2023-05-28 611

சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது?

கேள்வி: சங்கையான இந்த மாதங்களில் பாவம் செய்வது ஏன் மிகவும் குற்றமாக கருதப்படுகிறது?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

தற்போது நாம் அதீத சங்கைமிக்க துல்கஃதா மாத்த்தில் இருக்கின்றோம்

அல்லாஹ் தஆலா துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் எனும் நான்கு மாதங்களையும் வானம் பூமி படைக்கப்பட்ட காலத்திலேயே சங்கைப்படுத்தப்பட வேண்டிய மாதங்கள் என நிர்ணயித்து விட்டான். “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; 

இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும், அவர்கள் அனைவருட னும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” (தெளபா:36)

வானங்கள், பூமி படைக்கப்பட்ட நாட்களிலிருந்தே மாதங்கள் 12 ஆகும். அது எத்தனை கோடி வருடங்களுக்கு முன் என தெரியாது.  அதில் நான்கு மாதங்கள் சங்கை மிக்கன. அந்த நான்கு மாதங்கள் எவை என நபி(ஸல்) அவர்கள் கூறிக்காட்டுகிறார்கள். அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஃதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜூமாதுஸ்ஸானி எனும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்’  (ஸஹீஹுல் புஹாரி 4406)

அல்லாஹ் தஆலா தொடர்ந்தும் அந்த வசனத்தில் இந்த நான்கு மாதங்களையும் சங்கை மிக்க மாதங்களாக நீங்கள் ஏற்றுக்கொள்வது அது அல்லாஹ்வின் நிலையான,சரியான மார்க்கமாகும் எனக்கூறுகிறான். ஆகவே அந்த மாதங்களை எவ்வாறு சங்கைப்படுத்துவது? அது பற்றியும் தொடர்ந்து அதே வசனத்தில் இடம்பெறுவதை காணலாம். 

அதாவது அல்லாஹ் தஆலா “இந்த மாதங்களில் நீங்கள் உங்களுக்கு அநியாயமிழைத்து விடாதீர்கள்” எனக்கூறுகிறான். 

நாம் நமக்கே அநியாயமிழைப்பதென்பது நாம் பாவம் செய்வதாகும். நாம் செய்யும் சிறிய, பெரிய பாவங்கள் அனைத்தும் நாம் நமக்கே செய்து கொள்ளும் அநியாயமாகும். நாம் செய்யும் பாவங்களாலே எம் உள்ளங்கள் துருப்பிடிக்கின்றன என அல்லாஹ் தஆலா சொல்லிக்காட்டுகிறான்.

“அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.” (ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்:16)  

ஆகவே, சிறிய பாவமோ பெரிய பாவமோ எல்லாம் பாவங்கள் தான். அவற்றை செய்வதன் மூலம் நாம் நமக்கே அநியாயம் செய்து கொள்கிறோம்.  அதிலும் மிகப்பெரிய பாவம், மிகப்பெரிய அநியாயம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும்.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

“இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).” (சூறா லுக்மான்:13)

அல்லாஹ்வை விட்டு விட்டு அல்லாஹ் அல்லாதவரிடம் ، மரணித்துப்போனவர்களிடம் பிரார்த்திப்பது, தேவையை கேட்பது, குறி பார்ப்பது, சாஸ்திரம் பார்ப்பது, மறைவான ஞானம் அல்லாஹ் அல்லாதவருக்கு இருக்கிறது என நம்புவது, கையில் இடுப்பில் கழுத்தில் தாயத்தை கட்டி அது எம்மை பாதுகாக்க்கும் என நினைப்பது இவையனைத்தும் மிகப்பெரிய அநியாயமாகும்; இணைவைப்பாகும். 

ஆகவே, ஒரு மனிதன் தனக்கு தானே செய்யும் மிகப்பெரிய அநியாயம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகும். அதே போலத்தான் கொலை, கொள்ளை, பொய் போன்ற ஏனைய அனைத்தும் பாவங்களாகும். சிறிய, பெரிய பாவங்கள் அனைத்தும் நம் ஆண்மாவிற்கு அநியாயமிழைப்பதாகும்.

ஆக, அல்லாஹ் தஆலா இந்த சங்கையான மாதங்களில் அநியாயம் செய்து விடாதீர்கள்; பாவம் செய்யாதீர்கள் என்கிறான். பாவம் செய்யக்கூடாது என்பது பொதுவான அம்சம். அவற்றை எந்த மாதங்களிலும் செய்யக்கூடாது. ஆனால், இந்த சங்கையான மாதங்களில் செய்வதென்பது மிகப்பெரிய குற்றமாகும். ஏனென்றால், இந்த மாதங்களின் சங்கையை கெடுக்கும் மேலதிக பாவத்தை நாம் சுமக்க வேண்டி ஏற்படும்

எனவே முஸ்லிமான ஆண்களே! முஸ்லிம்களான பெண்களே!

