2023-10-20 538

கிப்லாவை நோக்கி கழிப்பறை அமைத்தல் அனுமதியானதா?

கிப்லாவை நோக்கி கழிப்பறை அமைத்தல் அனுமதியானதா?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

எங்கள் வீட்டில் கழிப்பறையானது கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டிருக்கிறது. கிப்லாவை முன்னோக்கி மலசலம் கழிப்பது ஆகுமானதா என்பது அநேகமானவர்கள் மத்தியில் எழும் ஒரு கேள்வி ஆகும். 

இதற்கான  பதிலை பார்ப்பதென்றால் நபி(ஸல்) அவர்கள் எமக்கு கூறியுள்ள பல செய்திகளை பார்க்கவேண்டியுள்ளது. அவற்றில் சில செய்திகள் கிப்லாவை முன்னோக்குவது அனுமதியாகாது என்பதையும், சிலசெய்திகள் ஆகுமாகும் என்பதையும்  உணர்த்தி நிற்கின்றன. இவை இரண்டு செய்திகளையும் வைத்து இதற்கான தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதைப்பார்ப்போம்.

கிப்லாவை முன்னோக்கி மலசலம் கழிப்பது ஆகுமாகாது என்பதை உணர்த்தும் செய்திகள்.

1) அபூஅய்யூப் அல்அன்ஸாரி(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது; கிப்லாவை முதுகுக்குப் பின்னாலும் ஆக்கவும் கூடாது. கிழக்கையோ மேற்கையோ நோக்கி அமருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 144)

இதில் கிழக்கும் மேற்கும் மதீனாவை மையமாக வைத்து கூறப்பட்டுள்ளது. ஏனெனில் மதீனாவாசிகளுக்கு கிப்லா தெற்கு நோக்கி அமைகிறது .

2)அபூஅய்யூப் அல்அன்ஸாரி(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்காதீர்கள். அதைப் பின்னோக்கவும் செய்யாதீர்கள். கிழக்கு மேற்காக நோக்குங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறியிருந்தார்கள். நாங்கள் சிரியாவுக்கு வந்த போது அங்கே கிப்லாவை நோக்கி கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். நாங்களோ சற்றே சாய்வாக அமர்ந்து இயற்கை தேவையை முடித்து விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொண்டோம். (புஹா ரி 394)

 

கிப்லாவை முன்னோக்கி மலசலம் கழிப்பது ஆகுமாகும் என்பதை உணர்த்தும் செய்திகள்.    

1.இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் (எனது சகோதரியும் நபிகளாரின் மனைவியுமான) ஹஃப்ஸா (ரழி) அவர்களின் வீட்டின் மேல் ஏறினேன். நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முதுகுக்குப் பின்னால் ஆக்கி சிரியாவை முன்னோக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். (புஹாரி 148)

2.ஜாபிர்(றழி)) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள் நாங்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர்கழிப்பதை தடை செய்தார்கள். அவர் மரணிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கிப்லாவை முன்னோக்கி சிறிநீர்கழிப்பதைப்பார்த்தேன்.  (சுனன் அபீதாவூத் 13)

குறிப்பு- சுனன் அபீ தாவூதில் பதிவாகியிருக்கும் ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியைப்பொறுத்தவரையில் சில அறிஞர்கள் அதை விமர்சனம் செய்கின்றனர். என்றாலும் இந்த ஹதீஸில் இடம்பெறும் விமர்சனத்திற்குரிய அறிவிப்பாளர் பற்றி சற்று ஆழமாக நாம் பார்த்த போது அவருடைய ஹதீஸ்களை ஹஸன் எனும் தரத்தில் வைக்கலாம் என முடிவு செய்தோம். எனவே இந்த ஹதீஸனது ஏற்றுக்கொள்ளத்தக்க ஹஸனான ஹதீஸாகவே நாங்கள் கருதுகிறோம். இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என்று பல அறிஞர்கள் கூறியுமிருக்கின்றனர்.

 

ஹதீஸ்களுக்கான விளக்கம்

மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது பற்றிய ஹதீஸ்களை பார்த்தோம். அவற்றில் நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி அல்லது பின்னோக்கி மலசலம் கழிப்பதை பொதுவாக தடை செய்துள்ளதைக்காணலாம். இது நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்குச்சொன்ன ஒரு அம்சம். அது ஒரு பொதுவான விடயம். 

ஆனால், நபி(ஸல்) சில சந்தர்ப்பங்களில் கிப்லாவை முன்னோக்கி அல்லது பின்னோக்கி மலசலம் கழித்தார்கள் எனவும் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. இங்கு, நபி(ஸல்) அவர்களது சொல்லானது அவரது செயலுக்கு முறண்படும் விதத்தில் அமைந்துள்ளது என கூற முடியாது. மாறாக, இந்த விடயத்தில் நபி(ஸல்) அவர்களது சொல் மற்றும் செயல் இரண்டையும் ஒருங்கிணைத்து முறையான விளக்கம் கொடுக்கப்படல் வேண்டும். 

அந்த அடிப்படையில், மேற்படி ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து கிப்லாவை முன்னோக்கி மலசலம் கழிப்பது குறித்து அறிஞர்கள் பற்பல தீர்ப்புக்களையும் விளக்கங்களையும் கூறியிருக்கிறார்கள். 

 

அந்த தீர்ப்புக்கள் மூன்று விதமாக அமைகின்றன.

முதலாவது-

மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது நபி(ஸல்) அவர்களுக்குரிய தனிப்பட்ட காரியமாகும். 

அதாவது, நபி(ஸல்) அவர்கள் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதை பொதுவாக தடை செய்தார்கள். அதை அடிப்படையாக வைத்து அபூ அய்யூப் அன்ஸாரி(றழி) அவர்கள் சிரியாவில் நடந்து கொண்டார்கள். அவர்களது சக்திக்கப்பாற்பட்டு நேர்ந்த விடயத்திற்காக பிறகு இஸ்திஃபார் செய்தார்கள். ஆகவே, நபி(ஸல்) அவர்களது உம்மத்திற்கான வழிகாட்டல் கிப்லாவை முன்னோக்குவதையும், பின்னோக்குவதையும் தவிர்ப்பதாகும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி, பின்னோக்கி தேவையை நிறைவு செய்தது அவருக்குரிய தனிப்பட்ட காரியமாக இருக்கலாம். அது நபி(ஸல்) அவர்களுக்கு விதிவிலக்காக இருக்கலாம். அதாவது நாம் கிப்லாவை முன்னோக்குவதோ பின்னோக்குவதோ ஆகுமான காரியமல்ல. அது நபிகளார்(ஸல்) அவர்களுக்கு தனித்துவமான காரியமாகும்.

இரண்டாவது-

நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்குவதற்கும் பின்னோக்குவதற்கும் விதித்திருக்கும் தடையானது திறந்தவெளிகளில் மலசலம் கழிக்கும் போது பேணப்பட வேண்டியதாகும். 

அதாவது, வயல் வெளிகளில், வெட்டவெளிகளில் எந்த ஒரு மறைப்பும் இல்லாத வெளிகளில் தேவையை நிறைவேற்றும் போது இதை கருத்திற்கொள்ள வேண்டும். ஆனால், வீட்டினுள் நான்கு சுவரிற்குள் அல்லது மரம், வாகனம் போன்றவற்றுக்கு மறைவாக அமைந்து தேவையை நிறைவேற்றுவதாயின் கிப்லாவை முன்னோக்குவதும், பின்னோக்குவதையும் கருத்திற்கொள்ளத்தேவையில்லை. ஒரு தடுப்பொன்றுக்கு அல்லது கட்டுமானத்திற்கு  மறைவாக மலசலம் கழிக்கும் போது இது குற்றமாகாது. ஏனெனில், இப்னு உமர்(ரழி) அவர்கள் அவதனித்தது கூரைக்கு மேலே இருந்து வீட்டினுள் நிகழ்ந்ததாகும்.இதே அடிப்படையில் தான் ஜாபிர்(றழி) அவர்களது செய்தியும் அமைய வேண்டும். ஏனெனில் நபி(ஸல்) அவர்களது செயல் தன் சொல்லிற்கு மாற்றமாக அமையாது.

