மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா?
கேள்வி: மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாதா?
பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
"மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரிவது கூடுமா? கூடாதா?" என்று கேட்கின்றனர்.ஏனென்றால் நம் சமூகத்தில் மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாது என்ற வழக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. என்றாலும் இது தொடர்பாக ஹதீஸில் என்ன இடம்பெறுகின்றது என்பதை அவதானிக்கின்ற போது "நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாது" என்றோ அல்லது "அடுப்பை எரிக்காதீர்கள்" என்றோ கூறியதாக எந்த ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை.
இது முதலாவது விடயம். என்றாலும் இது சம்பந்தமான ஒரு செய்தி ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியிருப்பதைக் காணலாம். அதாவது, ஜஃபர் பின் அபீ தாலிப் (ரழியல்லாஹூ அன்ஹு)அவர்கள் (மூத்தா) போரில் கொல்லப்பட்டு இறந்த செய்தி வந்தபோது, "ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரழியல்லாஹூ அன்ஹு)
ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் -1751, சுனன் இப்னி மாஜா -1610, சுனன் அபீ தாவூத் -3132, சுனனுத் திர்மிதி -998...
மேற்கூறப்பட்ட இந்தச் செய்தியின் தரம் பற்றி நான் சுருக்கமாகக் கூறலாம் என்று நினைக்கின்றேன். அதாவது இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் காலித் என்பவரை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் இமாம்களுக்கிடையில் சர்ச்சை உள்ளது. நாம் ஆய்வு செய்த வரை அந்த ஹதீஸை சஹீஹான ஆதாரமான செய்தியாகக் காணவில்லை. அதை விரவாக வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம் இன்ஷாஅல்லாஹ்
என்றாலும் அந்த ஹதீஸிலே சொல்லப்பட்டிருக்கக்கூடிய விடயம் யதார்த்தமாக இருக்கின்றது. அதாவது "மரணவீட்டில் உள்ளவர்களை கவலையில் ஆழ்த்தக் கூடிய விடயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மரணித்தவரின் குடும்பத்திற்காக உணவு தயார் செய்து கொடுப்பது முறையே" என்பதாகும்.
அதேபோன்று தான் ஒரு கணவன் மரணித்தால் மனைவி நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா இருப்பாள்.அது தவிர்ந்து வேரு எந்த நெருங்கிய உறவாக இருந்த போதிலும் யாருடைய மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க முடியாது.மரணித்தது தாயாகவோ, சகோதரியாகவோ அல்லது பிள்ளையாகவோ இருந்தாலும் சரியே.
இதைப் பற்றி பின்வருமாறு சைனப் பின்து அபீ ஸலமா(ரழியல்லாஹூ அன்ஹா)அவர்கள் அறிவித்தார்கள்;
"தம் சகோதரரை இழந்திருந்த சைனப் பின்த் ஜஹ்ஷ்(ரழியல்லாஹூ அன்ஹா)அவர்களிடம் சென்றேன். அவர்கள் நறுமணம் பூசி, `இது எனக்குத் தேவையில்லைதான்.ஆயினும் `அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. தன்னுடைய கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்" என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிம்பரில் நின்றவாறு கூறக் கேட்டிருக்கிறேன்" என்றார்கள். ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி:1282,....
எனவே நாமும் எமது விதியைப் பொருந்திக் கொண்டு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறையில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அது அவ்வாறிருக்க மரணித்து மூன்று நாட்களுக்குள் மரணித்தவரின் வீட்டில் உள்ளவர்கள் எப்படியோ கவலையில் இருப்பார்கள்.அதுதான் யதார்த்தமும் கூட.இந்த நிலையில் மரணித்தவரின் குடும்பத்தவர்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு எவ்வாறு விருந்தோம்பல் செய்வார்கள்?
அல்லது எழுந்து நின்று தமக்காக எவ்வாறு உணவு தயார் செய்வார்கள்?.
இதற்காக வேண்டித்தான் மரணித்தவரின் வீட்டாரின் அந்த நெருக்கடியான நிலையைக் கவனத்திற்கொண்டு மேற்கூறப்பட்ட ஜஃபர்(ரழி யல்லாஹூ அன்ஹு)அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கருதக் கூடிய உலமாக்களில் சிலர் மரண வீடுகளில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாது என்று தீர்ப்புக் கொடுக்கின்றனர்.
இவ்வாறு அவ்வீட்டாரின் நிலையறிந்து மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதில் தவறில்லை. ஆனால் ஆதாரமற்ற அந்த ஜஃபர்(ரழி யல்லாஹூ அன்ஹு) அவர்களின் ஹதீஸை வைத்து மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எறியக் கூடாது என மார்க்க தீர்ப்புக் கொடுப்பது தான் தவறாகும்
அதாவது நாம் முன்னர் கூறியது போன்று மரணித்தவரின் வீட்டில் உள்ள அவரின் நெருங்கிய உறவினர்கள் அழுது கவலையோடு இருக்கும் வேளையில் அவர்கள் மற்றவர்களுக்கு விருந்தோம்பல் செய்யவோ அல்லது அவர்கள் தாமாக சமைத்து சாப்பிடக்கூடிய நிலைமையிலோ இருக்கமாட்டார்கள் .
இதனால் இந்த நிலை அறிந்து அயல் வீட்டில் உள்ளவர்கள் அல்லது மரண வீட்டாரின் உறவினர்கள் அவர்களுக்கு சமைத்துக் கொடுக்கலாம். ஏனெனில் இந்த நிலை என்றோ ஒரு நாள் அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்றாகும். அப்போது நாமும் ஏனையவர்களின் பால் தேவையுடையவர்களாக இருப்போம். அதனால் மற்றவர்களின் நிலமை அறிந்து செயல்படப் பழகிக் கொள்ள வேண்டும்.
அதே போன்று தான், மரண வீட்டிலே மூன்று நாட்களுக்கு அவ் வீட்டுக்குரியவர்கள் சமைக்காமல் அவர்கள் அல்லாத ஏனையவர்கள் அந்த வீட்டில் சமைக்கலாமா? என்று கேட்கின்றனர். அதாவது பொதுவாக ஒரு வீட்டில் சமையல் பாத்திரங்கள்,சமையல் பொருட்கள் எங்கே உள்ளது என்று வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரமே தெரிந்திருப்பது வழக்கம்.
அது அவ்வாறிருக்க அவ் வீட்டிலுள்ளவர்கள் மரணத்தை எண்ணி கவலைப்பட்டு, அழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்று சமைப்பதற்கு தேவைப்படும் பொருட்களைத் தேடி அவர்களின் நிலை அறியாமல் அவர்களை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டி வரும். இது ஒழுங்கு முறை அல்ல.
ஏனெனில் இஸ்லாம் துக்கம் அனுஷ்டிப்பதற்கு ஆகுமாக்கிய 03 நாட்களில் அவர்களோ கவலையில் இருந்துகொண்டிருக்க நாம் அவர்களிடத்தில் சென்று உதவி செய்கிறோம் என்ற பெயரில் அவர்களை இடைஞ்சல் செய்ததாகிவிடும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனித நேயத்தின் அடிப்படையில் மரணித்தவரின் வீட்டில் சமைக்காமல் ஏனைய உறவினர்கள், அயல்வீட்டார்கள் தத்தமது வீடுகளில் இருந்து சமைத்துக் கொடுப்பது தான் நடைமுறைக்கு நல்லதாக இருக்கும். மேலும் அவர்களின் வீடுகளில் சமைத்து அவர்களைத் தொந்தரவு செய்வதை, அவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவதை மற்றும் அவர்களின் நிலைகளை அறியாமல் செயல்படுவதை இஸ்லாம் விரும்பாது.
எனவே நாம் மற்றவர்களின் நிலமைகளை புரிந்து நடக்க வேண்டும்.
என் தாய், தந்தை மரணித்தால் அல்லது என் நெருங்கிய உறவினர்கள் மரணித்தால் துக்கம் அனுஷ்டிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் எவ்வாறு நான் தனிமையில் இருப்பதையும் ,யாரும் என்னை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் விரும்புவேனோ அதே போன்றுதான் மற்றயவர்களும் என்று எண்ணி அவர்களையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.
ஆகவே எந்த ஹதீஸிலும் மரண வீட்டில் மூன்று நாட்களுக்கு அடுப்பு எரியக் கூடாது என்று இடம்பெறவில்லை. என்றாலும் நாம் மனிதாபிமானத்தின் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஏனையவர்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து அவர்களுக்கு ஏற்ப சிறந்த முறையில் நடப்பதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன்
பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)