2023-12-12 606

கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?

கோபம் வருவதிலும் சுவன பாக்கியமா?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அல்குர்ஆன் சுவனவாசிகளின் பண்புகள் பலதை கூறிக்காட்டுகிறது. அதில் கோபத்தை அடக்குவது சுவனவாசிகளின் முக்கியமானதோர் பண்பாகும். கோபத்தை விழுங்கி மக்களை மன்னிப்பவருக்கு ஆல்லாஹ் தஆலா சுவர்க்கத்தை வாக்களித்திருக்கின்றான்.

நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.” (சூறா ஆலுஇம்ரான்:132, 133)

எங்கள் எல்லோரிலும் மோசமான குணங்கள் இருக்கின்றன. அதிலும் கோபம் எனும் குணம் எங்களில் அதிகமானவர்களிடம் காணப்படுகிறது. கோபம் வந்ததென்றால் உடனே அதை வெளிக்காட்டிவிடுவோம். கோபம் வர பல காரணங்கள் இருக்கலாம். குடும்ப விடயமாக இருக்கலாம். தொழில் ரீதியாக இருக்கலாம். மற்றைய காரணங்களாகவும் இருக்கலாம். அந்த கோபம் நியாயமனாதாகவும் இருக்கலாம். சில வேளை நியாயமில்லாமலும் கோபம் ஏற்படலாம். கோபம் என்பது அல்லாஹ் தஆலா எம்மில் படைத்து வைத்திருக்கும் ஒரு குணம். அது எமது பிறப்போடு எம்மில் குடிகொண்டதோர் குணமாகும். 

இவ்வாறு கோபம் எனும் தீய குணத்தை அழகான முறையில் கையாளுமிடத்தில் அல்லாஹ் தஆலா எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறான். அதாவது வரக்கூடிய கோபத்தை நாம் விழுங்கக்கூடியவராக இருந்தால்  வானம், பூமியளவு விசாலமாக இருக்கும் அந்த சுவனலோகத்திற்கு உரிமையாளராகும் பாக்கியத்தை வைத்திருக்கிறான். 

நாம் வாழும் இடம் 40 அடி பரப்பளவில் இருக்கலாம். அல்லது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கலாம். இது இவ்வாறிருக்க ஒட்டு மொத்த பூமியும் நமக்கு சொந்தமாக இருந்தால் எவ்வளவு பாக்கியமாக இருக்கும். 

சுவர்க்கத்தில் வழங்கப்படும் ஆகக்குறைந்த அந்தஸ்த்து இந்த உலகத்தை விட பத்து மடங்கு பெரிய பிரபாண்டமான இடமாகும். அல்லாஹ் தலா அந்த சுவர்க்கத்தை அவ்வாறு விசாலாமாக படைத்து வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட அந்த சுவனத்தில் எமக்கு ஒரு பாக்கியம் வேண்டுமென்றிருந்தால் கோபத்தை விழுங்க வேண்டும். 

எல்லோருக்கும் கோபம் வரும். ஆனால் அதை வெளிக்காட்டாமல் விழுங்கிக்கொள்பவர் பாக்கியம் பெற்றவராகிறார். கோபம் வருகையில் சம்பந்தப்பட்டவர்களை ஏசத்தோன்றும் அல்லது கடும் வார்த்தைகளால் தாக்க வேண்டும் போலிருக்கும். அந்நேரம் அக்கோபத்தை விழுங்கிக்கொள்ள வேண்டும், அடக்கப்பழகிக்கொள்ள வேண்டும். எமக்கு வந்த கோபம் நியாயமானதாக இருந்தாலும், எம் கோபத்திற்கு காரணமானவர் உண்மையில் தப்பு செய்திருந்தாலும் அல்லாஹ் தஆலா இதே வசனத்தில் கூறிக்காட்டுவதைப்போல் அன்னாரை மன்னித்து விட வேண்டும். 

உதாரணமாக எமக்கு கீழ் வேலை செய்பவர் ஒருவர் நாம் கூறிய படி செய்யாதவிடத்து கோபம் வரும். மனம் அவரை ஏசச்சொல்லும். அந்நேரம் அந்தக்கோபத்தை விழுங்கி அவரை மன்னிக்க வேண்டும். அவ்வேளையில் இறைவன் வாக்களித்த சுவர்க்கம் சிறந்ததா? அல்லது இவரை ஏசி அந்த பாக்கியத்தை இழப்பது சிறந்ததா? என மனக்கண் முன் நிறுத்த வேண்டும். அவருக்கு ஏசினால் எம் மன உணர்வை தீர்த்துவிட்டவர்களாகி விடுவோம். ஆனால் கோபத்தை அடக்கி அவரை மன்னித்தால் சுவர்க்கவாசியாகி விடுவோம். அல்லாஹ் தஆலா அவ்வாறு தான் கோபத்தை விழுங்கி, தப்பு செய்தவரை மன்னிப்பவருக்கு அந்த விசாலமான சுவனபதியை வழங்குவதாக கூறுகிறான். 

சூரியன், சந்திரன் கோடான கோடி நட்சத்திரங்களோடு நமக்கு இந்த வானம் கண்ணுக்கு தெரிகிறது. அதற்கப்பால் ஏழு வானங்கள் இருக்கின்றன.  இவையனத்தையும் ஒன்று சேர பார்க்கும் போது அவற்றையும் விட விசாலமான சுவர்க்கலோகத்தை அல்லாஹ் தஆலா கோபத்தை அடக்கி, மக்களை மன்னித்து, அவனை அஞ்சி நடப்பவர்களுக்கு படைத்து வைத்திருக்கின்றான்.

ஆகவே, சகோதரர்களே!

மனிதனுக்கு கோபம் வருவது சாதாரண விடயம் தான். சிலர் அடிக்கடி எடுத்ததெற்கெல்லாம் கோபப்படுவார்கள். சில பெண்கள் அதிகமாக கோபப்படுவார்கள். பொருத்தமில்லாத வார்த்தைகளை யோசிக்காமால் பேசிவிடுவார்கள். அந்தச்சந்தர்ப்பங்களில் நாவுகளை பேணிக்கொள்ள வேண்டும். வார்த்தை வெளிப்படுவது, முக சுபாவம் வெளிப்படுவது, கையை ஓங்குவது இது அனைத்தும் கோபத்தின் வெளிப்பாடுகளாகும். ஆகவே கோபத்தை விழுங்குவதென்றால் இவையனைத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ள வெண்டும். அந்த சுவனபதிகளை கண் முன் நிறுத்தி இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆகவே கோபத்தை விழுங்குவது சுவர்க்கவாசிகளின் பண்பு என மனதில் உள்வாங்கி அதை அடக்குவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.

கோபத்டை விழுங்குவோம், அடக்குவோம், தப்பு செய்தவர்களை மன்னிப்போம், சுவனலோகத்தை பரிசாகப்பெறுவோம். 

அதிகமாக கோபப்படும் எம்மோடு இருக்கும் சகோதரர்களுக்கும் பெண்களுக்கும் இந்த செய்தியை எத்தி வைப்போம். அவர்களுக்கும் சுவனத்தை காட்டி அவர்களது குணாதிசயங்ளை மாற்றுவோம்.

அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் இந்த நல்ல செய்தியின் பிரகாரம் நடக்க நல்லருள்பாலிப்பானாக.  

மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி