2023-01-23 179

பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?

கேள்வி: பெற்றோர் அல்லாதவர்களுக்காக பதில் ஹஜ், உம்ரா செய்யலாமா?

பதில் : அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி அஜ்மயீன் அம்மா பஃத்

எமது சமுதாயத்தில் இன்று ஹஜ், உம்ரா கிரிகைகள் அதிகமானோரால் நிறைவேற்றப்பட்டு வருவதை பரவலாக நம்மால் காண முடிகிறது. ஆனால் அதிகமானோரால் வினவப்படும் கேள்வி தான் "ஒருவர் தன் உறவினர்களுக்காக (அவர்களுக்கு பகரமாக) தான் ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்ற முடியுமா?" என்பதாகும்.

இது தொடர்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்த ஓர் ஆதாரமான ஹதீஸ் பின்வருமாறு :

இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹூ) அறிவிக்கிறார்கள் :

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ‌ர்க‌ள் (ஹஜ்ஜுடைய நேரத்தில்) "சுப்றுமாவிற்காக விடையளிக்கிறேன் " என்று ஒரு மனிதர் கூறுவதை செவிமடுத்தார்கள். (அப்போது) "சுப்றுமா என்றால் யார்? " என (அம்மனிதரிடம்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவ‌ர்க‌ள் கேட்டதற்கு "எனது சகோதரன்" அல்லது "எனது உறவுக்காரர்" என (அம்மனிதர்) கூறினார். (அப்போது) " நீங்கள் உமக்காக ஹஜ் (கிரிகையை)  நிறைவேற்றியுள்ளீர்களா?" என (அவரிடம்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கேட்டார்கள். (அதற்கு)  அவர் "இல்லை" எனக் கூற "(முதலில்) உனக்காக ஹஜ் செய்து கொள்; பின்னர் சுப்றுமாவிற்காக ஹஜ் செய்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவ‌ர்க‌ள் கூறினார்கள். (சுனன் அபிதாவூத் - 1811)

இந்த ஹதீஸ் விடயத்தில் சிலர் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதிலும் இமாம் இப்னு ஹஜர், இமாம் அல்பானி (ரஹிமஹுமல்லாஹ்)  ஆகியோர் ஆதாரமானவையாக கருதுகின்றனர். நானும் எனது ஆய்வின் பின்னர் ஆதாரமானதாகவே காண்கிறேன். 

ஆகவே இந்த ஹதீஸ் மூலம் ஒருவர் தனது உறவினர்களுக்காக ஹஜ், உம்ரா செய்ய நாடினால் அவர் அதற்கு முன்னரே அவருக்காக ஹஜ், உம்ராவை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்றும் ஒருவர் நோய்வாய் பட்டதனாலோ அல்லது பலவீனமடைந்ததனாலோ அவரது உறவினர்களில் ஏற்கனவே ஹஜ், உம்ராவை நிறைவேற்றியவர் அக்குறித்த நபருக்கு பகரமாக சென்று அதை நிறைவேற்ற முடியும் என்பதனையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 

அல்லாஹ் எம் அனைவருக்கும் அவனது மார்க்கத்தில் தெளிவையும் அதனை எடுத்து நடக்கும் வாய்ப்பையும் தருவானாக!!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு Bபஹிய்யா ஷரயிய்யா