2022-12-14 643

திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?

கேள்வி: திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை முடி பிடித்துக் கொடுப்பது அவசியமா?

பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீதும், அவரது குடும்பத்தார், அவரது தோழர்கள், அவரைப் பின் துயர்ந்தோர் அனைவர் மீதும் உண்டாவதாக.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் தரப்பிலிருந்து அடிக்கடி கேட்கப்படக்கூடிய ஒரு கேள்வியாக இருப்பது "ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகின்ற போது மணப்பெண்ணின் தகப்பன் அதாவது அப்பெண்ணுக்கு வலியாக இருக்கக்கூடியவர் மணமகனிடம் பெண்ணை ஒப்படைக்கின்ற வேளையில் அம்மணப்பெண்ணின் நெற்றி முடியைப் பிடித்துக் கொடுக்க வேண்டுமா? என்பதாகும்.

ஏனெனில் மணப்பெண்ணின் வலிகாரர் அவளுடைய நெற்றி முடியைப் பிடித்து மணமகனின் கையில் ஒப்படைப்பதென்பது எங்களுக்கு மத்தியில் ஒரு வழக்காக இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் இவ்வழக்கை இஸ்லாமிய நெறிமுறையாகவும் கடைப்பிடித்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு ஏதும் திருமணத்தில் வழிகாட்டியிருக்கின்றார்களா? என்பதை உற்று நோக்கினால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு ஒரு போதும் வழிகாட்டவில்லை என்பதை நாங்கள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மக்கள் இவ்வாறு ஏன் செய்கின்றார்கள்? இந்நடைமுறை எங்கிருந்து வந்தது? என்பதை அவதானித்தோமேயாயின் இது சம்மந்தமாக வரக்கூடிய ஒரு ஹதீஸ் மக்களுக்கு சரியான முறையில் சொல்லிக்கொடுக்கப்படவில்லை என்பதனால் சமூகத்தில் இந்நடைமுறை வந்துவிட்டதைக் காணமுடியுமாக இருக்கின்றது.

அதாவது இது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ் பின்வருமாறு: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்; உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஒரு அடிமையை விலைக்கு வாங்கினாலோ அவளின் நெற்றி முடியைப் பிடித்து பரகத்திற்காக பிரார்த்தித்து யா அல்லாஹ்! உன்னிடத்தில் நான் அவளின் நலவையும், அவளின் மீது நீ படைத்து வைத்திருக்கக்கூடிய நலவையும் கேட்கிறேன்.

மேலும்,உன்னிடத்தில் நான் அவளின் கெடுதியிலிருந்தும், அவளின் மீது நீ படைத்து வைத்திருக்கக் கூடிய கெடுதியிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்" என்று அவர் கூறட்டும். இன்னும் ஒருவர் ஒட்டகம் (கால்நடை) வாங்கினால் அதன் திமிலை பிடித்து அவ்வாறே கூறட்டும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு). (ஆதாரம்: சுனனு அபீ தாவூத்-2160)

(இன்னுமொரு அறிவிப்பில் "ஒட்டகத்தின் திமிலை பிடித்து" என்பதற்குப் பதிலாக "கால்நடையின் நெற்றி முடியைப் பிடித்து" என்று இடம் பெறுகின்றது)- மேலும் பார்க்க: சுனனு ப்னி மாஜா-1918,2252) இந்த ஹதீஸின் பிரகாரம், ஒருவர் திருமணம் செய்து கொள்கின்ற போது அவர் தன் மனைவியை நெருங்கி அவளின் நெற்றிமுடியைப் பிடித்து மேற் கூறப்பட்ட துஆவை ஓதி பிரார்த்தனை செய்து கொள்வார் அல்லது ஒருவர் புதிதாக ஒரு வாகனத்தை வாங்குகின்றார். அந்தக் காலத்தில் வாகனமாக குதிரை,கழுதை பயன்படுத்தப்பட்டன. அக்கால் நடைகளுக்கு நெற்றி முடி இருந்தது.

எனவே ஒருவர் பிரயாணத்திற்காக கால்நடைகளை வாங்கினால் அதன் நெற்றி முடியைப் பிடித்து இவ்வாறு பிரார்த்தனை செய்து கொள்வார். தற்போது பிரயாணத்திற்காக இவ்வாறு கால்நடைகளைப் பயன்படுத்துவது குறைவாகும். எனவே, ஒருவர் புதிதாக வாகனத்தை வாங்குகிறார். வாகனத்திற்கோ நெற்றி முடி கிடையாது என்பதனால் அவ்வாகனத்தின் முன் பகுதியில் தன் கையை வைத்து அவர் இந்த ஹதீஸின் அடிப்படையில் துஆவை ஓதிக் கொள்வார்.

இது தவிர்ந்து திருமணத்தில் மணப்பெண்ணின் வலிகாரராக இருக்கக்கூடியவர் அவளின் நெற்றி முடியைப் பிடித்து கொடுத்து மணமகனிடம் "தன் பொறுப்பில் இருந்த இப்பிள்ளையை இதோ உங்களிடம் ஒப்படைக்கின்றேன்" என்று ஒப்படைப்பதோ அல்லது வாகனத்தை விற்பவர் புதிதாக அவரிடத்திலிருந்து வாகனத்தை வாங்கியவரிடம் அவ்வாகனத்தின் நெற்றி முடியையோ அல்லது முன்பகுதியையோ பிடித்து" வாகனம் என் பொறுப்பிலிருந்தது தற்போது அதை நான் உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கின்றேன்"  என்றோ ஒப்படைப்பதும் கிடையாது.

இவ்வாறு செய்வது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளிலிருந்துமில்லை. மாறாக இது வெறுமனே சமூக வழக்கிலிருந்து வருகின்ற ஒரு செயலாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் சமூக வழக்கிலிருப்பதை விட்டு விட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித்தந்த வழிகாட்டல்களோடு மட்டும் நின்று கொள்வது அவசியமாகும்.

ஆகவே ஒரு ஆண் (மணமகன்) தன் திருமணத்தில் மணமகளிடம் முதல் தடவையாக செல்கின்றார். அவ்வேளையில் அம்மணப்பெண் தனிமையில் இருந்தாலும் சரி அவள் அவளின் குடும்ப உறவினர்களோடு இருந்தாலும் சரி மணமகன் அவனுடைய கையினால் அவளின் நெற்றி முடியைப் பிடித்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத் தந்த அந்த துஆவை ஓதிக் கொள்வார்.

மாறாக அப்பெண்ணின் தகப்பனோ அல்லது அவளின் வலிகாரராக இருக்கக்கூடியவரோ அவளின் முடியைப் பிடித்துக் கொடுக்கமாட்டார். இதுதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும் என்பதைப் புரிந்து கொள்வோம். மேலும் இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தில் விளங்கி நடப்பதற்கு அல்லாஹ் எம் அனைவருக்கும் நல்லருள்பாளிப்பானாக!.

பதில் : மௌலவி:- M.I. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)