2023-02-15 400

பர்ளுத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுவது நபிவழியா?

கேள்வி: பர்ளுத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுவது நபிவழியா? 

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

சில பள்ளிவாசல்களில் கூட்டுதுஆ ஓத மாட்டார்கள்.இன்னும்  பல பள்ளிவாசல்களில் பர்ளான தொழுகைகளுக்குப் பின்னால் கூட்டுதுஆ ஓதுகின்றார்கள்.இவ்வாறு கூட்டுதுஆ ஓதலாமா?,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இவ்வாறு ஓதினார்களா? என்று சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இது சரியா? பிழையா? என்பதைப் பார்க்க முன்னர் ஒரு விடயத்தைக் கூறலாம் என்று நினைக்கின்றேன்.அதாவது நாம் இஷாத் தொழுகையை  சத்தமிட்டும் அதேபோன்று ழுஹர் தொழுகையை மெதுவாக சத்தமில்லாமலும் ஓதித் தொழுவிக்கின்றோம்.

"ஏன் இவ்வாறு இஷாத் தொழுகையை சத்தமிட்டும் ழுஹர் தொழுகையை மெதுவாக சத்தமில்லாமலும் ஓதித் தொழுவிக்கின்றீர்கள்?" என்று கேட்கப்பட்டால் "இவ்வாறுதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் தொழுவித்தார்கள்" என்று பதிலளிப்போம்.

எனவே ஒரு வாதத்திற்கு பின்வருமாறு ஒருவர்  கேட்கலாம். 

அதாவது சுபஹ், மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகைகளைத் தொழுவிக்கும் போது சத்தமிட்டு குர்ஆனை ஓதுவதால் வரிசையில் பின்னால் நிற்கும் மக்களில் ஓதத் தெரியாமல் இருப்பவர்களும் இமாம் ஓதுவதைக் கேட்டு அதைப் பின்துயர்ந்து ஓதிவருகின்றனர். ஆனால் ழுஹர் மற்றும் அஸர்  தொழுகைகளை சத்தம் இல்லாமல் மெதுவாக ஓதித் தொழுவிக்கும் போது வரிசையில் ஓதத் தெரியாத ஓதத் தெரியாத மக்களை கருத்திற்கொண்டு

சுபஹ்,மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகைகளை சத்தமிட்டு தொழுவிப்பதைப் போன்று ழுஹர் மற்றும் அஸர் தொழுகைகளையும் சத்தமிட்டு தொழுவிக்கமுடியும் தானே?  அவ்வாறு சத்தமாக தொழுகை நடத்துவதால் மக்கள் அனைவரும் அவற்றை செவிமடுத்து ஓதுவார்கள் தானே?

என கேட்கப்பட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?.

"ஆம்.அது நல்ல விடயம் தான்"என்று அந்தக் காரியத்தை அனுமதிப்பீர்களா? அல்லது இவ்வாறு ஒரு போதும் செய்ய முடியாது என்று கூறுவீர்களா? என்று கேட்கின்றேன். அதாவது நீங்கள் அனைவரும் இவ்வாறு செய்வதற்கு முடியாது என்றே கூறுவீர்கள். இன்னும் இது நல்ல காரியம் தானே?, தவறில்லையே?,  எங்களில் அதிகமானவர்களுக்கு குர்ஆனில் அநேகமான சூரத்துகள் மனனமில்லை தானே? என்று மக்கள் சிலர் தரக்கத்தால் எந்த மௌலவியாவது அனுமதிப்பாரா? 

இல்லை , மாறாக அவர்கள் கூறுவதைப் போன்று செய்திட முடியாது. காரணம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் எவ்வாறு காட்டித்தந்தார்களோ அவ்வாறே தொழவேண்டும் , அதற்கு மாற்றமாக செய்ய முடியாது என்று நீங்கள் கூறுவீர்கள்.

ஆக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சத்தமிட்டு ஓதித் தொழுவித்த தொழுகைகளை சத்தமிட்டும் இன்னும் சத்தமிடாமல் அமைதியாகத் தொழுவித்த தொழுகைகளை அமைதியாகவும் தொழுவிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் புரிகின்றதல்லவா?  ஏனெனின் நாங்கள் அனைவரும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்ற வந்தவர்களே தவிர புதிதாக அவர்கள் சொல்லாத, செய்து காட்டாத  ஒன்றை உருவாக்க வந்தவர்கள் அல்ல.

இந்த அடிப்படையில்  பர்ளான  தொழுகைகளுக்குப் பின்னால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சத்தமாக கூட்டுதுஆ ஓதி சஹாபாக்கள் அதற்கு ஆமீன் சொன்னதாக எந்த ஒரு செய்திகளும் இடம்பெறவில்லை. அதிலும் குறிப்பாக இவ்விடயத்தில் ஒரு பலவீனமான ஹதீஸ் பதிவாகியிருப்பதைக் கூட நாம் காணவில்லை.

வேறு சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் கேட்டுருந்தால் அதை ஆதாரமாக வைத்து அவர்கள் தனிமையில் பிராத்தித்த இட்த்தில் கூட்டாகப் பிராத்தித்து நபி (ஸல் ) அவர்களில் வழிமுறையை மாற்றி அமைக்கக்கூடாது- ஏனெனில் அவர்களின் வழிமுறையே திக சிறந்த முறை என்பதை நீங்கள் யாரும் மறுக்கமாட்டீர்கள் . அது நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்துவதாக ஆகிவிடும் . அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆகவே,விடயம் இவ்வாறிருக்க இதை செய்தால் குற்றமா? என்று கேட்பது தவறாகும்.இவ்வாறு கேட்பதானது ழுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழும்போது சத்தமிட்டு ஓதித் தொழுவித்தால் குற்றமா? என்று கேட்பது போன்றாகும்.

அத்தோடு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மார்க்கமாக செய்யாத ஒன்றை நாம் செய்வது "நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் செய்தது பூரணமில்லை" என்று எண்ணியதாகிவிடும்.  ஏனெனின் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக அவர்கள் செய்து காட்டாத ஒரு விடயத்தை அவர்களின் மரணத்திற்குப் பின்னர் யார் ஒருவர் மார்க்கம் என்ற பெயரில் உருவாக்கினாலும் அது வழிகேடாகவே

அமையும். இன்னும் வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும். 

அல்லாஹ் தஆலா அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி).