2023-12-31 869

தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?

தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் கூறலாமா?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

தீர்வுக்காக கணவனுடைய குறைகளை பிறரிடம் சொல்லலாமா? 

என ஒரு சகோதரர் கேட்கின்றார். 

பொதுவாக எந்த ஒரு நபரிடமும் இருக்கும் குறையை பிறரிடம் கதைப்பது பாவமாகும். அதை புறம் பேசுதல் என்போம். அதிலும் கணவன் என்பவர் மனைவியின் பாதுகாவலர் ஆவார். அவருடைய குறையை மனைவி மறைப்பது மிக மிக அவசியமாகும். இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் தமது நீண்ட ஒரு அறிவிப்பில் கூறியதாவது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்-

குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்.  ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரானபோது அவர்களுக்குப் பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்தபோது அவருக்கு அவர்கள் தம் (சமூகத்தி )லிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்துவைத்தனர்.  இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துகொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச்சென்ற (தம் மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.

ஆகவே இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார்.  பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் ‘‘நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது வாசல்படியை மாற்றிவிடும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதுபோல் உணர்ந்தார்கள்.  ஆகவே, ‘‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘‘ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள்கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம், உங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது? என்று கேட்டார்.

நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்குத் தமது சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார்.  இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தைதான். உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். 

பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம்வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்.  அதற்கு அவர், ‘‘எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், ‘‘நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.  இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், ‘‘இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, ‘‘தண்ணீர்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அபிவிருத்தியை வழங்கும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள்.

ஆகவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்திவருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதேயில்லை” என்று சொன்னார்கள்.   இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். அவரது (வீட்டு) படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, ‘‘உங்களிடம் யாரேனும் வந்தார்களா?” என்று கேட்க, அவருடைய மனைவி, ‘‘ஆம்; எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) ‘‘என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார்.

நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார்.  ‘‘அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தை; நீதான் அந்த நிலைப்படி. உன்னை (தலாக்  செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக்கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி 3364)

சகோதரர்களே! 

இந்தச்செய்தியில் இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் மகனை அந்த முதல் மனைவியை விவாகரத்து செய்யச்சொன்னார்கள். ஏனென்றால், அல்லாஹ்வைப்பயந்து நேர்மையாக நடக்கும் நல்ல ஒர் கணவன் தன் மனைவிக்கு அநியாயம் செய்ய மாட்டார். இஸ்மாயீல்(அலை) நல்ல ஒரு இறையடியானாக இருந்தார்கள். தன் தந்தை இறைவன் கட்டளைப்படி களுத்தை அறுக்கக்கோரிய போது “அவ்வாறே செய்யுங்கள். என்னை நீங்கள் பொறுமையாளராக காண்பீர்கள்” எனக்கூறியவர் அவர். 

இப்படிப்பட்ட மனிதனை குறை சொல்லக்கூடியவளாக அவரது மனைவியை கண்ட வேளையில் இந்த மனைவி இவரோடு வாழ்வதற்கு தகுதி அற்றவள் என்ற முடிவை எடுக்கிறார்கள். ஏனென்றால், அந்தப்பெண் தன் வாழ்க்கையின் கஷ்டங்களை பிறருக்கு சொல்லுகிறாள். தன் கணவனின் குறையை வெளிப்படுத்துகிறார்.

அடுத்து, கணவன்-மனைவி பிரச்சினைகள் எனும் போது இரு பக்கத்தையும் நோக்க வேண்டியுள்ளது. அதாவது அடிப்படையில், கணவன் தன் மனைவி விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ள வேன்டும். அவர் அவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் மனிதன் என்ற அடிப்படையில் சில குறைகள் ஏற்படலாம். அதை மனைவி கணவனிடம் அன்பாக எடுத்துச்சொல்லி தீர்த்து விட வேண்டும். 

ஆனால், கணவன் அடிப்பையில்  தன் கடமையை சரிவர நிறைவேற்றாத குறையுள்ளவராக இருந்தால் அவரில் மாற்றம்,திருத்தம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவரது பாதுகாவலர்களான அவரது தாய் அல்லது தந்தையிடம் அவரைப்பற்றி தெரியப்படுத்தலாம். இது அவர்களது வாழ்க்கை பிரிந்து விடக்கூடாது; அவரில் மாற்றத்தை ஏற்படுத்தி சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நலவுக்காக தெரியப்படுத்துவதாகும். 

