2023-03-18 410

ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?

கேள்வி: ஸகாதுல் பித்ர்ரை பணமாகக் கொடுக்கலாமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

ஸகாதுல் பித்ரை பணமாக கொடுக்கலாமா? என்ற கேள்வியும், பள்ளிவாசல்களில் பணமாக சேகரித்து பின்னர் தேவையுடையோருக்கு விநியோகிக்கும் வழக்கமும் பரவலாக காணப்படுகிறது. 

இந்த விடயத்தில் மார்க்க வழிகாட்டல் என்ன என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம். 

ஒரு குழந்தை பிறந்தால், 7ஆம் நாள் அகீகா கொடுக்க வேண்டும் என்பது மார்க்கம் கடமையாக்கிய விடயமாகும். மாறாக, அதற்குப் பகரமாக பணத்தைக் கொடுத்தால் அது அகீகாவாகமாட்டாது. அதே போல், உழ்ஹியாவிற்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) மார்க்கம் வரையறுத்த சில பிராணிகளை அறுத்துப் பலியிட வேண்டும். உதாரணமாக, உழ்ஹியாவிற்குரிய ஒரு  ஆடு வாங்கும் பணத்தொகையைக் கொண்டு 50 கோழிகள் வாங்கிக் கொடுத்தால் அது உழ்ஹியாவாக ஆகமாட்டாது. அல்லது பெரு நாள் தினத்தில் அந்த உழ்ஹியாக்குரிய பணத்தை எடுத்து ஏழை எளியவர்களுக்குக் கொடுத்தால் அதுவும் கூட உழ்ஹியாவாக மாட்டாது. எனவே, அதே போன்றுதான் ஸகாத்துல் பித்ர்ரையும் எப்படி கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்களோ அதே போன்று செய்வதுதான் எங்களுக்கு கடமையாகும்.

ஆகவே,  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸகாத்துல் பித்ர்ரை பின்வருமாறு கொடுப்பதற்கு கட்டளையிட்டார்கள்.

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலியல்லாஹு அன்ஹு ) அறிவித்தார் :  "நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம்" (ஸஹீஹுல் புஹாரி: 1506)

எனவே மேலுள்ள ஹதீஸில் உள்ளவாறு ஒரு ஸாஉ கொடுப்பதற்கு எங்களை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏவினார்கள். 

ஒரு ஸாஉ என்றால் "எங்களது இரு கைகளை சேர்த்து அள்ளும்போது வரும் அளவைப் போன்று நான்கு மடங்கு பங்கைக் குறிக்கும்". 

ஒரு ஸாஉ என்பது எங்களது கணக்கின்படி அண்ணளவாக "இரண்டு கொத்தாக இருக்கும்". 

ஆகவே, இவ்வாறு கொடுப்பதைத்தான் மார்க்கம் வழிகாட்டுகின்றது.

அதற்கு மாற்றமாக, "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலத்தில் அன்று அவர்களுக்குப் பணத்தை கொடுக்கும் தேவையில்லை. ஆனால், இன்று மக்களுக்கு அந்த தேவை இருக்கின்றது. அதனால் தான் நாங்கள் பணத்தை கொடுக்கின்றோம்" என்று சிலர் வாதிடுகின்றனர்.

அன்பார்ந்த ஈமானிய உள்ளங்களே! நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் பணம் இருந்தது. அதை வெளிப்படுத்தி மக்களுக்கு கொடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அன்று உணவுப் பொருட்களை கொடுக்கின்றதை வழமையாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள். 

இன்னும் எங்களுக்கு அதை கடமையாக்கியிருக்கின்றார்கள் என்றும் தெளிவான செய்தி வந்த பிறகும் எங்களது சிந்தனைகளுக்காக அதை மாற்றியமைப்பதென்பது நபி வழிக்கு முற்றிலும் மாற்றமான ஒரு காரியமாகும். 

அதனால், "ஸகாத்துல் பித்ர்க்காக இவ்வளவு நிர்ணயித்திருக்கின்றோம். எனவே, பணத்தை தாருங்கள்" என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களிடம் கேட்பது ஒரு பிழையான காரியம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நவீன அறிஞர்கள் சிலர் இவ்வாறு கூறுகின்றார்கள் என்று சிலர் தனது கருத்தை முன்வைக்கின்றனர். 

காலத்தின் தேவையால் இஸ்லாத்தை நவீனமயப்படுத்துவதற்கு இது மனிதன் உருவாக்கிய ஒரு விடயமல்ல. அது அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட வஹீ. எனவே, அதை எங்களது சிந்தனைக்கேற்றாற்போல் மாற்ற முடியாது. அதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது. 

எனவே, பெரிய விடயமோ, சிறிய விடயமோ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழிகாட்டியதோடு நின்று கொள்வதுதான் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதற்கு மாற்றமான வழிமுறைகளை நாங்களாக உருவாக்கி, எங்களது சிந்தனைகளால் அதை நியாயப்படுத்துவதற்கு அது (மார்க்கம்) எங்களுடைய சிந்தனைக்குட்பட்டது கிடையாது. அதிலே சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நலவுகளை அல்லாஹ் வைத்திருப்பான். 

இதை தான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவ‌ர்க‌ள் பின்வருமாறு கூறினார்கள் :

"மார்க்கம் என்பது சொந்த கருத்துக்களைக் கொண்டு (அமைப்பதாக) இருந்தால் (வுழுவு செய்யும் வேளையில்) ( காலுறை அணிந்தவர் )காலுறையின் மேல் தடவுவதை விட காலுறையின் கீழ் தடவுவது மிக ஏற்றமானதாக இருக்கும்".

அதாவது வுழு செய்த நிலையில் காலுறை அணிந்தவர் பின்னர் வுழு செய்யும் தேவை ஏற்படும் போது காலுறையை நீக்காமல் அதன் மேல் (காலின் மேற்புறம்) தடவுவது மார்க்கம் சொல்லி தந்த விடயமாகும். 

சுய சிந்தனையை பயன்படுத்தி மார்க்கத்தை வரையறுப்பதானால் காலுறையின் கீழ் பகுதியில் தடவ வேண்டும் என்றே சொல்வது மிக ஏற்றமாக இருந்திருக்கும். 

ஏனெனில் கீழ் பகுதி தான் நிலத்தில் படும். அதனால் தான் மார்க்கத்தை பின்பற்றுவதானால் மனித சிந்தனைக்கு சரியாகபட்டால் மாத்திரம் செய்ய முடியும் என வாதாட முடியாது. எனவே ஸகாத்துல் பித்ர்ரை பணமாகக் கொடுக்க முடியாது என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வோம்.

அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவைத்தருவானாக! அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன் 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)