2022-12-13 622

தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?

கேள்வி:- தொழுகையில் மறதிக்கான சுஜுதுகளில் இரண்டு முறைகளா?

பதில்:- அல்ஹம்துலில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் தொழக்கூடிய எங்கள் ஒவ்வெருவருக்கும் ஏற்படக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சனையாக இருப்பது தொழுகையில் மறதி ஏற்படுவதாகும்.

இந்த மறதிக்காக நாங்கள் தொழுகையின் இறுதியில் இரண்டு சுஜுதுகள் செய்யக்கூடிய வழக்கு எங்களுக்கு மத்தியில் இருந்து வருகின்றது. தற்போது கேட்கப்படக்கூடிய  கேள்வி என்னவென்றால் "மறதிக்காக செய்யப்படும் இவ்விரண்டு சுஜுதுகளையும் எப்போது செய்வது?, தொழுகையின் இறுதியிருப்பில் சலாம் கொடுத்து முடித்த பின்னரா? அல்லது சலாம் கொடுப்பதற்கு முன்னரா?" என்பதாகும் .

அதாவது இது பற்றிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிகாட்டலை அவதானிக்கின்ற போது "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு முறைகளிலும் மறதிக்கான சஜ்தாக்களை செய்திருக்கின்றார்கள்" என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகையில் மறதி ஏற்பட்டால் அம்மறதிக்கான இரண்டு சுஜுதுகளையும் இறுதி இருப்பில் அத்தஹிய்யாத்து (தஷஹ்ஹுத்) ஓதி, சலாம் கொடுக்க முன்னரும் செய்திருக்கின்றார்கள் இன்னும் இறுதி இருப்பில் அத்தஹிய்யாத்து (தஷஹ்ஹுத்) ஓதி சலாம் கொடுத்த பின்னர் மீண்டும் தக்பீர் சொல்லி மறதிக்கான இரண்டு சுஜுதுகள் செய்துவிட்டு  சலாம் கொடுத்தும் இருக்கின்றார்கள்.

இதைப் பற்றி  கீழ்வரக்கூடிய ஹதீஸ்களிலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்;

"உங்களில் ஒருவருக்கு தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு உறுதியான மூன்று ரக்அத்கள் என்பதன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்.

அறிவிப்பவர் :அபூஸயீத் (ரழியல்லாஹு அன்ஹு). நூல் : முஸ்லிம் (990)

எனவே மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸின் அடிப்படையில் "ஒருவர்  தொழும்போது தான் தொழுதது இரண்டு ரக்அத்களா? அல்லது மூன்று ரக்அத்களா? என எண்ணிக்கை விடயத்தில்  சந்தேகம் ஏற்பட்டால் அவருக்கு எது  உறுதியாக இருக்குமோ அதன் மீது தன் தொழுகையை தொடர்வார். அதாவது அவருக்கு  நான்கு ரக்அத்கள் தான் தொழுதோம் என்பது உறுதியானால் நான்கின் மீது தன் தொழுகையை தொடர்வார்  அல்லது அவருக்கு மூன்றுதான் தொழுதோம் என்பது உறுதியானால்  அதற்குப் பிறகுள்ள ரக்அத்தை தொடர்வார். பின்னர் இவ்வாறு தனக்குத் தொழுகையில் ஏற்பட்ட மறதிக்காக சலாம் கொடுப்பதற்கு முன் இரு சுஜுதுகளை செய்து சலாம் கொடுப்பார்" என்பது தெளிவாகின்றது.

மேலும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் நடு இருப்பில் இருக்க மறந்ததால் தொழுகையில் சலாம் கொடுப்பதற்கு முன்னர் மறதிக்கான இரண்டு சுஜுதுகள் செய்து சலாம் கொடுத்தும் இருக்கின்றார்கள் என்பதை கீழ்வரக்கூடிய ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரழியல்லாஹு அன்ஹு).  நூல் : புகாரீ (829).

இதேவேளையில், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில் குறுக்கேவைக்கப்பட்ட பலகையளவில் சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு தொழுகை குறைக்கப்பட்டு விட்டது என்று பேசிக் கொண்டார்கள்.

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) துல்யதைன் கூறுவது சரி தானா? என்று கேட்க ஆம் என்றனர் மக்கள். அதனால் தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு). நூல்: புகாரீ (482).

மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸிலிருந்து நாம் "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நான்கு ரக்அத்களில் இரண்டு ரக்அத்களை தொழுது, மறதியில் இரண்டு ரக்அத்களை தொழாமல் சலாம் கொடுத்தது பற்றி அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டதும் அவர்கள் அதை ஏனையவர்களிடம் கேட்டு, உறுதிப்படுத்தி மீண்டும் அனைவரையும் அழைத்து விடுபட்ட இரண்டு ரக்அத்களைப் பூர்த்தியாக்கி சலாம் கொடுத்துவிட்டு பின்னர் தக்பீர் சொல்லி, மறதிக்கான இரண்டு சஜ்தாக்கள் செய்து மீண்டும் சலாம் கொடுத்திருக்கின்றார்கள். மாறாக தொழுகையை முடித்து, இடைநடுவில் கதைத்து விட்டோம் என்பதற்காக புதிதாக நான்கு ராக்அத்களையும் தொழுது, மறதிக்கான சுஜுதுகளை செய்யவில்லை" என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.

மேலும்,தொழுது சலாம் கொடுத்த பின்னர் மறதிக்கான இரண்டு சுஜுதுகள் செய்யும் விடயத்தில்   இன்னுமொரு அறிவிப்பும் இடம்பெறுகின்றது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்; "உங்களில் ஒருவர் தனது தொழுகையில் மறந்தால் அவர் அதில் சரியானதை எடுத்துக் கொள்ளட்டும். சரியானதன் அடிப்படையிலேயே தொழுகையைப் பூரணப்படுத்தட்டும். பின்னர் ஸலாம் கொடுத்து விட்டு (மறதிக்காக) இரு ஸஜ்தாக்கள் செய்து (மீண்டும் ஸலாம் கொடுத்துக்) கொள்ள வேண்டும்' அறிவிப்பவர்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) (ஆதாரம்: புஹாரி-401)

ஆகவே, "தொழுகையில்  ஒருவர்  தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா?  என்ற விடயத்தில் சந்தேகப்பட்டு பின்னர் அவருக்கு தான் இத்தனை ரக்அத்கள்தான் தொழுதோம் என்பது உறுதியானால் அதன் மீது அவர் அவருடைய தொழுகையை தொடர்வார். அதன் பின்னர் அவர் சலாம் கொடுத்த பிறகு மறதிக்கான இரண்டு சுஜுதுகளை செய்வார்" என்பதை மேற்கூறப்பட்ட இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

ஆக, இவ்விடயத்தின் ஆரம்பத்தில் கூறியதைப் போன்று அபூ ஸயீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அறிவிப்பிலிருந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில்  மறதிக்கான இரு சுஜுதுகளையும் ஸலாம் கொடுக்க முன்னர் செய்துள்ளார்கள் என்பதும் மற்றும் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் இந்த அறிவிப்பின் படி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மறதிக்கான இரண்டு சுஜுதுகளையும் ஸலாம் கொடுத்த பிறகும்  செய்திருக்கின்றார்கள் என்று விளங்க முடிகின்றது.

ஆகவே,"ஒருவருக்கு தாம் தொழுகையில் எத்தனை ரக்அத்கள் தொழுதோம்?" என்பதில் சந்தேகமேற்பட்டால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் செய்து காட்டிய  இவ்விரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மறதிக்கான சுஜுதுகளை செய்து கொள்வார் என்பது எமக்குத் தெளிவாகின்றது.

எனவே,அல்லாஹ் எம் அனைவருக்கும் இவற்றைப் புரிந்து செயல்படுவதற்கு நல்லருள் பாலிப்பானாக!.

பதில் : மௌலவி:- M.I. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு அப்தில்லாஹ் (ஷரயிய்யா)