2022-12-09 338

பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா?

கேள்வி: பயணத்தின் போது முழுமையாக தொழுவது நபி வழியா?

பதில்: அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வ ஸஹ்பிஹி அஜ்மஈன். அம்மா பஃத்,

ஒருவர் பிரயாணத்தில் சுருக்கித்தொழாமல் ஊரில் தொழுவதைப்போன்று பூரணமாக  தொழுவது அனுமதியானதா? சுன்னத்தான காரியமா? என சில சகோதரர்கள் கேட்கின்றனர்.

உண்மையில், வணக்கங்களைப்பொறுத்த வரையில் நபிகளார் காட்டித்தந்த வழிமுறையோடு நின்றுகொள்வது தான் முஸ்லிம்களாகிய எம் மீது கட்டாயக்கடமையாகும். நாங்களாக நபிகளாரின் வழிமுறையில் காணாததை உருவாக்கக்கூடாது. அவ்வாறு உருவவாக்குகின்ற போது சில வேளைகளில் பித்அத் ஆன காரியங்கள் வரை செல்ல நேரலாம். எனவே தான் நாம் எப்போதும் வணக்கவழிபாடுகளில் நபிகளாரது வழிகாட்டலோடு நின்றுவிட வேண்டும். 

சில அறிஞர்கள் ஆதாரங்களை புரிகின்ற விதத்தில் சில விடயங்களில் மாற்றமாக செய்திருந்தாலும் நாங்கள் அவற்றை கருத்திற்கொள்ளாமல் நபிகளார் காட்டிய வழிமுறையோடு நின்றுகொள்வது தான் எங்களது வெற்றிகுரிய வழியாக அமையும்.

அந்த அடிப்படையில், மேற்படி கேள்விக்குரிய விடையை பார்த்தோமெனின் பிரயணத்தில் சுருக்கித்தொழுவதென்பது நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாக தொழுவதாகும் என்பது நாம் அறிந்ததே. 

நபிகளார் பிரயாணத்தில் தொழுகைகளை நிறைவேற்றிய அமைப்பை பார்க்கும் போது அவற்றை இரண்டு ரக்அத்களாக சுருக்கித்தான் தொழுது இருக்கிறார்கள். பிரயாணத்தில் அவ்வாறு இரண்டாக சுருக்காமல் நான்காக தொழுததாக எந்த ஒரு ஆதாரத்தையும் நாம் காணவில்லை.

ஆனால் இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு செய்தி சில கிரந்தங்களில் பின்வருமாறு இடம்பெறுகிறது அப்துர்ரஹ்மான் இப்னுல் அஸ்வத் அறிவித்தார்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) நபியவர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவுக்கு உம்ரா பயணம் மேற்கொண்டார்கள். மக்கா வந்தடைந்ததும் நபியவர்களிடம் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா)  பின்வருமாறு கூறினார்கள். 

“அல்லஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (இந்த பிரயாணத்தில்) நீங்கள் சுருக்கி தொழுதீர்கள். நானோ பூரணமாக தொழுதேன். நீங்கள் நோன்பை விட்டீர்கள். நானோ நோற்றுக்கொண்டேன்.”  அதற்கு நபியவர்கள் ”ஆயிஷாவே! நீ நல்லதைத்தான் செய்திருக்கிறாய்.” என்றார்கள். 

மேலும் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நபியவர்கள் எனக்கு எந்த குறையையும் கூறவில்லை’ எனக்கூறினார்கள்.

(பார்க்க சுனனுன் நஸஈ 1456, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார் 4258, மஃரிபதுஸ்’ஸுனன் வல் ஆஸார் 6068, சுனனுத்தாரகுத்னீ 2293,2294, சுனனுல் குப்ரா லில்பைஹக்கீ 5426,5427,5428)  

மேற்படி செய்தியை வைத்து சிலர் பிரயாணத்தில் பூரணமாக தொழுவதும் அனுமதியாகும். ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு நபியவர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் என விளங்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், இந்த செய்தியை நாம் ஆய்வு செய்த வேளையில் அது ஒரு பலவீனமான செய்தியாகவே இனங்காணப்பட்டிருக்கிறது. அது ஒரு ழஈப் ஆன செய்தியாகும். எனவே, நாம் பலவீனமான ஹதீஸ்களை இனங்கண்டு அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். அவற்றை வைத்து நாம் அமல்களை உருவாக்க முடியாது.

ஆகவே, ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் வந்ததற்கிணங்க பிரயாணத்தில் சுருக்கித்தொழுவதுதான் அடிப்படையானதும், சுன்னதானதும் ஆகும் என்பதைக்கருத்திற்கொண்டு நாம் எம் வணக்கத்தை கடைப்பிடிப்போமாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)  அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம்: உம்மு உமர் (ஷரயிய்யா)