2023-01-19 552

தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?

கேள்வி: தாடியை வளிப்பது குற்றமான காரியமாகுமா?.

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அன்பிற்குரிய சகோதரர்களே! ஆண்கள் தாடியை வளிப்பது பாவமான காரியமா?என்று ஒரு சகோதரர் கேட்கின்றார்.

அதாவது பாவமான காரியமென்றால் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகவோ அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவிய ஒரு விடயத்தில் நாங்கள் மாற்றமாக நடப்பதாகவோ இருப்பதே ஆகும். ஏனெனின் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கட்டளையிட்டார்கள்;

'ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்'. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) ஸஹீஹுல் புகாரி:7288.

அதேபோன்று அல்லாஹ் தன் திருமறையில் சூறதுன் நூர் 63 ஆவது வசனத்தின் இறுதிப் பகுதியில்"எவர்கள் (தம் தூதராகிய)அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்" என்று கூறுகின்றான்.

ஆக அல்லாஹ்வின் கட்டளைதான் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கட்டளையும்.நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு விடயத்தில் கட்டளையிடுகின்றார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைத் தான் கூறுகின்றார்கள் என்பதாகும். எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் அவனின் தண்டனையைப் பயரட்டும்.

இப்பொழுது  ஆண்கள் தாடி வளர்க்கும் விடயத்தில் கட்டளை வந்துள்ளதா? இன்னும் தாடியை வளிப்பது பாவமான காரியமா? என்பது பற்றிப் பார்ப்போம். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யும் விடயத்தில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு ஏவினார்கள்;" மீசையை நன்கு ஒட்ட நறுக்குங்கள்(கத்தரியுங்கள்). தாடியை நீளமாக வளரவிடுங்கள்". அறிவிப்பவர்:இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு). ஆதாரம்: சஹீஹூல் புஹாரி-5893.

இங்கே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் "நீளமாக வளரவிடுங்கள்"என்ற வார்த்தையைப் பிரயோகித்துள்ளார்கள்.அதாவது  மேற்கண்ட ஹதீஸில் "தாடியை நீளமாக வளரவிடுங்கள்" என்று மொழி பெயர்த்துள்ள இடத்தில் "அஃபூ" என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது.

"அஃபூ" என்ற வார்த்தை "நீளமாக வளரவிடுங்கள்"என்ற கருத்தைப்  பொதிந்துள்ளது. எனவே இது பற்றிய விரிவான விளக்கம் தேவைபட்டவர்கள் இது தொடர்பாக நான் ஒரு தலைப்பில்  பேசியுள்ளேன்.அதைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆகவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் தாடி வளர்க்கும் விடயத்தில்  யூத, கிறிஸ்தவர்களான வேதக்காரர்களுக்கு மாறு செய்து நீங்கள் தாடியை நீளமாக வையுங்கள் என்று கூறுகின்றார்கள். அவ்வாறே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களும் தாடி வைத்தார்கள். மற்றவர்களையும் வைக்கச் சொன்னார்கள்.

இன்னும் சஹாபாக்களில் எவரும் தாடியை வளித்ததாகவோ அல்லது தாடியைக் மிக சிறியதாக குறைத்தாகவோ ஹதீஸ்கள் இடம்பெறவில்லை. எனவே ஆண்கள் தாடி வைப்பதென்பது - அது மார்க்கத்தில் சொல்லப்பட்ட  கடமையான ஒரு விடயமாகும். இது தவிர்ந்து நாம் 'தாடி வளர்ப்பது பிழை' என்றோ அல்லது அது ஒரு 'கேவலமான காரியம்' என்றோ நினைப்பது - அது எம் அறியாமையாகும்.

இன்று சீக்கியர்கள் என்றொரு சாரார் உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.அவர்களில் ஆண்கள் அனைவரும் தாடி வைப்பார்கள். ஏனென்றால் அவர்களின் மார்க்கத்தில் அது கடமை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் .

இவ்வாறுதான் ஆரம்பத்தில் எமது சமுதாயத்திலும் இருந்தது.ஆனால் தற்போது எங்களைச் சுற்றியுள்ள பிற சமுதாயத்தினரின் கலாச்சாரத்திற்கு நாங்கள் அடிபணிந்து அவர்களின் பண்பாடுகளை நாம் உள்வாங்கி அவர்களைப் போலவே மாறிவிட்டோம்.

உண்மையில் தாடி என்பது ஒரு முஸ்லிமான ஆணுக்கு  அடிப்படையிலே அவனுடைய முகத்தில் இருக்க வேண்டிய ஒன்றாகும்.அது அவனுக்கு ஏவப்பட்ட கடமையுமாகும். அக் கடமையை அவன் நிறைவேற்றாமல் விடுகின்ற போது அவன் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்  என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்; "உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்" என்று எச்சரித்தார்கள் 

நாங்கள், "இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், `வேறெவரை?` என்று பதிலளித்தார்கள்".  அறிவிப்பவர்:அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழியல்லாஹு அன்ஹு). ஆதாரம்:ஸஹீஹூல் புகாரி-3456.

இவ்வாறு  யூத, கிறிஸ்தவர்களையும், அவர்களின் கலாச்சாரங்களையும் பின்பற்றக்கூடாது என்பதற்காக  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் எங்களை எச்சரித்தார்கள். எனவே நாங்கள் எங்களுடைய தலைவரும் மற்றும் சுவர்க்கதிற்குரிய எமது வழிகாட்டியுமான எமது உயிரிலும் மேலானவர் என்றழைக்கப்படுகின்ற எமது இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களையே நாம் பின்பற்றியாக வேண்டும்.

என்றாலும் இன்று எமது சமூகத்தில் ஒரு சில பண்பாடுகளை சிலர் பின்பற்றி வருகின்றார்கள். அதாவது ஒருவர் ஒரு சினிமா நடிகரை  விரும்பினால் அந்த நடிகரைப் போன்று ஆடைகளை அணிந்து அவர் முடி வெட்டுவதைப் போன்று முடி வெட்டி அவர் தாடி வைப்பதைப் போன்று தாடியும் வைத்து வருகின்றனர்.

அதேபோன்று தான் ஒரு அரசியல் தலைவர்  எவ்வாறோ அவ்வாறே அவருடைய பிரியர்களும் அவரைப் பின்பற்றி வருகின்றார்கள். ஒரு முஸ்லிம் அவன் பின்பற்றுவதற்குரிய மிகச் சிறந்த வழிகாட்டி முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் ஆவார்கள்.

ஆக அவர்கள் தாடி வளர்க்கும் விடயத்தை வெறுமனே உலக விவகாரத்திற்காக ஏவாமால்  மார்க்க விடயத்திற்காகவே அதனை ஏவினார்கள். எனவே அது தவிர்ந்து நாம் தாடியை வளிப்பதென்பது ஹரமான(பாவமான) காரியமாகும். எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்பட்டு அவனின் தண்டனையிலிருந்து விலகி இன்னும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களை உண்மையாக நேசித்து அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவோம்.

-அல்லாஹ் மிக அறிந்தவன் -

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி