2023-03-13 483

இவர்கள் விட்ட நோன்பிற்கு என்ன பரிகாரம்?

கேள்வி: இவர்கள் விட்ட நோன்பிற்கு என்ன பரிகாரம்?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக!

மாதத்திற்கு  ஒரு முறை எனும் அடிப்படையில் சீராக மாதவிலக்கு அடையும் பெண்களுக்கு சடுதியாக ஒரு மாதத்தில் இடைநடுவே மாதவிலக்கு வந்தால் அதாவது உதாரணமாக பத்து அல்லது பதினைந்து நாட்களில் மாதவிலக்கு  வந்து ஓரிரு நாட்களில் அவர்கள் தூய்மையானால் அவர்களின் நோன்பின் நிலைப்பாடு என்ன? நோன்பை அவர்கள் விட வேண்டுமா? இல்லையா? எனக் கேட்கின்றனர்.

வழமையாக மாதவிடாய் சுழற்சி சீராக வரக்கூடிய பெண்கள் திடீரென இம்மாற்றத்தை அடையும் போது  நோன்பை விட வேண்டியதில்லை. இதுபற்றி வைத்தியர்களிடம் நாம் ஆலோசித்த போது "திடீரென இடைநடுவே ஒரு சில நாட்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கானது மாதவிலக்காகக் கொள்ளப்பட மாட்டாது, ஏனென்றால் உடலிலுள்ள ஹோமோன்களின் மாற்றத்தால் தான் அவ்வாறு நிகழ்கின்றது" எனக் கூறினார்கள்.

எனவே, மாதவிலக்காக அதனைக் கணக்கெடுக்காமல் நோயின் காரணமாகவே இவ்வாறான அசாதாரண நிலை நிகழ்கின்றது எனக் கொள்ளவேண்டும். என்றாலும், மாதவிலக்கு சீராக வராத பெண்களாக இருந்து அவர்களிற்கு இவ்வாறு இடை நடுவே மாதவிலக்கு வந்தால் அது மாதவிலக்காகவே கொள்ளப்படும். எனவே, அவர்கள் நோன்பை விடுவார்கள்.

அதே போன்று,  சாதாரணமாக ஒரு பெண் உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது 6 அல்லது 7 நாட்கள் மாதவிலக்கோடு  இருந்து, பின்னர் உடலில் ஏற்பட்ட மாற்றங்களினாலோ அல்லது வயதான நிலையிலோ 20 அல்லது 25 நாட்கள் இறத்தப்போக்கை அடைந்தால் அவர்கள் தங்கள் வழமையான ஆறு அல்லது  ஏழு நாட்களை மட்டும் கணக்கில் கொண்டு தொழுகையையும், நோன்பையும் விடுவார்கள், அதற்குப்பின் உள்ள நாட்கள் நோயாகவே கருதப்படும். 

இவ்வாறானவர்களின் தொழுகை விடயத்தில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகாட்டலை புகாரி ஹதீஸ் கிரந்தத்தில் நாம் பார்க்கலாம். அவர்கள் வழமையான அந்த 6 அல்லது ஏழு நாட்கள் கழித்து ஏனைய நாட்களில் தொழ முடியுமாக இருப்பதால் அவர்கள் நோன்பையும் நோற்க முடியும் புரிந்து கொள்ளலாம் 

ஆக,  உடம்பில் ஏனைய பகுதிகளில் எவ்வாறு இரத்தம் வெளியானால் நோன்பு முறியாதோ அவ்வாறு இதற்கும் நோன்பு முறியாது. அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன். 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)