2023-03-24 494

வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?

கேள்வி: வயிற்றில் உள்ள பிள்ளைக்காகவும் சதக்கத்துல் பித்ர் கொடுக்க வேண்டுமா?

பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

சில சகோதரர்கள் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் சதகதுல் பித்ர் கடமையாகுமா? எனக்கேட்கின்றனர். சில சமயங்களில், சில தாய்மாருக்கு வைத்தியர் கொடுத்த திகதி கடந்தும் பிள்ளை பிறக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளையையும் சதகதுல் பித்ரிலே கணக்கெடுக்க வேண்டுமா? சிலருக்கு வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால் இரட்டிப்பாக கொடுக்க வேண்டுமா? என்றெல்லாம் பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

இப்னு உமர்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

 அடிமைகள், அடிமைகள் அல்லாத சுதந்திரமான மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் சதகதுல் பித்ரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.  (புகாரி 1503)

சகோதரர்களே!

சதகதுல் பித்ரைப்பொறுத்தவரையில் வீட்டிலிருக்கும் ஆண் தனது பராமரிப்பிலிருப்பவர்களுக்கு கணக்கிட்டு கொடுப்பது கடமையாகும். மனைவி இருப்பாள், பிள்ளைகள் இருப்பார்கள், சிலவேளை தாய் தந்தையினரும் இருப்பார்கள். 

நபி(ஸல்) அவர்களது காலத்தில் அடிமைகளும் தமது பொறுப்பிலிருந்ததால் அந்த அடிமைக்கும் அதை கணக்கிட்டு கொடுப்பார்கள். வீட்டில் இருக்கும் பிள்ளை நோன்பு பிடிக்காத இரண்டு வயது குழந்த்தையாக இருந்தாலும் சரி அல்லது நேற்று பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி அதற்கும் சதகதுல் பித்ர் கணக்கெடுக்கப்படும். 

இது இவ்வாறிருக்க வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சதகதுல் பித்ர் கொடுக்க வேண்டுமா? எனக்கேட்டால்-

வயிற்றிலிருக்கும் குழந்தையைப்பொறுத்தவரையில் அது பிறந்து பூமிக்கு வரும் வரை அது எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக அந்த சிசு அல்லாஹ்வின் பொறுப்பிலே இருக்கின்றது. பூமியில் உயிரோடு வாழும் குழந்தைக்கு தான் நபி (ஸல்) அவர்கள் சதகதுல் பித்ரை கொடுக்குமாறு சொன்னார்களே தவிர வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுங்கள் என்ற கட்டளையை பிறப்பிப்பதாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் காண முடியவில்லை. எனவே, அல்லாஹ் எங்களுக்கு சுமத்தாத ஒரு விடயத்தை  நாங்கள் கடமையாக்குவது அவசியமானதல்ல.

இதில் மற்றும் ஒரு கேள்வி உள்ளது. அதாவது பேணுதலுக்காக வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு சதகதுல் பித்ரை நாங்கள் கொடுத்தால் அது பித்அத் ஆகுமா? 

இங்கே நாம் விளங்க வேண்டிய விடயம், மார்க்கத்தில் அடிப்படையில் இல்லாத ஒரு வணக்கத்தை மார்க்கம் என்று நீங்கள் எண்ணி செய்கின்ற போது அது பித்அத்தாக மாறிவிடும்.

ஆனால் பேணுதலுக்காக செய்வதென்பது எப்போது அனுமதியாகுமென்றால், "மார்க்கத்தின் அடிப்படை விடயங்களுக்கு ஆதரங்கள் இருக்கின்றன. நாம் பேணுதல் என்று நினைக்கும் குறிப்பிட்டதோர் விடயம் அவ்வாதாரங்களில் இருந்து புரியப்படும் என்றிருக்குமாயின் அதனை செய்வதில் குற்றமாகாது.” ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லாத ஒன்றை கடமையாக்குவது எங்களுக்கு அனுமதியானதல்ல.

இதில் மற்றுமொரு கேள்வி உள்ளது-

பெருநாள் தினத்தில் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது அல்லது அடுத்த தினம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தக் குழந்தை நல்ல முறையில் பிறக்க அல்லாஹ்விடம் ஆதரவு வைத்தவர் அக்குழந்தைக்காக சதகதுல் பித்ர் கொடுக்கலாமா? 

சகோதரர்களே! உங்கள் பிள்ளை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, அதனை அல்லாஹ் குறையில்லாத நிலையில் பின்னர் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தர்மம் செய்வதாயின் சதக்கத்துல் பித்ர்  அல்லாமல் சாதாரணமாக ஒரு தர்மத்தை செய்து கொள்ளலாம். 

அல்லாஹ்விடம் நலவை எதிர்பார்த்து ஒரு வணக்க வழிபாட்டை நீங்கள் முற்படுத்தினால் அது பிரார்த்தனை செய்கின்ற வசீலா எனும் வகையைச் சார்ந்ததாகும். அதாவது, எமக்கு ஏதோ ஒரு நன்மையான காரியம் ஆக வேண்டியிருந்தால் அதற்காக நோன்பு பிடித்து விட்டு அல்லாஹ்விடம் அதற்காக பிரார்த்திப்பது போன்றதாகும். சிலவேளை தர்மம் செய்து விட்டும் அதற்காக பிரார்த்த்க்கலாம். மனைவியின் உடல்நலத்திற்காகவோ அல்லது தாய் தந்தையினருக்காகவோ நாங்கள் கொடுக்கின்ற தர்மத்தை போன்று இதுவும் ஒரு சாதாரண தர்மமாக கொடுக்க முடியும். 

இது வேறு விடயமாகும். இந்த தர்மம் பொதுவான தர்மமாகவே கணக்கெடுக்கப்படும். மாறாக சதகத்துல் பித்ர் எனும் காரியத்தில் உள்ளடங்காது. 

எனவே இறுதியாக "வயிற்றில் உள்ள சிசிவிக்கும் சதகத்துல் பித்ர் கொடுக்க வேண்டும் என்ற ஒரு விடயத்தை நாங்கள் புதிதாக மார்க்கத்தில் உண்டாக்குவது எங்களுக்கு அனுமதி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்" அல்லாஹ்வே மிக  அறிந்தவன்.

பதில்: மௌலவி MI அன்சார் (தப்லீ்கி ) தத்பீகுஷ் ஷரீஆ  அரபுக் கல்லூரியின் அதிபர்