2023-04-05 654

இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?

கேள்வி :இந்த துஆவை நோன்பு திறப்பதற்கு ஓதலாமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

நோன்பு திறக்கும் போது இன்னென்ன துஆக்கள் ஓத வேண்டும் என்று மௌலவிமார்களால் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அந்த துஆக்களில் சில வானொலி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

அவற்றை செவிமடுக்கக் கூடிய மக்கள் அதற்காக கையேந்துகின்ற வழக்கையும் நாங்கள் காண்கின்றோம். இவ்வாறு நோன்பு திறக்கும் போது ஓதுவதெற்கென்று துஆக்கள் இருக்கின்றனவா? அவை என்ன? இன்னும் அந்த துஆக்கள் ஆதாரப்பூர்வமானதா?ஓதலாமா? என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.

நோன்பு திறக்கும் போது ஒரு சில துஆக்கள் ஓதப்பட்டு வருகின்றன.

அவற்றில்

‎"اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ" என்ற துஆவும் ஓதப்படுகின்றது.

பொருள்: யா அல்லாஹ்! உனக்காக நோன்பு நோற்றேன்.உனது உணவைக் கொண்டே நோன்பு திறந்தேன்.

ஆதாரம்: முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா(9744),சுனன் அபீ தாவூத் (2358), அஸ்ஸுனனுல் குப்ரா-பைஹகீ (8213)....

மேற்கூறப்பட்ட இந்த துஆவோ ஆதாரமான ஹதீஸ்களிலிருந்து வந்துள்ளதா? என்பதை நாம் ஆய்வு செய்கின்ற வேளையில் இச் செய்தி ஹதீஸ் கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களினூடாக ஊர்ஜீதமான  நம்பகமான அறிவிப்பாளர்களின் வாயிலாக  இடம்பெறாத பலவீனமான ஒரு செய்தியாக இருக்கின்றது  என்பதை அறிய முடிகின்றது.

இதுதான் இந்த துஆவின் நிலைப்பாடாகும்.

அடுத்ததாக கீழ்வரக்கூடிய இன்னுமொரு துஆவும் ஓதப்படுவதைக் காணலாம்.

‎"ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ العُرُوقُ، وَثَبَتِ الأَجْرُ إِنْ شاءَ اللّٰه"

பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும். ஆதாரம்:சுனன் அபீ தாவூத்(2357),  அஸ்ஸுனனுல் குப்ரா- நசாயீ(3329), அஸ்ஸுனனுல் குப்ரா-பைஹகீ(8213).....

இந்த துஆவை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓதியதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் ஒரு செய்தி இடம்பெற்றிருக்கின்றது.

இந்த ஹதீஸை சுமார் 15 வருடங்களுக்கு முன் நாம் ஆய்வு செய்த வேளையில் இதை அறிவிக்கக் கூடிய  அறிவிப்பாளர்களில் ஒருசிலர் இனங்காணப்படாத மற்றும் இமாம்களால் ஊர்ஜீதப்படுத்தப்படாத பலவீனமான அறிவிப்பாளர்களாக இருப்பதால்  இந்த துஆ இடம்பெறக்கூடிய இந்த செய்தியும் பலவீனமானதே என்று எப்போதோ நாம் கூறிவிட்டோம்.

ஆகவே இதுவும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் வழிகாட்டப்பட்ட  ஒரு துஆ என்று எண்ணி அதை கஷ்டப்பட்டு மனனம் செய்யத்தேவையில்லை.

என்றாலும் நாங்கள் செய்யும் ஒரு நல்ல வணக்கம்- அந்த வணக்கத்தின் முடிவிலே நாங்கள் இறைவனிடத்தில் பிரார்த்திப்பது வழக்கம்.உதாரணமாக நாங்கள் தொழுது முடிந்தால் இஸ்திஃபார் செய்கின்றோம். இன்னும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கின்றோம்.

அதுபோன்றே நாங்கள் நோன்பு நோற்று அல்லாஹ்விடத்தில் எதையும் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.இதைத்தான் கேட்க வேண்டும் என்று எதையும் நாங்கள் குறிப்பாக்கிக் கூறுவதற்கு இல்லை.

மாறாக ஒருவர் ஒரு வணக்கத்தை செய்கின்றார்.அந்த வணக்கத்தின் முடிவிலே அல்லாஹ்விடத்தில் தனக்குரிய தேவைகளைக் கேட்கின்ற பொழுது அவர் எதைக் கேட்பதாக இருந்தாலும் கேட்கலாம்.  அது அவரைப் பொறுத்தது. அதைப்போன்றுதான் நோன்பும் .எனவே,நோன்பு திறக்கும் போது  இந்த துஆவைத்தான் ஓத வேண்டும்,இதை ஓதினால் உங்களுக்கு நன்மை இருக்கின்றது என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழிகாட்டியதாக  எந்தவொரு ஆதாரபூர்வமான

செய்தியும் இடம்  இல்லை என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் நான் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.

அத்தோடு உங்களில் இந்த துஆவை மனனமிட்டவர்கள் நாங்கள் இதை மனனமிட்டுவிட்டோம் என்றோ அல்லது இதை ஓதலாம் தானே?, இவ்வாறு ஓதுவது நல்ல விடயமாகத்தானே இருக்கின்றது? 

,"உனக்காக நோன்பு நோற்றேன்.உன் ஆகாரதைக் கொண்டே நோன்பு திறந்தேன்"என்பது நல்ல கருத்துள்ளது தானே இதை ஓதுவதில் பிழையில்லையே? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம்,அதன் கருத்துப் பிழையானதாக இல்ல .ஆனால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்து காட்டாத ஒரு விடயத்தை இது மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒரு விடயம் என்று நாங்கள் நம்பி செயற்படுவதானது - அது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லாததை சொன்னதாக சொல்லி அவர்களின் பேரில் இட்டுக் கட்டியதாகவும்,அவர்கள் சொல்லாத ஒன்றை செய்ததாகவும் ஆகிவிடும். அத்தோடு இவ் விடயத்தை மற்றொரு ரீதியாக அவதானிக்கின்ற வேளையில் அது பிழையான காரியமாகவும் அமைகிறது.

அதாவது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழிகாட்டாத ஒரு விடயத்தை அது மார்க்கத்தில் உள்ள ஒரு விடயம் தான் என்று கொண்டு வந்து மார்க்க விடயங்களோடு இணைத்திட முடியாது.

ஏனெனில் இந்த மார்க்கமும் அதிலுள்ள செய்திகளும் புனிதமானவை.

அதுமட்டுமல்லாமல் சந்தேகத்திற்குரியவரினாலோ அல்லது நம்பகமற்றவர்களின் வாயிலாக வரக்கூடிய செய்திகளினாலோ கொண்டு இந்த மார்க்கத்தை நாங்கள் அழகுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அந்த வகையில் நாம் நோன்பு திறக்கும் போது ஓதப்பட்டு வரக்கூடிய இந்த  துஆக்கள் பலவீனமான மற்றும் ஆதாரமான ஹதீஸ்களில் சொல்லப்படாத விடயங்களிலிருந்தும் இருக்கின்றன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தை அதன் தூயவடிவில் விளங்கி நடக்க அல்லாஹ் தஆலா அருள்புருவானாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)