நாம் மேற்கூறிய ஹதீஸ்களில் இப்னு உமர்(றழி) அவர்கள்து செய்தியில் கிப்லாவை பின்னோக்கி என்றும், ஜாபிர்(றழி) அவர்களது செய்தியில் கிப்லாவை முன்னோக்கி என்றும் இடம்பெறுவதைக்காணலாம். இவை இரண்டும் நபி(ஸல்) அவர்களது நடவடிக்கைகளாகும். அதுமட்டுமல்லாது, ஜாபிர்((றழி) அவர்களது செய்தி நபி(ஸல்) அவர்கள் மரணிக்க ஒருவருடத்திற்கு முன்னதாக இடம்பெற்ற நிகழ்வாகும்.

பொதுவாக அந்த காலங்களில் எல்லா வீடுகளிலும் கழிப்பறைகள் இருந்ததில்லை. தம் இயற்கை தேவையை நிறைவேற்ற பெண்கள் உட்பட அனைவரும் தொலைதூரம் செல்வார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம். ஆகவே நபி(ஸல்) அவர்கள் இது போன்ற சூழ்நிலைகளை மையமாக வைத்து தான் தடை விதித்திருப்பார்கள். ஆகவே, கட்டடங்களுக்குட்பட்ட கழிப்பறைகளில் இந்தத்தடை கிடையாது எனக்கூறலாம்.

மூன்றாவது-

ஜாபிர்(றழி) அவர்களது செய்தியை ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரமாக எடுக்காத அறிஞர்கள் கிப்லாவை பின்னோக்கி மலசலம் கழிக்கலாம். ஆனால், முன்னோக்கி கழிக்கக்கூடாது எனும் கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்த கருத்துக்கள் அனைத்தும் ஹதீஸ்களை மையமாக வைத்து சொல்லப்பட்ட கருத்துக்களாகும். 

முடிவாகக்கூறுவதாயின்-

மலசலம் கழிக்கும் போது கிப்லாவை, முன்னோக்குவதும் பின்னோக்குவதும் நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு விதித்த பொதுவான தடையாகும். நாம் இதனோடு சம்பந்தப்பட்ட எமது விவாகாரங்களை சர்ச்சைக்குட்படாமல் அமைத்துக்கொள்வதுவே பேணுதலாக இருக்கும் .

இனிவரும் காலங்களில் வீட்டினுள் கழிவறையை அமைக்கப்போகும் சகோதரர்கள் கிப்லாவை முன்னோக்கி அல்லது பின்னோக்கி அமைப்பதைத்தவிர்த்து கொள்ளுங்கள். இது பேணுதலான காரியமாக அமையும். 

அநேக அறிஞர்களின் கருத்துப்படி , கிப்லாவை நோக்கி கட்டடத்தினுள் அமையப்பெற்றிருக்கும் கழிவறை குற்றமில்லை என கூறினாலும் 

ஏற்கனவே, அமைத்து விட்ட சகோதரர்கள் அபூ அய்யூப் அல்அன்ஸாரி(றழி) அவர்கள் செய்ததைப் போன்று கிப்லாவை விட்டும் சற்று சாய்வாக திரும்பி தமது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ளலாம். 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

எனவே, முடியுமான அளவிற்கு நாம் பேணுதலான அமைப்பை தேர்ந்தெடுத்துக்கொள்வோம். 

அல்லாஹ் தஆலா நபி(ஸல்) அவர்களது வழிகாட்டலை தெளிவான ஆதரங்களோடு பின்பற்ற வழிவகுப்பானாக. சந்தேகத்திற்கப்ப்பால் நபி(ஸல்) அவர்களை உண்மைக்கு உண்மையாக உளத்தூய்மையோடு சொல்லிலும் செயலிலும் உளப்பூர்வமாக பின்பற்றுவோம். மறுமையில் ஈடேற்றம் பெறுவோம்.

 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)