2022-12-18 778

தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?

கேள்வி: தண்ணீரில் ஊதி ஓதிப்பார்க்கலாமா?.

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும் அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

நாங்கள் எங்களுடைய நோய்களுக்காக ஓதிப்பார்க்கும் வழக்கு இருக்கின்றது. இது எங்களுடைய சமுதாயத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சமுதாயத்திலும் இருக்கக்கூடிய ஒரு வழக்காகும். இவ்வாறு ஓதிப்பார்ப்பதற்கு இஸ்லாம் ஒரு சில முறைமைகளை அனுமதித்திருக்கின்றது. மற்றும் அதிலே இஸ்லாம்  அனுமதிக்காத  முறைகளும் இருக்கின்றன.

ஏற்கனவே நான் என் பல உரைகளில் அனுமதியான ஓதிப்பார்த்தல் முறைமைகளைப் பற்றிக் கூறியிருக்கிறேன். அதாவது" நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கும் போது குல் சூறாக்களை ஓதி தன் கைகளில் ஊதி அதை உடம்பில் தடவுவதுடன் அதை மூண்று விடுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்".

இன்னும் "நோய்வாய்ப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலும் இவ்வாறு செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்". அதேபோன்று, "ஒருவருக்கு விஷஜந்து தீண்டிய சந்தர்ப்பத்தில் அபூ சைய்த் (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் சூரதுல் பாதிஹாவை ஓதி அவருக்கு ஊதியிருக்கின்றார்கள்" என்றெல்லாம் நாங்கள் ஹதீஸ்களை அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஆனால், இங்கே கேட்கப்படக்கூடிய கேள்வி என்னவென்றால் "தண்ணீரிலே ஓதி ஊதி அத் தண்ணீரைக் குடிக்கலாமா?" என்பதாகும். ஏனெனின் நான் முன்னர் கூறியது போன்று இவ்வழக்கு எம்மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது. அதாவது ஒருசிலர் ஏதாவது ஒன்றை(ஒரு மந்திரத்தை) தண்ணீரில் ஓதி மற்றவர்களுக்கு அருந்தக் கொடுக்கின்றார்கள்.

பொதுவாக ஒருவர்  இவ்வாறு  ஓதுவதென்பது,அதில்  இஸ்லாம் அனுமதித்த ஓதல்களும்  இருக்கின்றன. அனுமதிக்காத ஓதல்களும் இருக்கின்றன. அவற்றில் ஓதுவதற்கு  அனுமதியில்லாத விடயங்களைப் பற்றிப் பார்க்க முன்னர் அனுமதியானவற்றைப் பற்றிப் பார்ப்போம். 

உதாரணமாக ஒருவர் சூரதுல் பாதிஹாவை ஓதி அதை தண்ணீரில் ஊதி அத் தண்ணீரை மற்றவர்களுக்கு அருந்தக் கொடுக்கின்றார். இவ்வாறு ஓதப்பட்டு ஊதப்பட்ட நீரைக் குடிக்கலாமா?,இதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அனுமதித்திருக்கின்றர்களா?

மேலும் இதற்கு வழிகாட்டியிருக்கின்றார்களா? என்பதை அவதானித்தால் உண்மையில் இவ்வாறு எவருக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தண்ணீரில் ஓதி ஊதி அதைக் குடிக்கக் கொடுத்தாக எந்த ஹதீஸையும் நாம் காணவில்லை. மாறாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதெல்லாம் பின்வருமாறுதான்.

"உங்களில் ஒருவர் (ஏதேனும்) பருகும்போது பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்". அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழியல்லாஹு அன்ஹு). ஆதாரம்: சஹீஹூல் புஹாரி-5630, பாடம் : 25,"பருகும் பாத்திரத்தில் மூச்சு விடலாகாது".

மேற்கூறப்பட்ட இந்த  ஹதீஸின் பிரகாரம் நீர் அருந்தும் போது  அப்பாத்திரத்தில் மூச்சு விடுவது,ஊதுவது மார்க்கதில் தடுக்கப்பட்ட ஒரு விடயமாகும் . மேலும் எம்  சுவாசக் காற்றானது மூக்கினாலோ அல்லது வாயினாலோ வெளியாகின்றது.

அவ்வாறு நீர் அருந்தும் போது மூச்சுவிட வேண்டிய தேவை ஏற்பட்டால் அப் பாத்திரத்தினுள்ளே மூச்சு விடாமல்  பாத்திரத்திற்கு வெளியே மூச்சு விட வேண்டும் அல்லது நீரை மிடர் மிடராகவே அருந்த வேண்டும்.இதுதான் ஒழுங்கு முறையும் கூட. இன்னும்,ஒருவர் நீர் அருந்தும் போது அப் பாத்திரத்தில் மூச்சுவிட வேண்டாம் என்று தடுக்கப்பட்டிருக்க வேறொருவர் நீர்ப் பாத்திரத்தில் ஊதி அத்தண்ணீரை மற்றவர் குடிப்பது எப்படி முடியும்?.

இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலின் பிரகாரம் மார்க்கத்தில்  தடுக்கப்பட்ட ஒரு செயலாகவே கருதப்படுமே தவிர  அனுமதியானதாகக் கருதப்படமாட்டாது. சில சமயங்களில் இவ்வாறு நீரில் ஓதி ஊதுபவர் நோய்வாய்ப்பட்டவராக இருக்கலாம்.அதிலும் குறிப்பாக அவருக்கு காசநோயோ, கொரோனாவோ பீடித்திருக்கலாம். ஆகவே அவர் அப் பாத்திரத்தில் ஓதி ஊதி மூச்சு விடுவதால் அவரின் சுவாசத்தின் மூலம் மற்றவருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம்.

மேலும் நம் சமுதாயத்தில் இருக்கக்கூடிய இப் பிழையான வழக்கை விஞ்ஞான ரீதியாக பிழை என்று அதிகமானவர்கள்  நிரூபிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நாமோ இதை அவ்வாறு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவில்லை. இதை மார்க்கரீதியாக நோக்கினால் மேலுள்ள ஹதீஸின் அடிப்படையில் இது தடுக்கப்பட்ட ஒரு காரியமாகவே அமையும்.

இது ஒரு பக்கமிருக்க எங்களுடைய சமுதாயத்தில் அதிகமானோர் "இந்த மௌலவி" மற்றும் "இந்த ஹஸ்ரத்","இவர்கள்", "இன்னார் இன்னார்" தண்ணீரில் ஓதி ஊதி  அவர்கள் ஓதி ஊதிய அத் தண்ணீரை நாங்கள் குடித்தால் எங்களுடைய நோய்கள் குணமடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் தண்ணீர் ஓதிக்குடித்து வருகின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லை.மாறாக மேற் கூறப்பட்ட ஹதீஸின் பிரகாரம் இச் செயல் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகவே அமையும் என்பதை  நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

-அல்லாஹ் மிக அறிந்தவன்-

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)-

எழுத்தாக்கம்: உம்மு அப்தில்லாஹ்