2023-03-09 388

பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா?

பராஅத் இரவு சிறப்புகள் நிறைந்ததா? 

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அன்பிற்குரிய சகோதரர்களே! நாம் அனைவரும் ரமழானை எதிபார்த்தவர்களாக ஷஃபான் மாதத்தில் இருக்கிறோம். ஷஃபான் மாதத்தை பொறுத்தவரையில் நபிகளார் ரமழானுக்கு தயாராகும் வண்ணம் அதிகமாக நல்லமல்களில் ஈடுபட வழிகாட்டியிருக்கிறார்கள். ஷஃபான் மாதத்தில் நபிகளார் அதிகமதிகம் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்;

நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழுமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும்.  (புகாரி 1970)

இது இவ்வாறிருக்க, இன்று எமது சமுதாயத்தில் பராஅத் இரவு எனும் அம்சம் விசேடமாக கொண்டாடப்பட்டு வருவதை அவதானிக்கிறோம். இந்த கொண்டாட்டத்தில் ரொட்டி சுடுவார்கள்; மெளலவிமார்கள் பீங்கான்களில் இஸ்ம் எழுதி குடிக்கக்கொடுப்பார்கள்; கழுத்திலும், இடுப்பிலும் கட்டிக்கொள்வதற்கு துஆக்களையும் எழுதிக்கொடுப்பார்கள். மேலும் ஷஃபான் பிறை 15 இல் பராஅத் நோன்பு என்றொரு நோன்பையும் நோற்பார்கள். 

இந்தக்காரியங்கள், சுவர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் நன்மையான காரியங்களாக இருக்கவேண்டும். அல்லது நரகத்திற்கு இட்டுச்செல்லும் வழிகேடாக இருக்க வேண்டும். 

உண்மையில் அது நன்மையான காரியம் என்றிருந்தால் நபிகளார் அதை செய்திருக்க வேண்டும். அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும். அந்த அடிப்படையில், நபிகளார் இதை செய்திருக்கிறார்களா எனப்பார்க்கும் போது- 

நபிகளாரும் ஸஹாபாக்களும் ஷஃபான் பிறை 15 இல் ரொட்டி சுட்டு கொண்டாடியதாகவோ, இஸ்ம் எழுதியதாகவோ, துஆ எழுதியதாகவோ எந்த ஆதாரத்தையும் காணமுடியாது. 

ஷஃபான் பிறை 15 அனல் இரவை பராஅத் இரவு இரவு என்றும் அது சிறப்புக்குரிய இரவு எனவும் கருதி பலர் நோன்பு நோற்பதை காண்கின்றோம்  ஆனால் இது நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டாத ஒரு வழிபாடாகும் மாறாக வழமையாக ஒவ்வொரு மாதமும் அய்யமுல் பீழ்’உடைய நாட்களில் நோன்பு நோற்பவர் ஷஃபான் மாதத்திலும் நோற்கிறாரென்றால் அது சுன்னத்தான காரியமாகும். ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15-அய்யாமுல் பீழ்-வெள்ளை நாட்கள் என்கிறோம்.  அவை வானத்தில் சந்திரன் அதிகமாக பிரகாசிக்கக்கூடிய நாட்கள் ஆகும்.

1400 வருடங்களுக்கு முன்னர் நபிகளார் கூறிய வணக்கங்கள் மாத்திரமே கியாம நாள் வரை வணக்கங்களாக இருக்கும். முறையாலும், வடிவத்தாலும், அளவாலும் அந்த வணக்கங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டும். இதேவேளை ஷஃபான் பிறை 15 இல் நோன்பு நோற்பதற்கும், அந்நாளில் மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும் சில செய்திகள் இடம்பெறுகின்றன. 

அலி(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது:

ஷஃபான் மாதத்தின் அரைப்பகுதியின் இரவு வந்து விட்டால் அதன் இரவில் நின்று வணங்குங்கள், மேலும், அதன் பகல் பொழுதில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தஆலா அன்று இரவு தனது அடியார்களைப் பார்த்து உங்களில் எவரும் என்னிடத்தில் பாவமன்னிப்பு கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு அதை வழங்குகின்றேன். உங்களில் நோய்வாய்பட்டவர் இல்லையா? அவருக்கு ஆரோக்கியமளிக்கின்றேன் என்று பஜ்ர் வரைக்கும் கேட்கின்றான். (இப்னு மாஜா 1388, ஷுஃபுல் ஈமான் 3542, பஃழாஇலுல் அவ்காத் 24)

ஆனால் இந்த செய்தியின் பாதைகள் அனைத்தும் பலவீனமான அறிவிப்பாளர் வரிசையூடாகவே இடம்பெறுகின்றன. இந்த செய்தி ஆதாரபூர்வமற்ற செய்தியாக இருப்பதால் அதை வைத்து நன்மை கிடைக்கும் எனக் கருதி அமல் செய்ய முடியாது. 

