2023-03-26 484

பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?

கேள்வி: பெற்றோர் கடமையான நோன்புடன் மரணித்தால் பிள்ளைகள் நோற்க வேண்டுமா?

பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நிறைவேற்ற வேண்டிய நோன்பு உள்ள  நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் (உறவினர்) நோன்பு நோற்பார் " எனக் கூறியுள்ளார்கள். (புகாரி : 1952)

ஆகையால்,  கடமையான நோன்பை நோற்காத நிலையில் தாய் அல்லது தந்தை மரணித்தால் அதனை பிள்ளைகள் நோற்க வேண்டுமா? எனக் கேட்கின்றனர். ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் வந்து 

"அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத நோன்பு கடமையிருந்த  நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?" எனக் கேட்டார் அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் " ஆம்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிக தகுதி படைத்தது" என்று கூறினார்கள்" (புகாரி : 1953)

இந்த ஹதீஸில் தாய் அல்லது தந்தை கடமையான நோன்பை நோற்க சக்தி பெற்று, அதனை நோற்காமல் மரணித்தால் அந்த நோன்பை பிள்ளைகள் பிடிக்க வேண்டும் போல வெளிப்படையாக்கத் தெரிகின்றது. ஆனால் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீதின் சில அறிவிப்புக்களில் பொதுவான நோன்பு என்றும், சில அறிவிப்புகளில்  நேர்ச்சைக்குரிய நோன்பு என்றும், மேலும் 15 நோன்புகள் எனவும் ஒரு மாத நோன்பு எனவும் வந்துள்ளது. 

எனவே ஒருவிடயம் ஓரிடத்தில்  குறிப்பாகவும் இன்னோரிடத்தில் பொதுவாகவும் வந்தால் குறிப்பாக வந்ததையே சட்டத்திற்கு எடுக்க வேண்டும் என்பது சட்டக்கலை விதியாகும்  இதன்பிரகாரம் இந்த ஹதீஸில் கேட்கப்பட்டது நேர்ச்சை நோன்பை களாசெய்வது பற்றியது என புரிந்து கொள்ளவேண்டும் 

அதாவது ஒருவர் தன் பிள்ளைக்கு சுகம் இல்லையென்றால் சுகமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சுகமானால் நோன்பு பிடிப்பேன் என்று அல்லாஹ்விடம் ஒப்பந்தம்  போடாமல் ஒரு மாதம் அல்லது இரு மாதங்கள் நோன்பு பிடிக்க அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்றுவது கடமையாகும். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த நோன்பை நோற்காமல் மரணித்து விட்டால் அந்த நோன்பை பிடிக்க வேண்டும் என்பதனையே இந்த ஹதீஸ் உணர்த்துக்கின்றது.

எனவே, தாய் அல்லது தந்தை  நோன்பு பிடிப்பதாக அல்லது ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். என்றாலும் கடமையான தொழுகை தொழவில்லை என்றால் அதனைத் தொழ வேண்டும் என்று எந்த இமாமும் கூறவில்லை.  அதே போன்று தான் இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) உட்பட பொதுவாக இமாம்கள் அவர்கள் விட்ட  ரமழானுடைய நோன்பை பிள்ளைகள் நோற்க வேண்டும் எனவும் புரியவில்லை.

எனவே, மேலுள்ள இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸ் நேர்ச்சை நோன்பையே சுட்டிக்காட்டி வந்துள்ளதால் அந்த நேர்ச்சை நோன்பை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரமழானின் நோன்பை அவர்கள் சக்தி பெற்றும் பிடிக்கவில்லை என்றால் அதற்கு அல்லாஹ் எங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்.

அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன். 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)