2023-06-20 513

துல்ஹஜ் முதல் பத்து நாட்களுக்கிருக்கிருக்கும் சிறப்புகளும் அதில் நல் அமல்களுக்கான வழிகாட்டலும்

துல்ஹஜ் முதல் பத்து நாட்களுக்கிருக்கிருக்கும் சிறப்புகளும் அதில் நல் அமல்களுக்கான வழிகாட்டலும்

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் சிறப்பானதே. அதில் அமல் செய்வதும் மிகச்சிறப்பானது. அது பற்றி ஆதாரமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. 

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி 969)

அதாவது அமல் செய்வதற்கு அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நாட்களாக துல்ஹஜ் பத்து நாட்களை விட வேறு எந்த நாட்களும் இல்லை. எனவே இந்த பத்து நாட்களிலும் அமல் செய்வது மிக சிறப்பானதாகும். 

எந்தளவுக்கென்றால்-

நபி(ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்கள் ஜிஹாதை விட சிறந்ததா எனக்கேட்க, நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரையும் பொருளையும் எடுத்துச்சென்று திரும்பாமல் மரணிப்பவரைத்தவிர எனக்கூறினார்கள்.

அதாவது ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய சென்று ஷஹீத் ஆகி விட்டால் அவருக்கு அல்லாஹ்விடத்தில் மிகச்சிறப்பு இருக்கிறது. அதற்கு வேறெதுவும் ஈடாகாது. இது போக, அமல் செய்வதற்கு அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்புப்படுத்தப்படுத்தப்பட்ட நாட்கள் இருக்குமாயின் அவை இந்த துல்ஹஜ் முதல் பத்து நாட்களுமாகும். 

சிறப்புப்பொருந்திய இந்த பத்து நாட்களில் செய்யப்படக்கூடிய அமல்கள் என்ன?

துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு சம்பந்தமாக இடம்பெறும் மேற்கூறிய ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் எந்த அமலையும் குறித்துக்காட்டி சிறப்பாக்கிச்சொல்லவில்லை. தொழுகை, திக்ர், அல்குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல், தொழுகையில் முன் பின் சுன்னத்துக்கள் போன்ற நபி(ஸல்) அவர்கள் எதையெல்லாம் எங்களுக்கு நல்லமல்களாக காட்டித்தந்தார்களோ அவை எல்லாவற்றையும் செய்யலாம். 

அல்குர்ஆன் ஓதுவது நல்ல காரியம். ஏனைய நாட்களில் அல்குர்ஆனுக்கு நேரம் ஒதுக்காமல் பராமுகமாக இருந்திருப்போம். இந்த காலப்பகுதியில் அதிகமாக ஓதிக்கொள்வோம்.  தஹஜ்ஜுத் எனும் வித்ர் தொழுகை அனைத்தும் நல்லமல்கள். ஏனைய நாட்களில் அதைத்தொழாமல் இருந்திருப்போம். அதை இந்நாட்களில் தொழுது கொள்வோம். அதே போல, இந்நாட்களில் சுன்னத்தான நோன்புகளையும் நோற்கலாம். (துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்பது சம்பந்தமாக கீழே விளக்கியுள்ளோம்)  

பர்ளான தொழுகையின் முன் பின் சுன்னத்களை தொழாமல் இருந்திருப்போம். தொழ ஆசைப்படுவோம். ஆனால் பொடுபோக்காக இருந்திருப்போம். இந்நாட்களில் அதை பேணுதலாக தொழ உற்சாகம் எடுத்துக்கொள்வோம்.  அல்லாஹ்வை திக்ர் செய்வது நல்ல ஒரு இபாதத். இந்த சிறப்புப்படுத்தப்பட்ட நாட்களில் அதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்வோம்.

தர்மம் என்பதும் ஒரு மாபெரும் இபாதத். ஏனைய காலங்களில் தர்மம் செய்திருக்கலாம். ஆனால், இந்த காலங்களில் தர்மம் செய்வததை அல்லாஹ் விரும்புகிறான். இந்த அமைப்பில் இம்மாதத்தின் இந்நாட்களின் சிறப்பை மனதில் நிறுத்தி எம் அமல்களை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களில் தொடராக நோன்பு நோற்பதற்கு மகிமை உண்டா?

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறப்புக்குரியது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இந்த அமல்களில் ஒன்றாக ஒன்பது நாட்கள் தொடராக நோன்பு பிடிக்கும் ஒரு வழக்கை பார்க்கிறோம். சிலர் ஒவ்வொரு வருடமும் விடுபடாமல் இந்த ஒன்பது நோன்புகளையும் விஷேசமாக பிடித்து வருகிறார்கள். 

இவ்வாறு நோற்கப்படும் நோன்பிற்கு ஏதும் சிறப்புக்கள் இருக்கின்றதா என நோக்கினோமெனில்- அந்த ஒன்பது நாட்களிலும் தொடர்ந்து நோன்பு நோற்பதைப்பற்றி ஒரு செய்தி பின்வருமாறு  இடம்பெறுகிறது. 

