2023-02-13 472

அல்குர்ஆனில் ஆதாரபூர்வமாக வரக்கூடிய ஸஜதாக்கள் எத்தனை?

கேள்வி: அல்குர்ஆனில் ஆதாரபூர்வமாக வரக்கூடிய ஸஜதாக்கள் எத்தனை?

பதில்:  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அல்குர்ஆனை ஓதும் போது ஸஜதாவுடைய வசனங்கள் இடம்பெற்றால் சுஜூத் செய்ய வேண்டும் என்பது நாம் அறிந்த விடயமே. இதில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம்பெறும் ஸஜதாக்களைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அல்குர்ஆனில் 14, 16 என 10க்கு மேற்பட்ட இடங்கள் ஸஜதாவுடைய இடங்களாக குறிக்கப்பட்டிருந்தாலும் 04 இடங்கள் தான் ஸஜதாவுடைய இடங்களாக ஆதரபூர்வமான ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கிறது. ஏனைய இடங்களில் நபி (ஸல்) சுஜூது செய்ததாக வரக்கூடிய ஹதீஸ்கள் பலயீனமான ழயீபானதாக இருப்பதால் அவைகளை இங்கு குறிப்பிடவில்லை. மாறாக அந்த 04 இடங்களையும் சுட்டிக்காட்டிக்கொள்கிறேன்.  

நபி(ஸல்) அவர்கள் சூறா ஸாத், சூறா நஜ்ம், சூறா இன்ஷிகாக், சூறா அலக் போன்ற சூறாக்களை ஓதும் போது ஸஜதா செய்திருக்கிறார்கள். 

இது பற்றிய ஹதீஸ்களின் விபரம் பின்வருமாறு:

இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்; 

சூறா ஸாத் ஓதப்படும் போது ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை. (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன். நூல் : புகாரி 1069, 3422

இப்னு மஸ்ஊத்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்; 

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்ம் அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, இவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன். நூல் : புகாரி 1067, முஸ்லிம் 576

அபூ ராஃபி அறிவிக்கிறார்கள்;

அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, “இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். பிறகு, “நபியவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்கள். நூல் : புகாரீ 768

அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்;

இதஸ்ஸமாஉன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம். நூல் : முஸ்லிம் 578

ஆக,  இது அல்லாத மற்றைய இடங்களில் ஸுஜூத் செய்வது குறித்து  அறிஞர்கள் பற்பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் நபிகளார் ஸுஜூத் செய்ததாக இடம்பெறும் மிக வலுவான அறிவிப்புக்களின் படி மேற்சொன்ன 04 இடங்களையும் தான் கூறிக்கொள்ளலாம். 

சகோதரர்களே! பள்ளிவாயல்களில் தொழுகை நடாத்தும் போது இந்த நான்கு சூறாக்களையும் ஓதி தொழுவிக்கலாம். பொதுவாக, சூறா இகரஃ இனை ஓதி தொழுவிப்பார்கள். அதன் போது ஸஜதா செய்து தொழுவிப்பர்கள். ஆனால் சூறா இன்ஷிகாக் ஓதப்பட்டு சுஜூத் செய்யப்படும் வீதம் குறைவாகும். இவ்வாறில்லாமல், இந்த சூறாக்களையும் நாம் ஓதி தொழுவிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சுஜூத் செய்தது போன்று நாமும் சுஜூத் செய்ய வேண்டும். மக்களுக்கு இதை அறிமுகப்படுத்த வேண்டும். 

இதேவேளை, இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய ஒரு விடயம் வெள்ளிக்கிழமை நாட்களில் சுபஃ தொழுகையில் சூறா ஸஜதா ஓதி தொழுவிப்பது சுன்னத்தாகும். ஆனால், அந்த சூறாவை ஓதும் போது நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்ததாக எந்த செய்தியையும் நாம் ஸஹீஹான ஆதாரமூர்வமான ஹதீஸ்களில் காணவிலை. இதையும் நாம் கட்டாயம் கருத்திற்கொள்ள வெண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன். அல்லாஹ் தஆலா எம் அனைவரையும் அவனது மார்க்கத்தில் விளக்கம் பெற்றவர்களாக ஆக்குவானாக.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி