2022-12-30 282

மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?

மனைவியின் முகத்தில் அடிக்கலாமா?

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

சகோதரர்களே! குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், தகராறுகள் வருவதென்பது சாதாரண ஒரு விடயம். அதில் எம் சமூகத்தில் கணவன் மனைவிக்கு அடிக்கக்கூடிய வழக்கு இருக்கிறது. குறிப்பாக கணவன் ஆத்திரத்தில் மனைவிக்கு அடிக்கும் போது முகத்தில் அறைந்து விடுவார். இவ்வாறு முகத்தில் தாக்குவது மார்க்கத்தில் அனுமதியானதா? என்பதை நாம் பார்த்தோமெனில்-

அபூஹுறைரா (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் சகோதரனோடு சண்டையிட்டால் முகத்தில் தாக்குவதை தவிர்ந்து கொள்ளட்டும். (பார்க்க ஸஹீஹுல் புஹாரி 2559, ஸஹீஹ் முஸ்லிம் 2612, சுனன் அபீதாவூத் 4493, சுனனுல் குப்ரா லிந்நஸாஈ 7310, சுனனுல் குப்ரா லில்பைஹக்கீ 17580, முஸ்னத் அஹ்மத் 8125)

இங்கு ஹதீஸில் இடம்பெறும் قاتل எனும் அரபுச்சொல்லிற்கு சாதாரணமாக சண்டை பிடிப்பதற்கும் பிரயோகிக்கப்படும். யுத்தகளத்தில் சண்டை புரிவதற்கும் பிரயோகிக்கப்படும். ஆகவே, ஒரு முஸ்லிம் இன்னொருவரோடு சண்டை பிடித்தால் அங்கே அவர் முகத்தை தாக்குவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். முகத்தில் அடிக்கக்கூடாது.

அது யுத்த களத்திலாக இருக்கலாம். அல்லது ஒரு முஸ்லிம் அல்லாத தனிநபராக இருக்கலாம்.  அல்லது ஒரு பிராணியாகக்கூட இருக்கலாம். இது எதுவாயினும் சரி எமது மார்க்கத்தைப்பொறுத்தவரையில் முகத்தில் அடிப்பது பாவமாகும். இது இவ்வாறிருக்க, மனைவி எனும் போது முகத்தில் அடிப்பதென்பது- அதை முற்றாக தவிர்ந்துகொள்ள வேண்டும். 

மனைவியில் அதிக குறைகள், குற்றங்கள் இருப்பினும், நீங்கள் அல்லாஹ்வை பயந்தவராயின் உங்கள் கை அவள் முகத்தினளவில் நீளக்கூடாது. இது நாம் அல்லாஹ்வை அஞ்சி நடப்பதற்கான அடையாளம். ஒரு முஃமின் அல்லாஹ் தடுத்த ஒரு விடயத்தை அல்லது அவனது தூதர் (ஸல்) தடுத்த ஒரு விடயத்தை ஒருபோதும் செய்ய மாட்டான்.

தற்செயலாக உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் கையை ஓங்கினால் உடனே அவளை அடித்தது பிழையாகும் என்பதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், அல்லாஹ் தடுத்ததை செய்ததன் காரணத்தால் அல்லாஹ்விடத்திலும் பாவமன்னிப்பு கேட்கவும் வேண்டும். 

ஆகவே, உங்கள் மனைவியாக இருப்பினும் உங்கள் குழந்தைகளாக இருப்பினும் முகத்தில் அடிப்பது தவறான காரியமாகும்.

 அன்பிற்குரிய சகோதரர்களே! வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வின் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டலை பற்றிப்பிடிக்க வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருக்கும் நாம் இது போன்ற விடயங்களிலும் நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றியாக வேண்டும். எமது உணர்வுகளை நபிகளாரது வழிகாட்டலுக்குள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தஆலா எனக்கும், உங்களுக்கும் புரிந்து நடக்க நல்லருள்பாலிப்பானாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி)