குழந்தைப்பேறை தாமதிப்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
குழந்தைப்பேறை தாமதிப்பதற்காக குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
ஒருவர் முதலாவது பிள்ளையை பெற்றதன் பின்னர் அடுத்த பிள்ளையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் மாத்திரைகள், ஊசி போன்ற மருத்துவ முறைகளைக்கொண்டு குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளலாமா? என பரவலாக கேட்கப்படுகிறது.
இது ஒரு முக்கியமான கேள்வியாக இருப்பதால் இதில் பல விடயங்களை உள்ளடக்கி பேச வேண்டியுள்ளது.
சகோதரர்களே! இன்றளவில் எம் சமூகத்தில் கணவன்-மனைவியினர் முக்கியமாக நான்கு காரணங்களுக்காக குடும்பக்கட்டுப்பாடு செய்கின்றனர். இதில் மூன்று காரணங்களுக்காக குடும்பக்கட்டுப்பாடு செய்வது தெளிவான பிழையாகும். அது மார்க்க ரீதியாக அனுமதியாக மாட்டாது..
முதலாவது-
-----------------------------
போதிய வருமானமின்மையால் குழந்தைப்பேறை பிற்போடுகிறனர்.
ஜாஹிலிய்ய காலத்தில் குழந்தை பிறந்ததும் வறுமையைப்பயந்து கொலை செய்து விடுவார்கள். அதிகமான பிள்ளைகளைப்பெற்று விட்டோமென்றால் அவையனைத்தினதும் உணவு மற்றும் ஏனைய தேவைகளை(ரிஸ்க்) நாம் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த முடிவை எடுக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ் தஆலா அவர்களுக்கு பின்வருமாறு கூறினான்.
وَلَا تَقْتُلُوْا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ
வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். (அன்ஆம்:151)
وَلَا تَقْتُلُوْا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பாவமாகும். (இஸ்ரா:31)
ஆகவே, வறுமையைப்பயந்து குடும்பக்கட்டுப்பாடு செய்வது இந்த வகையைச்சார்ந்ததாக அமையும். பிள்ளைகளில் எண்ணிக்கை பெருகினால் அவர்களது ஜீவனோபாயத்திற்கான வழியை எவ்வாறு அமைத்துக்கொள்வது என பயந்து இந்தக்கட்டுப்பாட்டை செய்து கொள்கிறோம்.
இங்கு மனிதன் அல்லாஹ் தஆலா தன் அடியார்களுக்காக பொறுப்பெடுத்த ஒரு விடயத்தை தன் மீது முழு பொறுப்பாக்கி அதை சுமையாக ஆக்கிக்கொள்கிறான். தான் அறியாமலேயே தன் பிள்ளைகளுக்கு ரிஸ்க் அளிப்பவன் தான் ஒருவனே என்றளவுக்கு அவனது சிந்தனை சென்று விடுகிறது. இதற்காகத்தான் அல்லாஹ் தஆலா “உங்களுக்கும், அவர்களுக்கும் நாங்களே ரிஸ்க் அளிக்கிறோம்” என்பதைச்சொல்கிறான்.
சகோதரர்களே! இன்று எமது சமூகத்தில் சில குடும்பங்களைப்பார்க்கிறோம்.முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என பிள்ளைகள் இருப்பார்கள். அதில் முதல் மூன்று பிள்ளைகளும் ஆண்களாக இருந்தாலும் ஊக்கமில்லாமல் இருப்பார்கள். நான்காவது பிள்ளை வளர்ந்து முழுக்குடும்பத்தையும் பொறுப்பெடுத்து நடாத்திச்செல்வதைப்பார்க்கிறோம். ஆகவே, பொருளாதாரத்தைப்பயந்து சந்ததியை இல்லாமலாக்குவது பிழையான காரியமாகும்.
ஜாஹிலிய்ய மக்கள் எந்த காரணத்திற்காக குழந்தையை பெற்ற பின் கொலை செய்தார்களோ அதே காரணத்திற்காக நாங்கள் பெறாமல் தவிர்ந்து கொள்கிறோம். அல்லது வயிற்றில் உருவான கருவை கலைக்கிறோம். இரு நிலைகளும் ஒரே நோக்கத்திற்காகத்தான் செய்யப்படுகிறது.
