2024-01-01 1194

கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?

கப்ரின் வேதனை உயிரிற்கு மட்டுமா?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம்-

ஒருவர் மரணித்த பின் கப்ரில் வைக்கப்படும் போது,  அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரியவராக இருந்தால் அவருக்கான தண்டனை உயிருக்கு மாத்திரமா? அல்லது உடலுக்கும் உயிருக்குமா? 

இந்த கேள்விக்காக காரணம் உலகில் மரணிக்கும் உடல்கள் எல்லாம் மண்ணறையில் வைக்கப்படுவதில்லை. மாறாக சில கடலில் அழுகிப்போகின்றன. சில எரிந்து சாம்பலாகி விடுகின்றன. 

அவ்வாறெனில் அதன் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதைப்பார்ப்போம்.

மண்ணறை வேதனை என்பது உண்மையா?

மேலே கேட்கப்பட்டிருக்கும் பிரதானமான கேள்விக்கு விடையைப் பார்ப்பதற்கு முன் நாம் இங்கு முதலில் சொல்லில்கொள்ளும் விடயம்- மண்ணறை வேதனை என்பது உண்மையாகும். அது தண்டனைக்குரியவர்களுக்கு நிகழ்ந்தே தீரும். ஏனெனில், சிலர் கப்ர் வேதனையை மறுக்கின்றனர். அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக கப்ரின் வேதனை உன்மையாகும் 

நபி(ஸல்) அவர்கள் கப்ர் வேதனையிலிருந்து அதிகமதிகம் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள். எம்மையும் பாதுகாப்பு தேடிக்கொள்ளும் படி கூறியிருக்கிறார்கள். அதன் உண்மைத்தன்மை பற்றிய ஆதரங்களை அல்குர்ஆன், ஹதீஸ்களில் தெளிவாகவே காணலாம்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கப்ர் வேதனை பற்றிக் கூறிவிட்டு, “அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்பானாக” என்றும் கூறினாள். பிறகு கப்ர் வேதனை குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம். கப்ர் வேதனை உண்டு” எனக் கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற எந்தத் தொழுகையிலும் கப்ர் வேதனையிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை. (ஸஹீஹுல் புகாரி 1372)

ஆகவே, அடிப்படையில் மரணித்த மனிதன் தண்டனைக்கு தகுதியானவர்  என்றால் அவர்  கப்ரிலே வேதனை செய்யப்படுவார். 

தண்டணைக்கு தகுதியானவனின் கப்ர் வேதனை எவ்வாறு அமையும்? 

ஒரு காபிர் அல்லது ஒரு முனாஃபிக் அல்லது ஒரு பாவி கப்ரில் வேதனை செய்யப்படும் போது அவருக்கான தண்டனை  எவ்வாறு அமையும்? என்பதற்கான விளக்கத்தை பின்வரும் ஹதீஸ் மிக அழகாக தெளிவுபடுத்துகிறது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியானின் உடலை கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் செவியுறுவார்.

அதற்குள் இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, “முஹம்மத் (ஸல்) எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகின்றேன்” என்பார்.

பிறகு “(நீர் கெட்டவராக இருந்திருந்தால் நரகத்தில் உமக்குக் கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உமக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்படும். அப்போது அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.

இறைமறுப்பாளனாகவோ நயவஞ்சகராகவோ அவன் இருந்தால் (கேள்வி கேட்கப்பட்டதும்), “எனக்கு (ஒன்றும்) தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்” என்பான் . அப்போது அவரிடம் “நீ(யாக) எதையும் அறிந்ததுமில்லை; (குர் ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும்.

பிறகு இரும்பாலான சுத்தியலால் அவருடைய இரு காதுகளுக்கிடையயே ஒர் அடி அடிக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் ஆகியோரைத் தவிர, அருகிலுள்ள மற்ற அனைவரும் கேட்கும் அளவுக்கு அவன் கத்துவான்.” (ஸஹீஹுல் புகாரி 1338)

இந்த ஹதீஸானாது வேறு சில அறிவுப்புக்களில் பாவிகளின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று நசுக்கப்படும் எனவும் இடம்பெறுகிறது. (முஸ்னத் அஹ்மத் 12271)

சகோதரர்களே!

இந்த ஹதீஸில் இரு காதுகளுக்கிடையில் இரும்பினாலான சுத்தியலால் அடிக்கப்படும் என இடம்பெறுகிறது. மேலும் அந்த அடியின் வேதனையில் அவர் சத்தமிடுவார் என இடம்பெறுகிறது. மேலும் அவரது விலா எலும்புகள் நசுக்கப்படும் எனவும் இடம்பெறுகிறது. 

ஆகவே இங்கு காபிராக அல்லது முனாஃபிக்காக அல்லது பாவியாக மரணித்தவரின் உறுப்புக்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அதன் வேதனையை அவர் உணர்வார். அவரது அலறலை மனிதன்,ஜின் தவிர்ந்த மற்ற படைப்பினங்கள் அனைத்தும் செவியுறும். எனவே இவற்றின் மூலம் உடலுக்கும் வேதனை வழங்கப்படுகிறது என்பது புலனாகிறது.

ஆகவே அடிப்படையில், கப்ர் வேதனை என்பது உடலுக்கும், உயிருக்கும் தான் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கப்ரில் வைக்கப்படாத பாவிகளின் நிலை என்ன?

மண்ணறையில் வைக்கப்படாத கடலில் கரைந்து போன அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி விட்ட உடல்களின் நிலை என்னவென்றால்-

இந்த உலகத்தை விட்டு பிரிந்த பின் இருக்கும் அடுத்த வாழ்க்கை ‘Bபர்ஸக்’ உடைய வாழ்க்கை எனப்படும். இதை அல்குர்ஆன் எங்களுக்கு பின்வருமாறு கூறிக்காட்டுகிறது. 

‎وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்களின் பின்னால் ஒரு திரையிருக்கிறது. (சூரா முஃமினூன்:100)

இந்த பர்ஸகுடைய வாழ்க்கையானது திரையிடப்பட்ட உலகமாகும். அதில் நிகழ இருக்கும் சில விடயங்களை நபி(ஸல்) அவர்கள் சாதாரணமாக கூறி விளக்கினார்கள். அதை நாம் ஆரம்பத்தில் கூறிய ஹதீஸில் காணலாம்.

இதற்கப்பால், மண்ணறையில் வைக்கப்படாமல் அழிந்து போன உடல்களை அல்லாஹ் தஆலா பழையபடி  ஒன்று சேர்ப்பதற்கு வல்லமை படைத்தவன்; ஆற்றல் பொருந்தியவன். அந்த உயிருக்கு தண்டனை வழங்கப்படுவதைப்போன்று அதன் உடலுக்கும் தண்டணை வழங்கப்படும். ஆனால், அதை எங்கு சேர்ப்பான்? எவ்வாறு நிகழ்த்துவான் என்பது எமது அறிவுக்கு அப்பாற்பட்ட விடயம். ஆனால், மரணித்த உயிரின் உடலையும் சேர்த்து தான் தண்டனை வழங்கப்படுகிறது.

இன்றைய விஞ்ஞான உலகத்தில் எவ்வளவு அதிசயங்களை பார்த்து வருகிறோம். மனித கண்டுபிடிப்புக்களே இவ்வாறு இருக்கையில் அல்லாஹ் தஆலாவின் வல்லமை, ஆற்றல், சக்தி என்பவை மனித பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி விரிவாக பேசத்தேவையில்லை. 

மறுமையில் அல்லாஹ் தஆலா அனைத்து மனிதர்களையும் தன் முன் நிறுத்தியே ஆகுவான். அழிந்து போன உடல்கள் மறுமை நாளில் எழுப்படும் என்பதை நாம் உறுதியாக ஏற்றிருக்கிறோம். ஆக, அதே இறைவன் தான் இந்த Bபர்சக் உடைய உலகையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். 

பர்ஸக் எனும் திரையிடபட்ட உலகு என்பது பொதுவாக கப்ர் உடைய வழ்க்கையாகும் என நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஏனெனில் பெரும்பாலும் மனிதன் மரணித்தால் மண்ணறையில் தான் வைக்கப்படுவான். விதிவிலக்காக சில உடல்கள் அழிந்து சிதைந்து போகின்றன. அந்த உடலின் பர்ஸக் உடைய வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை எவறாலும் ஊகிக்க முடியாது. ஆனால் அவற்றின் உயிர்,உடல் இரண்டையும் ஒன்று சேர்த்து அவற்றுக்கு தண்டனை வழங்க அல்லாஹ் தஆலா ஆற்றல் பெற்றவன். ஏனெனில் மனிதன் பாவியாக மரணித்தால் அவனது உடலும் உயிரும் வேதனைகுட்படுத்தப்படும் என்பது தெளிவாகவே ஹதீஸ்களில் இடம்பெறுகிறது. 

முடிவாக

அடிப்படையில், கப்ர் வேதனை என்பது உடலுக்கும், உயிருக்கும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மண்ணறையில் வைக்கப்படாமல் அழிந்து போன உடல்களை அல்லாஹ் தஆலா பழையபடி  ஒன்று சேர்ப்பதற்கு வல்லமை படைத்தவன்; ஆற்றல் பொருந்தியவன். அந்த உயிருக்கு தண்டனை வழங்கப்படுவதைப்போன்று அதன் உடலுக்கும் தண்டணை வழங்கப்படும்.

இதை இவ்வாறு நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இது தான் அல்குர்ஆன் சுன்னா’வாதிகளின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

அல்லாஹ் தஆலா  எமக்கு சரியான, நேர்த்தியான நம்பிக்கைக்கு வழிகாட்டுவானாக. வீணான குதர்க்கங்களை விட்டும் எம்மை பதுகாப்பானாக!

பதில்- மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி