2023-01-17 122

இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!!

இரவு நேரங்களில் அதிகம் பாவம் செய்பவர்களே!! 

அல் ஹம்துலில்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

இந்த நவீன காலத்தில் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக வாலிபர்கள் இரவு நேரங்களை பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பமாக பாவித்துவருகிறார்கள். ஏனெனில் பகல் நேரங்களில் செய்தால் அதனை ஏனைய மனிதர்கள் கண்டுகொள்வார்கள் என்ற காரணத்தால் யாரும் அறியாத வண்ணம் இரவு நேரங்களில் தமது தனி அறைகளில் தனிமையில் இருந்து கொண்டு அல்லது பாவம் செய்யக்கூடிய தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக internet (இணையத்தள) வசதிகள் அதிகம் நிறைந்துள்ள இ‌ந்த உலகில் சாதாரணமான முறையில் பாவங்களை விட்டும் தூரமாக எண்ணி வாழும் முஸ்லிம்களையே  சருக செய்யக்கூடிய வகையில் வீடியோக்கள், புகைப்படங்கள், சினிமா என்று பல விடயங்களை இன்று சர்வ சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான தவறான செயல்களை யாருக்கும் தெரியாமல் செய்கின்றோம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான்:

‎ يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا‏

இவர்கள் மனிதர்களிடமிருந்து மறைந்து விடுகின்றனர்; ஆனால்

அல்லாஹ்விடமிருந்து மறைந்து கொள்ள முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத பேச்சுக்களில் அவர்கள் இரவில்  ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் முழுமையாக அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:108)

அதாவது மனிதர்கள் அறியும் வகையில் தீய செயல்களை செய்தால் தம்மைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்பதனால் அவர்களிடம் இருந்தும் மறைத்துக் கொள்ளும் மனிதன் எந்நிலையிலும் அவனது ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் செயலையும் எவ்வித தடையும் இன்றி அறியக்கூடிய, ஒரு அணுவின் அசைவைக்கூட துல்லியமாக அறியக்கூடிய அல்லாஹ் அவனுடன் இருக்கின்றான்; அவனிடமிருந்து எந்த செயலையும் மறைக்க முடியாது என்பதை உணராமல் இருக்கின்றான்.

மேலும் இரவு நேரங்களில் அல்லாஹ் விரும்பாத பேச்சுக்களை பேசுவதன் மூலமும் தீய திட்டங்களை தீட்டுவதன் மூலமும் அவனிடமிருந்து மறைத்து விடலாம் என எண்ணுவதன் மூலம் எந்த பயனையும் மனிதன் அடைய முடியாது என்பதையும் இவ்வசனம் மூலம் தெளிவாக புரிய முடிகிறது.

இதில் நாம் அவசியம் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். நம்மை ஷைத்தான் வழிகெடுக்க எல்லா நேரங்களிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறான்; அது ஆசைகளை தூண்டுவதன் மூலமாக, தீய எண்ணங்களை ஏற்படுத்துவதன் மூலமாக என்று பல வழிகளில் சூழ்ச்சி செய்கிறான்.

அவ்வாறு நம்மை வழிகெடுக்க அவன் கையாளும் முறை தான் மனிதர்களின் பார்வையை பயந்து நமது தனிமையையும்  இரவு நேரங்களையும் பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பங்களாக பயன்படுத்த வைப்பதும் தனிமையும், இரவும் அல்லாஹ்விற்கு தடை இல்லை என்பதை மறந்தவர்களாக நாம் செயற்படுவதும் அமைகிறது.

இதனால் தான் இன்று சாதாரணமாக எம்மால் காண, செவிமடுக்க கூடியதாக இரவு நேரங்களில் திருட்டு, அனாச்சார செயல்கள் அமைகின்றன. எனவே சாதாரண மனிதர்களை பயந்து பாவங்களை மறைக்க எண்ணும் நாம் எந்நிலையிலும் அல்லாஹ்விடம் இருந்து மறைக்க முடியாது என்பதை உணர்ந்து பாவங்களை விட்டும் தூரமாகுவோம்.

மேலும் முன்னர் செய்த பாவச் சுமைகளை எண்ணி வருந்தி அல்லாஹ்விடம் தௌபா செய்து மீள்வோம். "இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்து கொண்டோம் நீ எங்களுக்கு மன்னிப்பளித்து, இரக்கம் காட்டாவிட்டால் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம்" என்ற பிரார்த்தனையை அதிகப்படுத்திக்கொள்வோம்.

எந்நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் அடியார்களாக எம்மை ஆக்குவானாக!!

 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு Bபஹிய்யா ஷரயிய்யா