2023-02-11 305

நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா?

கேள்வி: நோன்பாளி நோன்பு நோற்ற நிலையில் பல் துலக்க முடியுமா? பல்வலிக்கு கராம்பை பயன்படுத்த முடியுமா?

பதில்:அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மா பஃத்.. மார்க்கத்தில் அழ்ழாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் தடுத்த விடயங்களை தவிர மற்றனைத்தும் அனுமதியானவை என்பதை நாம் அறிவோம். 

இந்த அடிப்படையில் நோக்கும் போது ஒரு மனிதர் நோன்பு நோற்ற நிலையில் செய்ய முடியுமான, முடியாத அனைத்து காரியங்களையும் மார்க்கம் தெளிவுபடுத்தி இருப்பதைக் காணலாம். நோன்பு நோற்ற நிலையில் ஒரு நோன்பாளி பல் துலக்குவதால் நோன்பு முறிந்து விடும் என்ற எவ்விதமான தடைகளையும் அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலிலும் நாம் காணவில்லை.

மாறாக, பல் துலக்குவதை நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வலியுறுத்தியுள்ளதை கீழ்வரும் ஆதாரமான ஹதீஸில் காணலாம்....

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்கு அல்லது ‘மக்களுக்கு’ நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று(அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி (887)

மேலும், நோன்பாளி பல் துலக்குவது அனுமதியாகாது என்ற கருத்தில் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய கீழ்வரும் ஹதீஸை தவறாக விளங்கி அதனை தம் கருத்திற்கு ஆதாரமாக கொள்வதைக் காணலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளியின் வாய் வாடையானது கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி (5927)

மேற்கூறப்பட்டுள்ள அறிவிப்பில் ஒரு நோன்பாளிக்கு அல்லாஹ்விடம் காணப்படும் சிறப்பு கூறப்படுகின்றதே தவிர மனிதர்களுக்கு மத்தியில் நாம் பல் துலக்க கூடாது என்ற எவ்வித தடையும் வரவில்லை. 

ஏனெனில் நோன்புடன் இருக்கும் வேளையில் வாய்வாடை அதிகமாக இருக்கும் என்பதால் அதைப்பற்றி அடியான் கவலைப்பட வேண்டியதில்லை , அல்லாஹ் அதனை வெறுக்கவில்லை என சுட்டிக்காட்டவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது . என்றாலும் இதை தவறாக விளங்கிய சிலர் பல் துலக்குவதால் வாய் வாடை நீங்கிவிடும் , வாய் வாடையை ஏற்படுத்துவற்காக நாம் துலக்க கூடாது என கருதுகின்றனர். 

இக்கருத்திற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

மேலும், பல் துலக்குவதற்காக நாம் பயன்படுத்தும் பற்பொடி, பற்பசை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி இருப்பினும் அவற்றை வாயினுள் செல்லாமல் வெளியேற்றிவிட வேண்டும். இதேபோல் பல்வலிக்கு கராம்பை ஒருவர் பயன்படுத்துவது அனுமதியாக இருப்பினும் அதன் சுவை கலந்த உமிழ்னீர் உற்செல்லாமல் வெளிவேற்றுவது கட்டாயமாகும். 

ஆக, மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மார்க்க விடயங்களில் எல்லை மீறாமல் எம் வாழ்வை அமைத்துக்கொள்ள அல்லாஹு தஆலா அருள்புரிவானாக... 

பதில்: மௌலவி M.I.அன்சார்(தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)