2023-05-08 664

கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: கதிரையில் அமர்ந்து தொழுவதன் சட்டம் என்ன?

பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

சமகாலத்தில் கேட்கப்படும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி. நபி(ஸல்) அவர்கள் கதிரை மீதமர்ந்து தொழவில்லை. அவ்வாறிருக்க நாங்கள் கதிரையில் அமர்ந்தவாறு தொழலாமா? நாம் இவ்வாறு அமர்ந்து தொழுவதற்கு நபிகளார்(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களா? எனக்கேட்கின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் தொழும் முறையை எங்களுக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். 

இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனக்கு மூல வியாதி இருந்தது. ஆகவே நான் தொழுவது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் விலாப்புறங்களில் சாய்ந்து தொழுவீராக!” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1117)

இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் நின்று தொழுமாறும், அதற்கு சக்தி பெறாதவர் உட்கார்ந்து தொழுமாறும், உட்கார முடியாதவர் தன் விலாப்புறத்தில் சாய்ந்த வண்ணம் தொழுமாறும் கட்டளையிடுகிறார்கள். 

நபி(ஸல்) அவர்கள் கதிரையில் தொழுததாக ஹதீஸ்களில் இடம்பெறவில்லை. ஆனால், நிலத்தில் உட்கார்ந்து தொழுதிருக்கிறார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முதுமையடைந்து அவர்களது உடல் சதை போட்ட பிறகு அதிகமாக உட்கார்ந்தே தொழுதார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1335)

மேலும்,  நபி(ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்தவாறும் தொழுதிருக்கிறார்கள்.

அனஸ் இப்னு ஸீரின்(றஹ்) அறிவித்தார்கள்: அனஸ்(ரலி) ஸிரியாவிலிருந்து வந்தபோது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். ‘ஐனுத்தம்ர் ‘என்ற இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்களின் முகம் கிப்லாவுக்கு இடப்புறமாக இருக்கும் நிலையில் கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் தொழுததை பார்த்தேன். கிப்லா அல்லாத திசையில் நீங்கள் தொழுகிறீர்களே என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்' என்று விடையளித்தார்கள். (ஸஹீஹுல் புஹா ரி 1100)

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் அந்தக்காலத்தில் வாகனமாக கருதப்பட்ட விலங்குகள் மீது தொழுது காட்டியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், கழுதையின் மீது அமர்ந்து தொழுவது ஒரு கதிரை மீது அமர்வது போலாகும். கழுதையில் அமரும் போது கால்கள் இரண்டும் இரு திசையில் தொங்கிய அமைப்பிலிருக்கும். பிற்தட்டு கழுதையின் முதுகு புறத்தின் மீது இருக்கும். அது கிட்டத்தட்ட கதிரையில் அமரும் அமைப்பை ஒத்ததாகத்தான் இருக்கிறது.

சகோதரர்களே! 

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் தன் அடியார்களுக்கு பின்வருமாறு கூறுவதைக்காணலாம். “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம் கொடுப்பதில்லை” (2:286).

மேலும் இன்னுமொரு இடத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

“ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்” (64:16).

ஆக, ஒருவர் நின்று தொழத்தயாராகிறார். ஆனால் அவருக்கு நிற்க முடியாது. நிலத்தில் அமரவும் முடியாது. நிலத்தில் அமர்ந்தால் எழுந்து கொள்ள முடியாத நிலை. முழங்கால் வலியின் காரணத்தால் காலை மடித்து உட்கார முடியாத நிலை. கதிரையில் அமர்வது தான் அவருக்கு இயலுமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் நபி(ஸல்) அவர்கள் தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கதிரையில் மீதமர்ந்து தொழுது கொள்ளலாம். 

அவ்வாறு தொழுபவர் ருகூ செய்யும் போது சற்று குனிந்து ருகூ செய்வார். சுஜூத் செய்யும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாக குனிந்து சுஜூத் செய்வார். 

வேறு சில நோயாளிகள் நிலையில் நீண்ட நேரம் நிற்பர்கள். ஆனால் குனிந்து நிலத்திற்கு செல்வது தான் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தொழுகையின் நிற்க வேண்டிய நிலைகளில் நின்று கொள்வார். ருகூ, சுஜூத் நிலமையின் போது கதிரை மீதமர்ந்து அவற்றை செய்து கொள்வார். இவ்வாறு தன்னால் முடியுமான கட்டத்தை செய்துதொழுது கொள்வார். 

இன்னுமொருவர் நின்று தொழ முடியாத நோயாளியாக இருக்கிறார். ஆனால், அவருக்கு நிலத்தில் அமர்ந்து சுஜூத் செய்வது இயலுமாக இருக்கிறது. இவ்வாறிருப்பவர் அமர்ந்த வண்ணம் ருகூ செய்து விட்டு சுஜூத் உடைய நிலையில் அவர் நிலத்தில் தான் சுஜூத் செய்ய வேண்டும். அது அவருக்கு கடமையாகும். 

இந்த காலத்தில் நிறைய பெண்களுக்கு முழங்கால் நோவு, வலி இருக்கிறது. அவர்கள் நிலத்தில் அமர்ந்தால் எழும்புவதற்கு இன்னுமொருவர் தூக்கி விட வேண்டும். இவ்வாறான பலவீனங்கள் உள்ளவர்கள் தமது சக்திக்கேற்ப தொழுகையில் அதன் அமைப்புக்களைப்பேணி நடந்து கொள்ளலாம். 

இன்னும் சில முள்ளந்தண்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நீண்ட நேரம் நிற்க முடியாது. கதிரை மீது உட்காருவதும் வேதனையாக இருக்கும். அவ்வாறான நிற்கவும், கதிரையில் அமரவும் முடியாமல் இருக்கும் நோயாளிகள் நிலத்தில் அமர்ந்து தொழுது கொள்ளலாம். அவருக்கு சுஜூத் செய்வது இயலுமாக இருந்தால் அவர் கட்டாயம் சுஜூத் உடைய நிலமையில் நிலத்தில் சுஜூத் செய்ய வேன்டும். 

எனவே இந்த அடிப்படையில் நாம் எமது தொழுகையின் நிலைகளை எம் சக்திக்கேற்ப செய்து கொள்ளலாம். 

அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன். அல்லாஹ் தஆலா இது போன்ற மார்க்க விடயங்களை புரிந்து  நடக்க நல்லருள்பாலிப்பானாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)