சீதனக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியா, இலங்கையின் சில பிரதேசங்களில் பெண்பிள்ளையை பெற்று விட்டால் காணி வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், கலியாணத்திற்கு சொத்து கொடுக்க வேண்டும். ஆகவே, இந்த சுமையை சுமக்க முடியாத காரணத்திற்காக ஓரிரு பெண்பிள்ளைகள் பிறந்ததும் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். இரண்டு பிள்ளைகளோடு தம் சந்ததியை நிறுத்திக்கொள்கின்றனர்.
இது போன்ற காரியங்கள் பாவமாகும். எம் பிள்ளைகளின் ரிஸ்க்’க்கான பொறுப்பாளிகள் நாம் மாத்திரம் என்ற நோக்கோடு இவ்வாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது தவறாகும்.
இரண்டாவது-
-----------------------------
சமுதாயம் கேவலமாகப் பார்க்கும் என சில தம்பதியினர் குழந்தைப்பேறை பிற்போடுகின்றனர்.
அதாவது பெரும்பாலான தம்பதியினர் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப்பெற்ற பின்னர் குடும்பக்கட்டுப்பாடு செய்து விடுவார்கள். காரணம், வருடா வருடம் அல்லது இரண்டு வருடத்திற்கொரு குழந்தை பெறுவது அவமானம். சமுதாயத்தினர் ஏளனமாகப்பார்ப்பார்கள். நான்கு, ஐந்து, ஆறு குழந்தைகள் இருப்பதை இழிவுபடுத்தி பேசுவார்கள்.
அல்லது சில பெண்களுக்கு 16, 17, 18 வயதில் திருமணமாகி விடும். இவ்வாறு திருமணமானவர்க்ள் 20 வயதாக முன்னரே இந்த பருவத்தில் குழந்தைப்பெறுவதா? சமுதாயத்தினர் என்ன சொல்லுவார்கள்? சுற்றத்தார்கள் எம்மை இழிவாகப்பார்ப்பார்கள். ஓரிரண்டு வருடங்கள் தாமதமாகி பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி தாமதமாக குழந்தைப்பெறுவார்கள்.
சகோதரர்களே! ஒரு பெண் 16 வயதில் திருமணம் செய்தாலும், அவள் ஒரு பிள்ளையை சுமக்கும் தகுதிக்கு ஆளாகி விட்டாள். அல்லாஹ் தஆலா பெண்களை, அவர்கள் 13,14 வயதில் பருவவயதை அடைந்ததும் அவர்களின் உடல் அமைப்பை அதற்கேற்றாற் போல் ஆக்கியிருக்கிறான்.
ஆனால் நம் சமூகத்தினரோ 17 வயது பெண்பிள்ளை திருமணம் செய்து கருவுற்று விட்டால் இந்த வயதில் குழந்தை தேவை தானா? 3,4 வருடங்கள்கழித்து குழந்தை பெறலாமே? என்கின்றனர். இது போன்ற காரணங்களுக்காக குழந்தைப்பேறை பிற்போடுவதும் ஜாஹிலிய்ய சிந்தனை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் அதிகமாக பெறுவது பரகத் ஆகும். பிள்ளைகளை அதிகமாக பெறுவதை இஸ்லாம் வரவேற்கிறது. இதை அருவருப்பாகவும் இழிவாகவும் கருதி குடும்பக்கட்டுப்பாடு செய்வதும் கூடாத காரியமாகும்.
மூன்றாவது-
-------------------------
இன்று மேற்கத்தயவர்களைப்பொறுத்தவரையில் நாமிருவர் நமக்கொருவர் அல்லது நாமிருவர் நமக்கொருவர் போன்ற நாமங்களை வைத்து பிள்ளைகளை பெறுவதை குறைத்துக்கொள்கின்றனர்.
இது குறிப்பாக முஸ்லிம்களின் சந்ததி பெருகுவதை கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய சதி எனவும் கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக்கொண்டு இன்றளவில் சமூகத்தில் பல வழிகாட்டல்கள், அறிவுறுத்தல்கள் போன்றன பெருகிவருகின்றன. எதுவரையெனில், இன்று சில மருத்துவர்கள் கருவுற்ற சில பெண்களை கருவை கலைக்குமாறும் அல்லது குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளுமாறும் பல ஆலோசணைகளை வழங்குகின்றனர்.
ஆகவே, இஸ்லாம் கூறுவது படி எம் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ளாமல் இந்த நவீன வழிகாட்டல்களுக்கு அடிபணிந்து அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தவறாகும்.
அந்நியர்களின் சிந்தனைகள், தந்திரங்கள் முஸ்லிம்களுக்குள் ஆக்கிரமித்து அதன் விளைவில் இவ்வாறான குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வதற்கு நாம் எந்தவகையிலும் வழிவகை செய்யக்கூடாது.
நான்காவது-
---------------------------
உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஆரோக்கிய நிலைமைகள் மற்றும் வேலைப்பளு போன்ற அசெளகரியங்களை கருத்திற்கொண்டு குழந்தைபேறை பிற்போடுகின்றனர்.
இதற்கு மார்க்க ரீதியாக தடை கிடையாது. அதாவது ஒரு தாய் முதலாவது குழந்தையை பெறுகிறாள். முதல் குழந்தை பெற்று 35, 40 நாட்களின் பிறகு குழந்தை மீண்டும் உருவாகும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவ்வாறு இரண்டாவது குழந்தை உருவாகி விட்டால் தாய்க்கு இரு குழந்தைகளையும் பராமரிப்பது சங்கடமாகி விடும். ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்க வேண்டும். மற்ற குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் . அது அவளுக்கு ஒரு அசெளகரியமாகி விடும். ஆகவே, தாயின் உடல் ஆரோக்கியம் மற்றும் வேலைப்பளு போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் குழந்தை ஒரு நிலைக்கு வரும் வரை ஒரு தம்பதியினர் குழந்தைப்பேறை தாமதிப்பதில் குற்றமில்லை.
உண்மையாக தான் இன்னுமின்னும் குழந்தைகளை பெற வேண்டும் என்ற இஸ்லாமிய கொள்கையை பின்பற்றும் தாய் வேறெந்த நோக்கமுமில்லாமல் தன் அசெளகரியங்களுக்காக மாத்திரம் குழந்தை பேறை பிற்போடுகிறாளென்றால் அதில் தவறு கிடையாது.
குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கு ஆகுமான வழிகாட்டல்கள்
------------------------------
எந்தெந்த காரணங்களுக்காக குடும்பக்கட்டுப்பாடு செய்யக்கூடாது, எந்த சூழ்நிலையில் அவ்வாறு செய்யலாம் என்பதை மேலே விளக்கியிருந்தோம். அந்தவகையில் இன்றளவில் குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்காக பொதுவாக கருகட்டாமலிருப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுப்பர்.
சகோதரர்களே! கருகட்டாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைப்பெறுத்தவரையில் பெண்னின் உடலுக்கு கெடுதி இல்லாத முறையிலும், ஹராமான முறைகளை கையாலாமலும் அமைத்துக்கொள்வது அவசியமாகும்.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் “அஸ்ல்” என்ற நடைமுறை இருந்தது. அதாவது ஆணின் விந்து பெண்னின் முட்டையோடு சேராமல் இருப்பதற்காக ஆணின் விந்து வெளிவரும் தருணத்தில் ஆணுறுப்பை வெளியே எடுத்து விடும் நடைமுறையாகும்.
ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல்(புணர்ச்சி இடைமுறிப்பு) செய்வோராக இருந்தோம். அது நபி(ஸல்) அவர்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை” [ஸஹீஹ் முஸ்லிம்1440]
குடும்பக்கட்கட்டுப்பாட்டின் போது ஹராமான முறைகளை கையாளுவது என்பது என்னவென்றால்-
ஒரு பெண் நிர்ப்பந்த நிலமைகளல்லாத நிலைமைகளில் ஆண் வைத்தியர்களிடம் தம் அவற்த்தை வெளிக்காட்டுவது தவறாகும். சில பெண்கள் ஆண் வைத்தியர்களிடம் சென்று தன் தன் மறைவிடத்தில் கர்ப்பத்தடை வழிமுறைகளில் ஏதாவது ஒரு முறையை செய்து கொள்கின்றனர். குடும்பக்கட்டுப்பாடு என்பது இஸ்லாத்தில் கட்டாயக்கடமையான விடயமொன்றும் கிடையாது. ஆகவே இது போன்ற காரணங்களுக்காக ஆண் வைத்தியர்களிடம் சென்று அந்தரங்கத்தை வெளிப்படுத்துவது அநாவசியமாகும் என்பதைப்புரிந்து நடக்க வேண்டும். ஆகவே, இது போன்ற நடைமுறைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
அடுத்து வேறு சில தம்பதியினர் 2 அல்லது 3 பிள்ளைகளின் பின்னர் நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்கின்றனர். இதுவும் ஒருபோதும் அனுமதியாகாது. இதுவும் ஹராமகும். இயற்கையாக 45-50 வயதின் பின்னர் பெண்களுக்கு கரு உருவாகும் தன்மை இல்லாமலாகும் வரை நாம் இதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. அது அல்லாஹ்வின் படைப்பின் அமைப்பில் கைவைத்த பாவத்தைச்சாரும்.
தாயின் உயிருக்கு ஆபத்து போன்ற நிலமைகளைக்கருத்திற்கொண்டு நம்பிக்கையான மருத்துவர் ஒருவர் ஆலோசணை வழங்கினாலே தவிர இந்த நிரந்தர கட்டுப்பாடு அனுமதியாகாது.
சகோதரர்களே! உலக காரணிகளைக் கருத்திற்கொண்டு இது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. எத்தனை எத்தனையோ திடீர் விபத்துக்களில் பெற்றோர்கள் தமது 2 அல்லது 3 குழந்தைகளைகளையும் இழக்கிறார்கள். தாயும் தந்தையும் மாத்திரம் இறுதியில் எஞ்சுகிறார்கள். அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக.
முடிவாக-
அல்லாஹ் தஆலா பெண்களுக்கு 13,14 வயது தொடக்கம் 45-50 வாயது வரை குழந்தையை பெற்றெடுக்கும் இயற்கை அமைப்பை வைத்திருக்கிறான். அதற்காகவே,
முன்சென்ற காலங்களில் நம் மூதாதையினர் ஒரு தாய் 16 பிள்ளைகளை பெற வேண்டும் என்றனர். அவ்வாறே பெற்றார்கள்; வளர்த்தார்கள்.
குழந்தைகள் என்பன அல்லாஹ் தஆலா எமக்கு அளிக்கும் அருள். இஸ்லாம் பிள்ளைகளை அதிகப்படுத்துவதற்காக வழிகாட்டுகிறது. அவர்கள் நாம் மறுமைக்காக சேர்க்கும் சொத்துக்கள். நாம் மரணித்தால் எமக்கு கப்ரிலும் பயனளிக்கும் பெறுமதியான செல்வம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும்.நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, இறைவனிடம் பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தை. அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) (முஸ்லிம் 3084)
ஆகவே, பிள்ளைகளை 1 அல்லது 2 என நிறுத்திக்கொள்ளாமல் தன் தாய்க்காக, தந்தைக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகளை பெற்றெடுப்போம். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்போம். ரிஸ்க் அளிப்பவன் அவன். உண்மமைக்கு உண்மையாக அல்லாஹ்வைப்பயந்து நடப்பவருக்கு அல்லாஹ் கஷ்டத்திலிருந்து விடிவைக்கொடுப்பான்.
وَمَنْ يَّـتَّـقِ اللّهَ يَجْعَلْ لَّه مَخْرَجًا
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; (சூறா தலாக்:2,3)
இதை முறையாக நம்புவன் தான் முஃமின் எனப்படுகிறான். எம் சமுதாயத்திலிருக்கும் பிழையான சித்தார்த்தங்களை தவிர்ப்போம்.
அல்லாஹ் தஆலா இவையனைத்தையும் புரிந்து நடக்க அருள்பாலிப்பானாக.
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)
அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)