எனவே, இன்று நாம் ஷஃபான் மாதத்தில் எமது சமுதாயத்தில் கண்டுவரும் நடைமுறைகளை நபி(ஸல்) வாழ்க்கையிலோ நபிகளாரது வழிகாட்டலுக்குட்பட்ட ஸஹாபாக்களது வாழ்க்கையிலோ காணமுடியாது. நாபிகளார் செய்யாத வணக்கங்கள், செய்யுமாறு வழிகாட்டாத வழிபாடுகள் நிச்சயமாக சுவர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் நற்செயலாக அமையப்போவதில்லை. 

மாறாக, நபிகளாரின் மரணத்திற்கு பின் நபி(ஸல் )  கற்றுத்தராத இந்த வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவற்றை பின்னால் வந்தவர்கள் வணக்கமாக எடுத்துக்கொண்டு அந்நாளை மட்டும் விசேடமாக ஆக்கிக்கொள்வார்களாயின் அது மார்க்கத்தில் இடைச்செருகல் செய்த குற்றத்தைச்சாரும். இவ்வாறு மார்க்கத்தில், மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் இடைச்செருகல்களைத்தான் பித்அத் என்கிறோம். இவ்வாறான பித்அத்கள் ஒவ்வொன்றும் வழிகேடுகள் என நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள். அந்த வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்பதையும் குறித்துக்காட்டியிருக்கிறார்கள். 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: 

நபியவர்கள் தமது உரைகளில் பின்வருமாறு கூறுவார்கள்: 

வார்த்தைகளில் மிக உண்மையானது அல்லாஹ்வின் வார்த்தையாகும். வழிகாட்டல்களில் சிறந்தது முகம்மத் ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதுமைகளாகும். ஒவ்வொரு புதுமையும் பித்அத்தாகும். பித்அத் ஒவ்வொன்றும் வழிகேடாகும். (முஸ்லிம் 867) 

எனவே அன்பிற்குரிய, சகோதரர்களே! எமது சமுதாயத்தில் இந்த நடைமுறை பல காலங்களாக இருந்து வந்தாலும் எங்கள் தலைவர், மார்க்கத்தின் வழிகாட்டி, இறைவனின் திருப்பொருத்தத்திற்கான வழிமுறைகளை காட்ட வந்த அன்பு நபி (ஸல்) அவர்கள் இதற்கான எந்த ஒரு வழிகாட்டலையும் காட்டவில்லை.   

இந்த பராஅத் இரவு  அல்குர்ஆன் வசனத்தை தவறாக புரிந்ததினால் உருவானது . மார்க்கத்தில் கிடையாது;

அதாவது இந்நாட்களில் அநேக பள்ளிவாயில் மிம்பர்களில் பராஅத் இரவின் சிறப்பைப்பற்றி குத்பா ஓதுவார்கள். இந்நாளில் எல்லோருடைய பாவங்களும் மன்னிக்கப்படும் இது ஒரு பரகத்தான இரவு என்கிறார்கள். மேலும், அவர்கள் “இந்த குறிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த வருடம் வரை மக்கள் செய்யக்கூடிய நன்மைகள், தீமைகள் செயற்பாடுகள் பற்றிய விவகாரம் அல்லாஹ்விடமிருந்து மலக்குமார்களிடம் ஒப்படைக்கப்படுகிறது” எனவும் கூறுகிறார்கள்.

இந்த இரவு பரகத்தான இரவு என்பதற்கு சூறா துகான் 2ஆம் வசனத்தை ஆதாரமாக மக்களுக்கு முன்வைக்கிறார்கள்.  நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்” (துகான்:02)

இந்த வசனத்தில் பரகத் பொருந்திய இரவு என சுட்டிகாட்டப்படுவது ஷஃபான் பிறை 15 ஆம் நாளான பராஅத் இரவே ஆகும்  என அவர்கள் எடுத்துச்சொல்கிறார்கள்.

உண்மையில் இந்த வசனத்தில் குறிக்கப்படுவது அந்த இரவு அல்ல. மாறாக அது லைலதுல் கத்ர் எனும் இரவாகும். 

அல்குர்ஆனுக்கு நூற்றுக்கணக்கான விரிவுரை-தப்ஃஸீர் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வசனத்திற்கு விரிவுரை செய்த அறிஞர்கள், அரபு உலகத்தில் இதுவரை காலமும் வாழ்ந்த அறிஞர்கள் எவரும் இந்த வசனத்தில் சொல்லப்படும் இரவு ஷஃபான் பிறை 15 இன் இரவாகும் எனச்சொல்லவில்லை. ஆதாரமில்லால் ஒரு அறிஞர் இந்த கருத்தை கூறியதாக மாத்திரம் இடம்பெறுகிறது. இதுபோக, இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு தப்ஃஸீர் செய்த அனைத்து விரிவிரையாளர்களும் இது லைலதுல் கத்ருடைய இரவாகும் என்பதைத்தான் கூறியிருக்கிறார்கள்.

அல்லாஹ் தஆலா இது பற்றி மேலதிகமாக சூறா கத்ர்’இல் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான். நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)  (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம் மேலும் கத்ருடைய இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?” (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்” (ஸூறா கத்ர்:01,02,03)

அல்லாஹ் தஆலா இந்த வேதத்தை லைலதுல் கத்ர் எனும் இரவில் இறக்கி வைத்தான் என்று சொல்கிறான். அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்றும் சொல்கிறான். ஒரு இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததென்றால் அது கிட்டத்தட்ட எண்பது வருடங்களை விட சிறந்தது. இப்படிப்பட்ட இரவை விட பரகத்தான இரவு வேறு எந்த இரவும் இருக்க முடியாது.  ஆகவே, அல்லாஹ் சூறா துகான் இல் பரகத்தான இரவு என சொன்னது சூறா கத்ரில் கூறப்படும் லைலதுல் கத்ர் இரவைத்தான். 

ஏனெனில், அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம்- ரமழான் மாதம் என்பதை அல்குர்ஆன் எமக்கு கூறிக்காட்டுகிறது.

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது” (ஸூறா பகரா:185)

மேலும், அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு- லைலதுல் கத்ர் இரவு என்பதும் அல்குர்ஆனிலே இடம்பெறுகிறது. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)  (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்” (ஸூறா கத்ர்:01)

நபியவர்கள் லைலதுல் கத்ர் இரவை இறுதிப்பத்தில் தேடிக்கொள்ளுஙகள் எனக்கூறினார்கள்.இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்! (புகாரி 2021)

மேற்படி அல்குர்ஆனுக்கு விளக்கமாக அல்குர்ஆன் வசனமும், ஆதரபூர்வமான ஹதீஸும் இருப்பதால் பரகத்தான இரவு என சூறா துகானில் கூறப்படுவது லைலதுல் கத்ர் இரவு தான் என்பது புலனாகிறது. இதையே, எமக்கு முன் வாழ்ந்த அனைத்து இமாம்களும் உண்மையாக சொல்லிவிட்டுச்சென்றார்கள். 

எனவே பராஅத் இரவில் ஷஃபான் பிறை 15 ல் அல்குர்ஆன் இறங்கியது என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாத ஒரு காரியமாகும். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இதை நம்புவதும் அதன்படி அமல் செய்வதும் அல்குர்ஆனிற்கு நேர்முறனான வழிகேடாகும். 

பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறாத ஒரு விடயத்தை மார்க்கமாக சொன்னால் அது அல்லாஹ்விடத்தில் அனுமதிக்கப்படாது. 

அல்லாஹ் தஆலா கூறுகிறான் “நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்” (ஸூறா ஆலுஇம்ரான்:19)

மேலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறுகிறான்-

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (பொருந்திக்கொள்ளப்பட்ட மார்க்கமாக) தேர்ந்தெடுத்துள்ளேன்”  (ஸூறா மாஇதா:03)

ஆகவே, இந்த மார்க்கம் 1400 வருடங்களுக்கு முன்னதாகவே பூரணமாகிவிட்டது. அல்லாஹ் தஆலா அன்று மார்க்கமாக்காதது, அன்று அவன் மார்க்கமாக பொருந்திக்கொள்ளாதது இன்று நன்மை ஈட்டித்தரும் நற்காரியமாக இருக்கவே முடியாது. இல்லை, அதுவும் நற்கிரியை தான் என எவராவது கூறினால் அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் குறைகாண்கிறார். 

