2022-04-13 1953

பால்குடி சகோதரிக்கு உள்ள உரிமைகள்?

அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள். மீது ஸலவாத் சொன்ன பின். 

இன்றைய கால கட்டத்தில் எமது சமுதாயத்தில் எழும் மிக முக்கியமான கேள்விதான் "ஒரு ஆண் தனது பால்குடி சகோதரியோடு தனித்து பிரயாணம் செய்யலாமா? அல்லது தனிமையில் பேசிக்கொண்டிருப்பது அனுமதியா ? என்பதாகும்.

எம் முன்னோர்களின் காலங்களில் ஒரு தாய் தான் பெற்றெடுக்காத பிள்ளைக்கு தேவை ஏற்படின் பாலூட்டும் வழக்கு சாதாரணமாக இருந்தமை நாம் அறிந்த விடயமே.

இவ்வாறு ஐந்து விடுத்தம் பாலூட்டினால் அந்தக் குழந்தை பாலூட்டிய தாயின் பிள்ளைகளுக்கு பால்குடி சகோதரியாகிவிடும்.

இவ்வழக்கு இன்றைய காலங்களில் மிக அரிதாகவே காணப்படுகிறது.

இவ்வாறான பால்குடி சகோதரியுடன் இருக்கும் உரிமைகளை உணர்த்தும் வகையில் அல்லாஹ் குர்ஆனில் திருமணம் முடிக்க தடுக்கப்பட்டவர்களின் வரிசையில் இவர்களையும் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றான் :

உங்களுக்கு பாலூட்டிய உங்கள் (செவிலித்) தாய்மார்களும் உங்கள் பால்குடி சகோதரிகளும் ......(நீங்கள் திருமணம் செய்ய உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன ர்). (சூரா அந் - நி ஸா - 23)

அதேபோல நபி (ஸல்) அவர்களும் இந்த பால்குடி உறவு பற்றி பின்வருமாறு கூறிக்காட்டுகின்றார்கள் :

பிறப்பு (இரத்த உறவு) அடிப்படையில் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத்தகாத) மஹ்ரமான உறவுகளாகுமோ (அதைப்போன்று )பால்குடிமூலமும் அவைகள் மஹ்ரமான உறவுகளாக மாறிவிடும் (புகாரி : )

ஆகவே பிறப்படிப்படையிலான சகோதரிக்கும், பால்குடி சகோதரிக்கும் இடையில் பழக்கவழக்கங்கள், நடைமுறைகளில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை இவ் ஆதாரங்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

எனவே பால்குடி சகோதரியுடன் தனிமையில் பேசிக்கொள்வது, பிரயாணம் செய்வது போன்றவை தடுக்கப்படாத ஹலாலான விடயமாகும்.

மேலும் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் ஒருவர் ஒரு பெண்ணை அப்பெண் தனது பால்குடி சகோதரி என்று அறியாத நிலையில் திருமணம் செய்கின்றார். மேலும் சிறிது காலம் கடந்த பின்னர் அந்தப் பெண் தனது பால்குடி சகோதரி என தெரியவருகிறது என்றால் இந்நிலையில் அவ்விருவருக்கும் குழந்தைகள் இருந்தாலும் உடனடியாக அவர்கள் பிரியவேண்டும். மாறாக அவர்கள் சேர்ந்து வாழ்வது ஹராமாகும்.

இதனை பின்வரும் ஹதீஸ் உணர்த்தி நிற்கின்றது :

"உக்பா இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்கள் :

 நான் உம்மு யஹயா பின்த் அபி இஹாபை மணந்தேன். ஒரு கறுப்பு நிற அடிமைப் பெண் வந்து," நான் உங்கள் இருவருக்கும்  (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டி இருக்கிறேன்" என்று கூறினாள். இச்செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பி) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் (அவர்களது முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்பக்) கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் :   " அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டி இருப்பதாக வாதிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)? என்று கேட்டார்கள். என்னை அவளுடன் வாழக்கூடாது என்று விலக்கினார்கள்". (புகாரி : 2659)

எனவே அல்லாஹ்வின் சட்டங்களை தெளிவாக விளங்கி முழுமையாக நடைமுறைப்படுத்த அல்லாஹ் அருள்புரிவானாக!

என்றாலும் உடன்பிறந்த சகோதரிக்கு தன் சகோதரனின் சொத்துகளில் சில சந்தர்ப்பங்களில் உரிமை இருப்பதைப் போன்று பால்குடிச் சகோதரிக்கு சகோதரனின் சொத்தில் எவ்வித உரிமையும் இல்லை என்பதை இவ்விடத்தில் அறிந்துகொள்வதும் அவசியமாகும்

 

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி)

அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் : உம்மு Bபஹிய்யா ஷரயிய்யா