2023-02-03 424

ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா?

கேள்வி: ஒரு பெண் அழகுக்காக தன் நகங்களை நீளமாக வளர்க்கலாமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! சில பெண்கள் தங்களுடைய நகங்களை நீளமாக வளர்க்கின்றனர், அவர்கள் அதிலுள்ளை அழுக்குகளை  எடுத்த போதிலும் அழகுக்காக நீளமாக வளர்க்கக்கூடிய மேற்கத்தேயே பெண்களிடம் சாதாரணமாக காணப்படும்  கலாச்சாரமாக இது இருக்கின்றது. 

இவ்வாறு சில நகங்களை அல்லது அனைத்து நகங்களையும் நீளமாக வளர்ப்பது மார்க்கத்தில் அனுமதியான விடயமா? ஒரு கணவன் தன் மனைவியின் நகம் நீளமானதாக இருக்க வேண்டும் என விரும்பி, மனைவிக்கும் அவ்வாறு வளர்ப்பது விருப்பமாக இருந்தால் அவ்வாறு வளர்த்துக் கொள்ளலாமா??

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த மார்க்கத்தில் அனைத்து விடயத்திற்கும் வழிகாட்டியிருக்கின்றார்கள். உதாரணமாக தாடியை நீளமாக வளருங்கள் என்றும் மீசையைக் கத்தரியுங்கள் என்றும் அக்குள் முடியை பிடுங்குங்கள் என்றும் வழிகாட்டினார்கள்.

அதேவேளை "யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை" எனவும் காரமாகக் கூறியுள்ளார்கள், அதே போன்று நகத்தை பொறுத்தவரை கீழ் வருமாறு கூறினார்கள்:

 அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் " மீசையை கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் 40 நாட்களுக்கு மேல் விட்டுவைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்படடிருந்தது. (முஸ்லிம் : 431)

எனவே தங்களுக்கு அழகாக உள்ளது என்பதற்காகவோ, கணவன் விரும்புகின்றான் என்பதற்காகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்  வழிமுறையை மீற முடியாது, மாறாக அவர்கள் வழிகாட்டியவாறே  நாம் செய்ய வேண்டும்.

சிலர் நகத்தை 1cm அல்லது 3cm அல்லது 4cm நீளமாக வளர்க்கின்றனர், அவ்வாறு அவர்கள் நகங்களை அழகாக்க விரும்பினால் அது ஒரு நகம் என்றாலும் சரிதான் பல நகங்கள் என்றாலும் சரிதான் 40 நாட்களை விட அதிகமான நாட்கள் வளர்க்க முடியாது, மாறாக  40 நாட்களுக்குள் அவற்றை வெட்டிவிட வேண்டும்.

எங்களுக்கு பிடிக்கும் என்பதற்காகவோ அல்லது கணவனிற்கு பிடிக்கும் என்பதற்காகவும் நகத்தை வளர்த்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மாறுசெய்யாமல்  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிர்ணயித்த எல்லையோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது தொழுது, முகத்திரை (face cover) அணியக்கூடிய எத்தனையோ  பெண்கள், அரபிப் பெண்கள் நகங்களை வளர்க்கின்றனர் எனக்கூறி தாங்களும்  நகங்களை வளர்க்கின்றனர். எனினும் அரபிப் பெண்களும் சாதாரண பெண்களே தவிர அவர்கள் சுவர்க்கத்திற்கு நன்மாராயணம் கூறப்பட்டவர்கள் இல்லை.

பெரும்பாலும் ஆண்கள் 7 நாட்களுக்குள் நகங்களை வெட்டிவிடுவார்கள், பெண்கள் தான் மேற்கத்தேயே கலாச்சாரத்தினுள் ஈர்க்கப்பட்டு இவ்வாறு வளர்க்கின்றனர்.

நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வழிகாட்டலையே பின்பற்ற வேண்டும் அதற்கு மாற்றமாக  மேற்கத்தேயே நாகரீகம் என்ற பெயரினால் ஷைத்தானிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கோபத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது, ஏனென்றால் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டலை மீறும் போது அல்லாஹ்வின் கோபப்பார்வை இறங்கும் என அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

‎"فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ"

"(நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்பவர்கள் (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்துவிடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்துவிடுவதையோ பயந்துகொள்ளட்டும்" (சூறா அந்நூர் : 63)

எனவே நகத்தை அழகிற்காகவோ அல்லது கணவன் விரும்புகின்றான் என்பதற்காகவோ 40 நாட்களை விட அதிகமான நாட்கள் வளர்ப்பது அனுமதியாகாத விடயமாகும்.

அல்லாஹ் எம் அனைவரிற்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையை சரியாக பின்பற்றி நடக்க நல்லருள் பாலிப்பனாக!

அல்லாஹ் தஆலா மிக அறிந்தவன். 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)