நீங்கள் புறம் கதைப்பவர்களாக இருக்கலாம். நோன்பு மாதங்களில் பேணுதலாக இருந்திருப்போம். இந்த சங்கையான மாதங்களிலும் பேணுதலாக இருக்க வேண்டும். துல்கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் என மூன்று மாத தொடர் பயிற்சியை பெறுகிறோம். இந்த மாதங்களில் பேணுதலாக இருந்தால் ஏனைய மாதங்களிலும் பேணுதலாக இருக்க பழகி விடுவோம். பாவம் என நீங்கள் அறிந்த அனைத்தயும் தவிர்ந்து நடக்க வேண்டும். 

வட்டி எடுப்பவனுக்கு அது பாவம் எனத்தெரியும்; இசை கேட்பவருக்கு அது பாவம் எனத்தெரியும்; களவு எடுப்பவனுக்கு அது பாவம் எனத்தெரியும்; ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவருக்கு அது பாவம் எனத்தெரியும். நாம் அனைவரும் நாம் அன்றாடம் செய்யும் பாவங்கள் பற்றி அறிந்து தான் வைத்துள்ளோம். அது பற்றி தெரிந்து கொண்டு தான் அந்த பாவங்களில் ஈடுபடுகிறோம். 

சகோதரர்களே! இந்த மாதங்கள் சங்கைப்படுத்தப்பட வேண்டிய மாதங்கள் என்பதை முன்னிலைப்படுத்துங்கள். இவை பாவங்கள் செய்யக்கூடாத மாதங்கள்; பாவங்களுக்குரிய தீமை இரட்டிப்பாக எழுதப்படும் மாதம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் மனதில் நிறுத்தினால் பாவங்களை தவிர்ந்து நடக்கலாம். 

"நாம் இம்மாதத்தின் சங்கையை கெடுக்கக்கூடாது” என எமக்குள் எந்நேரமும் நினைவு படுத்திக்கொண்டு நாம் எம் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். 

கஃபாதுல்லாஹ் சங்கையான இடம் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். ஊரில் வழமையாக சிகரட் அடிப்பவர் உம்ரவுக்கு சென்றால் அங்கு புகைப்பிடிப்பாரா? இல்லை. அது சங்கையான இடம் என்பதற்காக அதை செய்ய மாட்டோம். எங்கள் உள்ளம் உறுத்தும். அந்த சங்கையான இடத்தை அசிங்கப்படுத்தாமல் பேணுதலாக இருப்போம் அல்லவா?

தொடராக சிகரட் அடிக்கும் பழக்கமுடையவராக இருந்தாலும் ஊர் பள்ளிவாசலினுள் சென்று அரை மணி நேரம் இருக்க வேண்டி ஏற்பட்டால் அங்கே புகைக்க மாட்டார். காரணம், பள்ளிவாயில் சங்கையான இடம். அதை கெடுக்கக்கூடாது என சிந்திப்பார். 

அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் தஆலா இவ்வாறு சில இடங்களை சங்கைப்படுத்தியது போல சில காலங்களையும் சங்கைப்படுத்தி வைத்துள்ளான். ரமழான் மாதம் நோன்பினாலும், குர்ஆன் இறங்கப்பட்டதாலும் சங்கைப்படுத்தப்பட்டது.  ரமழான் மாதத்தின் சிறப்பு இந்த உம்மத்திற்கு மாத்திரமே!  ஆனால் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் எனும் இந்த நான்கு மாதங்களும் வானங்கள், பூமி படைக்கப்பட்ட நாட்களிலிருந்தே சிறப்புப்படுத்தப்பட்ட மாதங்களாகும். சங்கைப்படுத்தப்பட்ட மாதங்களாகும்.

எனவே முஸ்லிம்களே!

இந்த மாதத்தின் சங்கையை கெடுக்காமலிருப்பது எம் எல்லோர் மீதும் கடமையாகும். எம் பாவங்கள் இரகசியமாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக்கொண்டிருக்கிறான். மறைவிலும் அவனுக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். இரகசியமோ, பரகசியமோ படைத்தவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை முன்னிலைப்படுத்தி அன்றாடம் நாம் தெரிந்து கொண்டே செய்யும் பாவங்களிலிருந்து நாம் விலகிக்கொள்வோம். 

தற்செயலாக நாம் மனிதர்கள், உணர்வுகளுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதால் தெரிந்தோ தெரியாமலோ பாவங்கள் செய்து விட்டோமெனில் உடனே தெளபா செய்து கொள்ள வேண்டும். 

யா அல்லாஹ்! நான் அவசரப்பட்டு செய்து விட்டேன், என்னை மன்னித்து விடு, நீ கருணையாளன், இனிமேல் நான் இதை செய்ய மாட்டேன் என உறுதி பூணுகிறேன், என்னை இந்த பாவத்திலிருந்து பாதுகாப்பாயாக! இந்த பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு அருள் செய்வாயாக! என அல்லாஹ்விடம் கெஞ்சி எம் குற்றத்திற்காக பாவமன்னிப்பு கேட்டுக்கொள்வோம். எங்களை தூய்மை படுத்திக்கொள்வோம். 

எனக்கும், உங்களுக்கும் இதை புரிந்து நடக்க அல்லாஹ் தஆலா நல்லருள்பாலிப்பானாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)