறிவிப்புக்களில் இடம்பெறுகிறது.  இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து தயம்மம் செய்யும் முறையைக் கடைப்பிடிப்போம்

 

பதில்- மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)