ஹஃப்ஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;

ஆஷூரா நோன்பு, (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஃபஜர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவது ஆகிய இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை. (நஸாயீ 2416)

இந்த செய்தியானது ஒரு சில வேறுபாடுகளுடன் பல அறிவிப்புக்களாக  இடம்பெறுகிறது. ஆனால் இந்த செய்தியைப்பொறுத்தவரையில், ஆதாரபூர்வமானதாக இல்லை. அது பலவீனமான செய்தியாகும்.  அதுமட்டுமல்லாமல், நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் முதல் பத்து நாட்களும் நோன்பு நோற்கவே இல்லை என இதற்கு மாற்றமான ஓர் செய்தி ஆதாரபூர்வமாக முஸ்லிம் கிரந்தத்தில் இடம்பெறுவதைக்காணலாம்.ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்; 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை. (முஸ்லிம் 2186)

ஆகவே, நபி(ஸல்) அவர்கள்  இந்த ஒன்பது நாட்களிலும் தொடராக நோன்பு நோன்பு நோற்கவில்லை. அவ்வாறு நோற்றதாக  இடம்பெறும் செய்தி பலவீனமான செய்தியாகும். எனவே துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களில் நோற்கப்படும் தொடர் நோன்பிற்கு எவ்வித தனிச்சிறப்பும் கிடையாது.

துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களில் சுன்னத்தான நோன்பு நோற்பதாயின் அதற்குரிய வழிகாட்டல் எவ்வாறு அமையும்?

துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு சம்பந்தமாக இடம்பெறும் நாம் ஆரம்பத்தில் கூறிய ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் பிரத்தியேக சிறப்புப்பொருந்திய வணக்கங்க எதையும் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. மாறாக பொதுவாக அனைத்து அமல்களையும் தான் அந்த ஹதீஸின் வாசகம் உள்ளடக்குகிறது.

அந்த அடிப்படையில், அதில் சுன்னத்தான நோன்பும் உள்ளடங்கும். 

ஆனால், துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களும் தொடராக விடாமல் நோன்பு பிடிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை என்பதை மேலே விளக்கிக்கூறியிருந்தோம். அவ்வாறெனின், அந்த நாட்களில் சுன்னத்தான நோன்புகளை எந்த அமைப்பில் நோற்றுக்கொள்வது  என்பதை பார்ப்போம். 

சாதாரண மாதங்களில் திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு பிடிப்பது சுன்னத்தான காரியமாகும். இதற்கு நபி(ஸல்) அவர்களிடம் வழிகாட்டல் இருக்கிறது.

அபூகதாதா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;

திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு இறைச் செய்தி அருளப்பட்டது என்று விடையளித்தார்கள். (முஸ்லிம் 1978)

ஆக, துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்களில் வரும் திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு நோற்கலாம், அது ஒரு நல்ல காரியமாகவே அமையும். அல்லது தாவூத்(அலை) அவர்கள் நோற்றது போல ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கலாம். அது அல்லாஹ்விடத்தில் விருப்பமான நோன்பு என் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். 

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள்." என்று கூறினார்கள். (புகாரி 3420)

நாம் வழமையாக இந்த நோன்புகளை பிடிக்காதவராக இருந்தாலும் இந்த ஒன்பது நாட்களும் சிறப்புப்டுத்தி சொல்லப்பட்டிருப்பதற்காக அதில் வரும் திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு நோற்க முயற்சிக்கலாம் இவற்றை விட முக்கியமாக கூறப்பட்ட அரஃபா நோன்பும் துல்ஹஜ் பிறை ஒன்பதில் நோற்க வேண்டும். அதுவும் இக்கலாப்பகுதியில் செய்யப்படும் சிறப்பான இபாதத்தாக சொல்லலாம்.

அபூகதாதா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; 

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம் 1162)

குறிப்பு- சனிக்கிழமை மாத்திரம் அல்லது வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆகவே நோன்பு நோற்கும் போது  இதையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். 

முடிவாக

சகோதரர்களே!

துல்ஹஜ் முதல் ஒன்பது நாட்கள் நல்லமல்களுக்குரிய நாட்களாகும். நற்காரியங்கள் என அறியப்பட்ட அனைத்தும் இந்த காலங்களில் செய்வது சிறப்புமிக்கதாகும். ஆனால், அதில் தொடராக நோன்பு பிடிப்பது தவறாகும். ஆனால் நாம் மேற்கூறிய நபிகளார்(ஸல்) அவர்களது வழகாட்டலுக்கமைய சில சுன்னத்தான நோன்புகளை நோற்றுக்கொள்ளலாம்.

அல்லாஹ் தஆலா இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்து விளக்கத்தோடு நடக்க நல்லருள்பாலிப்பானாக.

ஆல்லாஹ் தஆலா மிக அறிந்தவன்.

உரை- மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)