அன்பிற்குரிய சகோதரர்களே! இஸ்லாத்தில் அனைத்து வணக்கவழிபாடுகளையும் இவ்வாறு தான் நோக்க வேண்டும்.  பூரணப்படுத்தப்பட்ட அந்தக்காலத்தில் இல்லாத ஒரு வழிபாடு இன்று எமக்கு நன்மை பயக்கும் என எந்த அறிஞர் கூறினாலும் அது அல்லாஹ்விடத்தில் ஏற்கப்பட மாட்டாது. 

தனிமனிதர்கள் எவருக்கும் இந்த மார்க்கத்தில் கை வைக்க முடியாது. மார்க்கத்தின் பெயரால் ஒரு செய்தியை சொல்லவோ, வணக்கத்தை உருவாக்கவோ முடியாது. இம்மார்க்கத்தில் அன்னைத்தும் பூரணப்படுதப்பட்டே உள்ளன.  1400 வருடங்களுக்கு முன்னர் நபிகளார் கூறிய வணக்கங்கள் மாத்திரமே கியாம நாள் வரை வணக்கங்களாக இருக்கும். முறையாலும், வடிவத்தாலும், அளவாலும் அந்த வணக்கங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்குத்தான் அல்லஹ்விடம் மதிப்பு இருக்கிறது. காரணம் மார்க்கவிடயங்கள் எதுவும் மனித சிந்தனையினால்-குறிப்பாக முஹம்மது ஸல் அவர்களின் சுய சிந்தனையினால் கூட உருவானது அல்ல. இது தான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு. அது தான் இஸ்லாத்தின் புனிதத்துவம்.

அல்லாஹ் தஆலா கூறுகிறான் “அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை.” (ஸூறா யூசுப்ஃ:40)

எனவே சகோதரர்களே! இதை நாங்கள் புரிந்து கொள்வோம். அறியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம். 

எம்மச்சூழ இருப்பவர்கள் இன்னும் இந்த நம்பிக்கைகளில் ஊறியிருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு இவற்றில் அதிக ஈடுபாடு இருக்கிறது. இதற்கு காரணம் மார்க்கத்தை படிக்காத அறிஞர்கள், அல்லது படித்து விட்டு உண்மையை மறைக்கும் அறிஞர்களுமேயாவார்கள். அவர்கள் இருக்கும் வரை இந்த சமுதாயம் உண்மையை ஏற்றுக்கொள்வது சிரமமாகும். என்றாலும் நாம் எமது கடமைகளை செய்வோம்.

இது இவ்வாறிருக்க, ஊர் ஒரு போங்கில் இருந்தால் ஊரின் போக்கின் படியே நாமும் செல்ல வேண்டும் எனும் கொள்கையிலிருக்கும் எமது சமூகத்து மெளலவிமார்கள் உண்மைக்கு புறம்பாகவே இந்த விடயத்தை எத்தி வைத்து இந்த சமுதாயத்தை வழிகேட்டில் விட்டு விட்டார்கள்.  அதிலும் தமது வயிற்றுப்பிழைப்பிற்காக இந்த சத்தியத்தை மறைக்கும் மெளலவிமார்கள் ஏராளம் . பலகாலங்களாக  மக்களுக்கு மார்க்கம் மறைத்துச்சொல்லப்படுகிறது. 

அன்பிற்குரிய சகோதரர்களே! எங்களது சமுதாயத்திலே குறிப்பாக அல்குர்ஆன் ஆதரபூர்வமான ஹதீஸ்களில் போதிய அறிவு இல்லாத சமுதாயத்திலே, அல்குர்ஆனும், ஹதீஸ்களும் ஒருபுறமிருக்க  சமூக நீரோட்டத்திலே வந்தவையெல்லாம் மார்க்கமாக்கப்பட்டு, அவைகள் மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய மக்கள் அதிகமாக உருவானதால் சமூதாயம் இப்போது தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றது. மார்க்கக்கிரியைகளில் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வழிகாட்டல் தெரியாமல் வழிகேட்டில் போய்க்கொண்டிருக்கிறார்கள். 

எமக்கு மார்க்கவிடயங்கள் ஏதாவதொன்றில் தெளிவு கிடைத்து விட்டதென்றால் அதை நாம் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும். பக்கத்து வீட்டில் பராஅத் ரொட்டி சுடுகிறார்களா? பராஅத் நோன்பு நோற்கிறார்களா? அவர்களுக்கு மார்க்கத்தை சரியாக சொல்லிக்கொடுக்க வேண்டும். சத்தியத்தை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் எம்மை கோபித்தாலும் பிழையான காரியங்களை மக்களுக்கு சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ் உன்மைகளை விளங்கி அதன்படி செயல் பட நல்லருள்பாலிப்பானாக!

பதில்;மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)