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம், ஒரு மனிதனில் மனைவி காணும் குறைகள் சில மறைக்கப்பட வேண்டிய தனிப்பட்ட குறைகளாக இருக்கலாம். அதை ஒருபோதும் எவரிடமும் வெளிப்படுத்தக்கூடாது. அவரது மற்றைய சில குறைகள் தன் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளில் இருக்கலாம். ஆகவே அது போன்ற குறைகள் அவசியம்கருதி, குடும்ப நலன் கருதி உரியோர்களிடம் தெரியப்படுத்தப்படலாம். அது கணவனின் தாய், தந்தையராகவோ அல்லது மனைவியின் தாய் தந்தையராகவோ இருக்கலாம்.

இது தவிர்ந்து பக்கத்து வீட்டார், நண்பிகள் மேலும் எவரிடம் கூறினால் எந்த தீர்வும் கிடைக்காதோ அத்தகையவர்கள் போன்றோரிடம் அநாவசியமாக கணவனின் குறையை பகிர்வது பாவமாகும். அது கூடாத காரியமாகும். அதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அது தெளிவான புறமாகும்.

மனைவி தவறு செய்யும் பட்சத்தில் அதை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் சூரா நிஸா:34,35 ஆம் வசனங்களில் பின்வருமாறு விளக்குகிறான்.

‎اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏

34: (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் 

சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (மனைவியர்களுக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள்  (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

‎وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏

35:(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்கு உணர்கிறவனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனங்களில் அல்லாஹ் தப்பு,தவறு செய்யும் மனைவிமார்கள் விடயத்தில் முதலில் அவர்களுக்கு அறிவுரை கூறி திருத்தச்சொல்கிறான். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் காணாவிட்டால் படுக்கையில் பிரித்து வைக்கும் படி கூறுகிறான். அதிலும் அவள் தன்னை திருத்திக்கொள்ளவில்லையென்றால் கண்டித்துப்பார்க்கச்சொல்கிறான். அதிலும் நிலமை சீராகாமல் பிரச்சினை நீடிக்குமென்றால் நலவுக்காக தாய்,தந்தையிடம் ஓர் ஆலோசணைக்காக சொல்லிப்பார்க்கலாம். இவ்வேளையில் கணவன்,மனைவி இருவருக்குமிடையிலான குறைகள் வெளிவரலாம். இப்படியான சூழ்நிலைகளில் நடுநிலமையாக நீதமாக சிந்திக்கக்கூடிய பெண்தரப்பிலிருந்து ஒருவரும், ஆண்  தரப்பிலிருந்து ஒருவரும் முன்நின்று சிறந்த முடிவை கொடுக்கும் படி அல்லாஹ் தஆலா வழிகாட்டுகிறான். 

சகோதரர்களே! இது தான் அழகான வழிகாட்டல். 

ஆனால், இன்றளவில் வீட்டிலுள்ள பெண்கள் வாட்ஸப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களோடு அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அல்லது தொலைபேசியில் தன் நண்பிகளிடம் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அதில் பெரும்பாலான பெண்கள் தம்மை சுத்தமாகவும், கணவன்மார்களை பிழையானவர்கள் என குறைகளைக்கூறி கதைத்துக்கொள்கிறார்கள். இது ஒரு அநியாயமாகும். 

நாம் அனைவரும் அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும். கணவன் தனது மனைவியின் தனிப்பட்ட குறைகளையும் மனைவி தன் கணவனின் தனிப்பட்ட குறைகளையும் மறைப்பது கடமையாகும். சில நலவுகள், திருத்தங்கள் ஏற்பட வேண்டுமென்றிருந்தால் அதை நாம் மேற்கூறிக்காட்டியது போல உரிய முறையில் அணுக வேண்டும். இதற்கு மாற்றமாக மனப்பாரத்தை இறக்க வேண்டும் என்ற பெயரில் குறைகளை வெளிப்படுத்துவது பிழையான காரியமாகும். 

இவை அமானிதமாகும். அல்லாஹ் தஆலா இது பற்றி மறுமையில் கேட்பான். இந்த விடயத்தில் நாம் அனைவரும் அடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)