2023-12-03 485

தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா?

தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை மறைத்தால் போதுமாகுமா? எனும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தொழுகையில் நாம் அவ்றத்தை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது நாம் அறிந்த விடயம். நபி(ஸல்) தொழுகையில் ஆண்களின் ஆடை பற்றி குறிப்பிடும் போது பொதுவாக ஒரு ஆடையணிந்து தொழுவதை தடை செய்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு ஆடையணிந்து தொழுவதாயின் அதில் பேண வேண்டிய முறையை கூறுகிறார்கள்.  

அபூஹுறைரா(றழி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது-

உங்களில் ஒருவர் தம் இரு தோள்களையும் மறைக்காமல் ஓர் ஆடையை அணிந்து தொழவேண்டாம்.(ஸஹீஹுல் புகாரி 359) 

உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அறிவித்தார்கள்: உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள். (ஸஹீஹுல் புஹா ரி 355)

ஆகவே சகோதரர்களே! அடிப்படையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரையான பகுதியை மாத்திரம் மறைத்து வெறும் வேட்டி/சாரண் அணிந்து தொழ முடியாது. அவர்கள் தம் தொழுகையில் கட்டாயம் தோள்புயங்களை மறைத்தாக வேண்டும்.

 உதாரணமாக, எங்கள் வீடுகளில் விசாலமான  விரிப்புக்கள் இருக்கலாம். அதையணிந்து தொழுவதாயின் விரிப்பினை எமக்கு பின்னால் விரித்து பிடிக்க வேண்டும். பின்னர் அதன்  இரு ஓரங்களையும் எமக்கு முன்புறமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதன் வலது ஓரத்தை இடது தோள்புயம் மீதும், இடது ஓரத்தை வலது தோள்புயம் மீதும் மாற்றி போட்டு, இரு ஓரங்களையும் சேர்த்து கழுத்துக்கு பின்னால் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும்.

ஷாபிஃ மத்ஹப்பை சார்ந்தவர்கள் தொழுகையில் ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரையான அவ்றத்தை மறைப்பது போதுமானதாகும் எனக்கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் தோற்புயங்களை மறைக்கும் படி தெளிவாகவே ஏவியிருப்பதை ஹதீஸ்களில் காணலாம். ஆகவே, ஆண்கள் தம் தொழுகையில் கட்டாயம் தோள்புயங்களை மறைத்தாக வேண்டும்.

இந்த அடிப்படையில் தொழுகையில் நாம் எமது ஆடையை ஆக்கிக்கொள்வோம்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)