2023-01-10 488

மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன?

கேள்வி: மன்ஸில் ஓதிவருவதின் பலாபலன்கள் என்ன?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நீங்கள் வணக்கங்களில் அதிகம் ஈடுபாடுடையவர்களாக இருப்பது உண்மையில் நல்ல விடயம்.என்றாலும் நாம் செய்யக்கூடிய வணக்கங்களின் விடயத்தில் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் காட்டித்தந்ததோடு மட்டும் நின்று கொள்வதுதான் நாங்கள் ஜெயம் பெற்றவர்களாக ஆகுவதற்கு வழிவகுக்கும்.

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அல்லாஹ்விற்கு மிகவும் நெருங்கியவர்கள்.  அவர்கள் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கு என்னென்ன வணக்கங்களைச் செய்தார்களோ அல்லது அவர்களின் தோழர்களுக்கு எவ் வணக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்களோ அந்த வணக்கங்களோடு மாத்திரம் நின்று கொள்வதுதான் அவர்களைப் பின்பற்றியதாக அமையும்.

ஏனென்றால் என்னென்ன நல்ல வணக்கங்கள் இருக்கின்றதோ அதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் தம் வாழ்க்கையில்  செய்துகாட்டியிருக்கின்றார்கள்.

எனவே நபிகளார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் செய்யாத வணக்கங்களை  செய்து அதன் மூலம் நாங்கள் அல்லாஹ்வை நெருங்க முடியும் என்று அவர்களின் வழிகாட்டல்களுக்குப் புறம்பாகக் கூற முடியாது.ஏனென்றால் வஹி நின்றுவிட்டது .நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் என்னென்ன நல்லமல்கள் இருக்குமோ அவற்றை எல்லாம் அறிவித்து விட்டுச் சென்று விட்டார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

அந்தடிப்படையில் தற்போது எங்கள் சமுதாயத்தில் ஓதப்பட்டு வரக்கூடிய மன்ஸிலைப் பற்றி உங்களில் சிலர் கேட்கின்றார்கள் அதாவது மன்ஸில் என்ற ஒன்றை மக்கள் ஓதுகின்றார்கள் இவ்வாறு மன்ஸிலை ஓதுவதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்களா?

அல்லது அவர்கள் அவ்வாறு கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரமான ஹதீஸ்கள் இருக்கின்றதா? என்றும் கேட்கின்றார்கள். அதாவது மன்ஸில் என்ற பெயரிலே நாளாந்தம் ஓதிவருவதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கற்றுக் கொடுத்த ஆதாரமான ஹதீஸ்கள் ஏதும் இருக்கின்றதா என்பதைப் பற்றி ஆய்வு செய்தால் அவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மன்ஸில் ஓதுவதற்கும் அதிலுள்ள சிறப்புகளுக்காக வேண்டி அவற்றில் வரக்கூடிய விடயங்களை ஓதுவதற்கும் கற்றுக் தந்தார்கள் என்று 

எந்தவொரு  ஆதாரமான செய்திகளும் வரவில்லை என்பதை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஓதக் கூடிய அந்த மன்ஸில் என்ற தொகுப்பிலே அல் குர்ஆன் வசனங்களும் இருக்கின்றன.இன்னும் அல் குர்ஆனில் இல்லாத மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட சில பிரார்த்தனைகளும் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸ்களிலே வரக்கூடிய செய்திகளும் அதிலே இடம்பெறுகின்றன.

ஆக மொத்ததில் இவற்றையெல்லாம் சேர்த்து உள்ளடக்கிய ஒரு தொகுப்புதான்  மன்ஸிலாகும். மன்ஸிலை ஓதலாமா? இல்லையா? என்பதைப் பற்றிப் பார்க்க முன்னர் ஒரு யதார்த்தத்தை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அதாவது நாம் அல் குர்ஆனை ஓதுவது எமக்கு நன்மைகளை ஈட்டித் தரக்கூடிய ஒரு அமலாகும். அதேபோன்று அல் குர்ஆனில் சில சூராக்களையும் ஒரு சில வசனங்களையும்  ஓதினால் இன்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியதாக ஆதாரமான செய்திகள் இடம்பெற்றிருப்பதை நாம் அவதானிக்கலாம்.

இவ்வாறு நாம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் காட்டித்தந்த, கற்றுத் தந்த வழிமுறைகளோடு மட்டும் நின்று கொண்டால் நாங்கள் நபிகளாரைப் பின்பற்றியவர்களாக ஆகிவிடுவோம். உதாரணமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் 'சூராத்துல் பகரா'வை ஓதுவதற்கு ஆசையூட்டினார்கள்.

அவ்வாறு ஓதக்கூடிய வீடுகளில் ஷைத்தானின் அட்டகாசம் இருக்காது என்று கூறினார்கள். அதேபோன்று 'சூறது  ஆலி இம்ரானை' ஓதுமாறு ஏவி அவை மறுமை நாளில் ஓதிய மனிதருக்கு மேகங்களைப் போன்று நிழல் கொடுத்துக்கொண்டு வரும் என்றும் கூறினார்கள்.

அதேபோன்று ஒவ்வொரு நாளும் இரவில் 'ஆயதுல் குர்சி'யையும் இன்னும்  காலையிலும் மாலையிலும் 'குல் சூறா'க்களை ஓதுவதற்கும் இன்னும் தூங்கச் செல்வதற்கு முன்னர் அவற்றை ஓதி உடம்பில் தடவுவதற்கும் கற்றுத் தந்தார்கள்.அவ்வாறே 'ஆமனர் ரசூலு 'என்று ஆரம்பிக்கக் கூடிய 'சூரத்துல் பகரா'வின் இறுதி இரண்டு வசனங்களை ஓதினால் இன்ன இன்ன சிறப்புகள் உள்ளன என்றும் வலியுணர்தினார்கள்.

எனவே நபிகளார்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கற்றுத் தந்தவற்றை நாங்கள் தாராளமாக ஓதலாம்.அதற்கு நன்மை கிடைக்கும் ஆனால் அது தவிர்ந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத் தராத மற்றும் அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை ஆய்வு செய்யாமல் அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி நாம் மார்க்கம் என நினைத்துக் கொண்டு அவற்றை  செய்து வருவது  பிழையான காரியமாகும் என்பதை  நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக 'சூரதுல் வாகிஆ' ஓதினால் வறுமை வராது என்ற ஹதீஸ் இருக்கின்றது.ஆனால் இது ஆதாரமான ஹதீஸாக இல்லை.என்றாலும் மன்ஸிலிலே 'சூரதுல் வாகிஆ'வை அதனுடைய இந்த சிறப்போடு சேர்த்துக் கூறப்பட்டதால் சிலர் 'சூரதுல் வாகிஆ'வை ஓதி வந்தால் வறுமை வராது என்றெண்ணி ஓதிக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் இவ்வாறு ஓதினால் வறுமை நீங்கும் என்று வரக்கூடிய இச் செய்தி நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் சொன்னதாக உறுதியான நம்பகமான அறிவிப்பாளர்களினூடாக இடம் பெறவில்லை.

அதேபோன்றுதான் 'சூரா யாசீன்' ஓதுவதால் எத்தனையோ சிறப்புகள் உள்ளன என்று மனிதர்களால் கட்டப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது தொடர்பாக வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமான நம்பகமில்லாத இன்னும் இமாம்களால் குறைகூறப்பட்ட அறிவிப்பாளர்களின் வாயிலாக வந்த  இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே இருக்கின்றன.

எனவே இது போன்ற செய்திகளை முழுமையாக நம்பி அவற்றை ஓதுவதால் அதில் எந்த நன்மையும் வரப்போவதில்லை. எனவே எது ஆதாரமான செய்தி? இன்னும் எந்தெந்த சூரத்துக்களை, வசனங்களை  விஷேசப்படுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது?என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இனங்கண்டு  அவற்றை ஓதிவருவது அவசியமாகும்.

இதேபோன்று தான் மன்ஸிலில் இடம் பெறக்கூடிய 'சூரதுல் முஸ்ஸம்மில்'ஐ ஓதினால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களை கனவில் காணலாம் என்ற செய்தியும். உண்மையில்  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.இதை ஏன் நான் சொல்கின்றேன் என்றால் நானும் ஒருகாலத்தில் இவற்றை எல்லாம் நம்பி ஓதிவந்தவன் தான்.அதாவது 1990 ஆம் ஆண்டிற்கு  முன்னர் எனக்கு ஆதாரமான ஹதீஸ்கள் மற்றும் ஆதாரமற்ற ஹதீஸ்கள் என்பது பற்றிய அறிவும், ஆய்வும் இல்லாத அந்தக் கால கட்டத்தில் நானும் இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தையும் நம்பி செய்து வந்தேன்.

பின்னர் யார்யாரோ மனிதர்கள் தொகுத்தவைகளை நாங்கள் வணக்கம் என்று கருதி ஓதி வருகின்றோம் என்ற விடயம் தெரிய வந்தது. இன்னும் அவர்கள் இவ்வாறு தொகுக்கின்ற போது இருளில் விறகு சேர்த்தவனைப் போன்று  நல்லதையும் இல்லாதவற்றையும் சேர்த்துத் தொகுத்திருக்கின்றார்கள்.

அதாவது இருளில் விறகு சேர்த்தல் என்றால் ஒருவர் வீரக்கொள்ளி சேர்ப்பதற்காக இரவில் சென்றார்.இரவு நேரம் என்பதால் இருளில் வேறுபிரிப்பு இல்லாமல் எல்லாக் கொள்ளிகளையும் சேர்த்துக் கொண்டு வந்து, பொழுது விடிந்ததும் அவர் தான் வீரக்கொள்ளிகளையும் இது வீரக்கொள்ளி என்று கருதி இருளில் வேறு கொள்ளிகளையும் எடுத்திருப்பதை அவதானிக்கின்றார்.

எனவே இவ்வாறுதான் மன்ஸிலிலும்.அதில் நல்லதையும் இல்லாததையும் சேர்த்துத் தொகுத்துள்ளார்கள் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆக மொத்தத்தில் மன்ஸில் என்ற தொகுப்போ அது ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களால் உருவாக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட ஒன்றுதான் என்று நீங்கள் நம்பி செயல்படுவது தவறாகும்.மாறாக அது மனிதர்களால் உருவாக்கப்பட்டு,புத்தக வடிவில் வெளியிடப்பட்டு, எமது சமுதாயத்தில் பரவிக் காணப்படுகின்றது.

மக்களில் சிலர் அதை வைத்து என்னென்ன காரியங்களையெல்லம் அரங்கேற்றிவருகின்றார்கள் என்பது நாம் அறிந்த விடயமே. அதாவது ஏதாவதொரு வீட்டில் முசீபத் ஏற்பட்டால் மௌலவிமார்களை அழைத்து மன்ஸிலை ஓத வைக்கின்றார்கள். அல்லது அதை நம்பி அவ் வீட்டிலுள்ளவர்கள் அவற்றை ஓதிவருகின்றார்கள்.

உண்மையில் இவையெல்லாம் நாங்களாக வணக்கத்தில் உருவாக்கிக் கொண்டவையே தவிர இவை மார்க்கமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக நீங்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்.அதிலும் குறிப்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கற்றுத் தந்த வழிமுறைகளின் அடிப்படையில் அவர்கள்   சொல்லித்தந்த விடயங்களை மட்டும் இனங்கண்டு அவற்றை நடைமுறைப் படுத்துங்கள்.

அல்லாஹ் பேசிய எனக்கும் உங்களுக்கும் உண்மையை விளங்கி நடக்க நல்லருள் பாளிப்பானாக!. அல்லாஹ் மிக அறிந்தவன் 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு அப்தில்லாஹ்