2023-01-02 467

மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?

கேள்வி- மனைவியின் சம்பாத்தியத்தில் கணவன் வாழலாமா?

பதில்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அன்பிற்குரிய சகோதரர்களே! சில சகோதர்களின் வாழ்க்கை மனைவியின் சம்பாத்தியத்தில் தான் போய்க்கொண்டிருக்கின்றதைப் பார்க்கிறோம். அவர்கள் தமது கடமையை செய்யாமல், தமது செலவீனங்களுக்கு தம் மனைவிமார்களைத்தான் பொறுப்பாக்கியுள்ளார்கள்.  அவர்கள் தொழில் செய்யாமல் மனைவியை அரசாங்கத்தொழிலோ அல்லது வேறு தொழில்களிலோ ஈடுபடுத்துவதன் மூலம் வருமானத்தப்பெற்று அதன் மூலமாக வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணைப்பொறுத்தவரையில் இந்த நிலையில் வாழ்வது பாவத்திற்குரிய காரியமாகும். ஏனெனில் அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான்.

“(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருப்பதாலும். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.”  (ஸூறா நிஸா:34)

மேலும் ஒரு வசனத்தில் ஆண்கள் பெண்களுக்கு அமைத்துக்கொடுக்க வேண்டிய உரிமைகளைப்பற்றி பின்வருமாறு இடம்பெறுவதை காணலாம்.

“கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு” (ஸூறா பகரா:228)

ஆகவே ஆண்கள் தம் செல்வத்திலிருந்து தம் பெண்களுக்கு செலவு செய்வது அவர் மீது கடமையாகும். அவளுக்குரிய உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை ஏற்படுத்திக்கொடுப்பது அவர் மீது கடமையாகும். கவலைக்குரிய விடயம் சில ஆண்கள் தம் மனைவிமார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருமானத்தை அமைத்துக்கொள்கின்றனர். இது போன்ற செயல்கள் சமுதாயத்தில் ஒழிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பெண்களில் தங்கி வாழும் ஆண்கள் அல்லாஹ்வைப்பயந்து கொள்ள வேண்டும்.  ஒரு பெண்னின் சம்பாத்தியம் அவளுடைய சொத்தாக சேகரிக்கப்பட வேண்டும். அது தான் அல்லாஹ் தஆலா விதித்த சட்ட வரையறைக்குட்பட்ட வழிமுறையாகும். அப்போது தான் அவளுடைய அந்த சொத்து அவளது மரணத்தின் பின் வாரிசுரிமை சட்டப்படி பிரிக்கப்படும்.  

இதற்கு மாற்றமாக கணவன் மனைவியின் சொத்தை செலவளித்து அழித்து விடுவது, அவளுடைய சம்பாத்தியத்தில் வாழ்வதென்பது அவளது சொத்துரிமையை இல்லாதொழிக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட ஆண்கள் தன் கடமையை செய்யாத பாவத்தையும், மனைவியின் சொத்தை அநியாயமாக அனுபவித்த பாவத்தையும் சுமக்க வேண்டி ஏற்படும்.

அல்லாஹ்வை அஞ்சி நடப்போம்.

நாம் நமது பொறுப்பிற்கு கீழுருப்பவர்களின்  நிறைவேற்ற வேண்டிய உரிமைகளை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்பதைப்புரிந்து எம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)