2023-03-24 482

நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?

கேள்வி:  நோன்பு காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

பெண்கள் ரமழானில் முழு நோன்பையும் நோற்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது லைலதுல் கத்ரின் சிறப்பை அடைய வேண்டும் என்பதற்காகவோ அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடலாமா? என்று ஒரு சிலர் கேள்வி கேட்கின்றனர்.

ஏனெனின் மாதவிடாய் ஏற்பட்டால் பெண்கள் நோன்பு நோற்க முடியாமல் போய்விடுகிறது.அவ்வாறு விட்ட நோன்பை பிறகுதான் அவர்களால் கழா செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது  அதுமட்டுமல்லாமல்  லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்க வேண்டும்.இவ்வாறு ரமழான் காலங்களில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால் அந்த நாட்களில் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது இல்லாமல் போய் விடுமே என்ற ஆதங்கத்தினால் மாதவிடாய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசியையோ அல்லது அதற்கான மருந்து மாத்திரைகளையோ பயன்படுத்தி தமக்கு மாதவிடாய் ஏற்படாமல் தடுக்கின்றனர்.எனவே இவ்வாறு செய்வது மார்க்கத்தில் அனுமதியா?

இதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது?என்று கேட்கின்றனர்.

அன்பிற்குரிய சகோதரிகளே!

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறுகின்றார்கள்; "நிச்சயமாக அல்லாஹ் அவன் (தடுத்த)பாவங்கள் செய்யப்படுவதை எவ்வாறு வெறுக்கின்றானோ அதே போன்று அவன் (அளித்த)சலுகைகள் செய்யப்படுவதை(பயன்படுத்தப்படுவதை) விரும்புகின்றான்". ஆதாரம்:ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் (5866,5873), சஹீஹ் இப்னி குசைமா(950,2027),சஹீஹ் இப்னி ஹிப்பான்(2742),அஸ் சுனனுல் குப்ரா லில் பைஹகீ(5416)....

இன்னுமொரு அறிவிப்பில்

"நிச்சயமாக அல்லாஹ் அவன் கடமையாக்கிய விடயங்கள் செய்யப்படுவதை எவ்வாறு விரும்புகின்றானோ அதே போன்று அவன் அளித்த சலுகைகள் செய்யப்படுவதை விரும்புகின்றான்". என்றும் இடம்பெறுகின்றது. ஆதாரம்:முஸன்னப் இப்னி அபீ ஷைபா (26471,26472,26475,26476),சஹீஹ் இப்னி ஹிப்பான்(354,3568), அல் முஉஜமுல் கபீர்(10030,11880,11881), அஸ் சுனனுல் குப்ரா லில் பைஹகீ(5415),....

உண்மையில் மாதவிடாய் ஏற்படுவதென்பது அல்லாஹ் பெண்களுக்கு வழங்கிய ஒரு சலுகையாகும்.அந்த அடிப்படையில் ஒரு பெண் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் நோன்பை அவள் கட்டாயம் விட்டாக வேண்டுமே தவிர அதை அவள் தனக்கொரு கஷ்டமாக எண்ணியோ அல்லது ஏன் நோன்பை விட்டுவிட்டு அவற்றைத் தாமதப்படுத்தி ஏனைய நாட்களில் கழா செய்ய வேண்டும் என்று எண்ணியோ ரமழான் காலங்களில் தொடர்ச்சியாக நோன்பு நோற்பதற்காக மாதவிடாய் ஏற்படாமல் தடுப்பூசிகளை போட வேண்டிய தேவை கிடையாது.

ஏனெனில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் மனைவிமார் உட்பட அந்தக் காலத்தில் எத்தனையோ பெண்கள் இருந்தும் கூட அவர்கள் இவ்வாறு ரமழானில் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்பதற்காகவும் தமக்கு ஏற்படக்கூடிய மாதவிடாயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நாட்டு வைத்தியங்களையோ வேறு முறைகளையே கையாளவில்லை.

மாறாக தமக்குரிய சலுகைகளை பயன்படுத்தினார்கள்.

எனவே நாமும் மாதவிடாய் ஏற்படாமல் வலிந்து தடுப்பூசி போட்டு அதை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.காரணம் அல்லாஹ் தான்  இவ்வாறான அமைப்பை பெண்களின் உடலில் இயற்கையாகவே ஏற்படுத்தியுள்ளான் என்பதனாலாகும்.

எனவே பெண்களுக்கு நோன்பு காலங்களில் மாதவிடாய் ஏற்பட்டால் அதற்கேற்ப அவர்கள் நோன்பை விட்டு அடுத்த ரமழானுக்கிடைப்பட்ட  காலங்களில் அவற்றை கழா செய்வதுதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் காட்டிய வழிமுறையாகும்.

இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால் நாம் பிரயாணம் செய்கின்றோம். பிரயாணத்திலே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் பர்ளான தொழுகைகளையும் இரவு நேர வித்ர் தொழுகையையும் சுப்ஹின் இரண்டு சுன்னத்தையும் தவிர வேறு 

சுன்னத்துகள் எதையும் தொழ மாட்டார்கள்.அதுமட்டுமல்லாமல் பிரயாணத்தில் நேரம் கிடைத்தாலும் இரண்டு தான் தொழுவார்கள்.ஏனெனின் அது பிரயாணிக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு சலுகையாகும் மற்றும் அந்த சலுகைகளைப் பயன்படுத்துவதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதனாலாகும்.

இவ்வாறு சலுகைகளைப் பயன்படுத்துவதை அல்லாஹ் விரும்பியிருக்க நாமோ எமக்கு நேரமிருக்கின்றது நான் விரும்பிய அளவு சுன்னத் தொழுகைகளைத் தொழப்போகின்றேன் இன்னும் இரண்டு ரக்அத்களுக்கு பதிலாக நான்கு ரக்அத்கள் தொழப்போகின்றேன் என்றெல்லாம் கூறுவதானது நபி (ஸல்) வழியல்ல.அத்தோடு அது அல்லாஹ்விற்கு விருப்பமான செயலுமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக சலுகை வழங்கப்பட்ட விடயங்களில் அவற்றின் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்.அத்தோடு சலுகைகளை பயன்படுத்தாமல் விட்டால் குற்றமா? என்று கேட்கப்பட்டால் அதை நாம் கூற முடியாது.காரணம் இந்த விடயத்தில் எந்த ஆதாரமோ அல்லது நேரடியான தடையோ வரவில்லை என்பதனாலாகும்.

ஆகவே தடை வராத ஒரு விடயத்தில் இது தடை என்றோ அல்லது ஹராம் என்றோ சொல்ல முடியாது. ஆதலால் தடை ஒன்று வராததால் தடை வரும் வரைக்கும் அந்த விடயம் அனுமதியாகவே இருக்கும்.

என்றாலும் நாம் ரமழான் காலங்களில் மாதவிடாய் ஏற்பட்டால் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடுவதை விட இயற்கையின் அடிப்படையில் பெண்களுக்கென்று அல்லாஹ் வழங்கிய சலுகையை பயன்படுத்துவதானது மேற்கூறப்பட்ட அந்த ஹதீஸின் பிரகாரம் அல்லாஹ்விடத்தில் விருப்பமான ஒன்றாக அது அமையும். அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன் 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)