2022-04-03 418

வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?

الرحيم வுழுவில் சில முடிகளை மட்டும் தடவுவது போதுமானதா?

இன்று எமது சமுதாயத்தில் பலர் வுழு செய்யும் பொழுது தலையை தடவுகின்ற (மஸஹ் செய்தல்) வேளையில் தலைமுடி இருக்கும் அமைப்பு குழைந்து விடக்கூடாது என்பதற்காக அல்லது இது போன்ற வேறு சில காரணங்களுக்காக தண்ணீரைப்படுத்தி தலையின் ஒரு ஓரத்தில் அல்லது முடியின் சில பகுதிகளில் தடவுவதை பார்க்க முடிகிறது.

இவ்வாறு செய்வது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தொழுகைக்காக வரும் முன் வுழுச் செய்வதைப் பற்றி சொல்லுகின்ற வேளையில் அவ்வுழு அழகாகவும் பூரணமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டி, ஆர்வமூட்டியுள்ளார்கள் என்பதனை பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது :

ஒருவர் முறையாக வுழு செ‌ய்யு‌ம் போது அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. எந்தளவு என்றால் அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன. (முஸ்லிம் : 413)

மேலும் நபி (ஸல்) அவர்களது வுழுவின் முறைகளில் எப்பொழுதாவது இவ்வாறு தலையின் ஓரங்களில் அல்லது சில பகுதியில் தடவியுள்ளார்கள் என எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக நபி (ஸல்) அவர்களது வுழுவின் அமைப்பு பின்வருமாறு இருந்தது என ஆதாரமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது : "...........

பின்னர் (ஈரக்) கைகளால் தமது தலையை தடவினார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் (முன்) தலையில் வைத்து பின்னே கொண்டு சென்றார்கள். பிறகு பின் தலையில் வைத்து முன்னே கொண்டு வந்தார்கள். ஆரம்பமாக முன் தலையில் வைத்து அப்படியே அதைத் தமது பிடரிவரைக் கொண்டு சென்ற பின் அப்படியே ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டு சென்றார்கள்........". (புஹாரி : 185)

மேற் சொல்லப்பட்ட இம்முறையானது நபி (ஸல்) அவர்களது சாதாரண வுழுவின் அமைப்பாகும். அதேவேளை நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தபோது தலையை தடவிய (மஸஹ் செய்த) முறை பின்வருமாறு : " .............

பின்னர் (ஈரக்கையால் தமது முன்தலையின் மீது‌ம் தலைப்பாகை மீதும் காலுறைகள் மீது‌ம் தடவி (மஸ்ஹூ செய்து) கொண்டார்கள்..........." (முஸ்லிம் : 461)

அதாவது உதாரணமாக எமது ஊர்களில் ஆண்கள் தலைப்பாகை அணிவது வழக்கம். அவ்வாறுதான் இந்த தலைப்பாகை அணிவதும் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த வழமையாகும். அவ்வாறு தலைப்பாகை அணிந்திருப்பவர் தலையில் தடவும் (மஸஹ் செய்யும்) போது மேற்சொல்லப்பட்ட ஹதீஸில் உள்ளவாறு தனது இரு கைகளையும் தண்ணீரில் நனைத்து அதனைக் கொண்டு தனது முன் தலை முடியை தடவுவதோடு தலைப்பாகையின் மேலாலும் தடவி பின் தலை வரை கைகளை கொண்டு சென்று பின்னர் அவ்வாறே முன்னோக்கி கொண்டு வர வேண்டும்.  இதனையே இந்த ஹதீஸ் குறித்து நிற்கின்றது.

வெறுமனே முன்னால் உள்ள முடி அல்லது தலையின் சில பகுதியில் தடவினால் போதும் என்றிருந்தால் நபி (நபி) அவர்கள் அந்த தலைப்பாகையை நனைத்திருக்க வேண்டியதில்லை. ஆகவே வுழுவில் தலையை மஸஹ் செய்தல் விடயத்தில் நபி (ஸல்) அவர்களது வழிகாட்டல் இந்த இரண்டு முறைகளை மாத்திரமே சொல்லிக் காட்டுகின்றது. இவை இவ்வாறிருக்க சில அறிஞர்கள் வுழுவில் தலையை மஸஹ் செய்யும் போது மூன்று முடியை அல்லது ஒரு முடியில் சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக "وامسحوا برؤوسكم" என்ற (அதாவது "உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்".) (சூரத்துல் மாயிதா - 06) குர்ஆன் வசனத்தை சொல்லி இதன் கருத்தாக "தலையின் சில பகுதிகளை தடவுங்கள்" என கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு சொல்லுகின்ற கருத்தை தான் இவ்வசனம் நாடுகின்றனது என்றிருந்தால் அதனை அவ்வாறு விளங்க நபி (ஸல்) அவர்களே மிகத் தகுதியானவர்.

அவ்வாறிருப்பின் ஏதோ ஒரு இடத்திலாவது ஒரு முடியின் சில பகுதிகளை தடவினால் போதும் என்று இந்த உம்மத்திற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டிச் சென்றிருப்பார்கள். எனவே ஒரு மார்க்க விடயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலா? அல்லது இமாம்களின் கூற்றுக்களா? என்று வருகின்ற வேளையில் எவ்வித சந்தேகமும் இன்றி நாம் நபி (ஸல்) அவர்களது வழிகாட்டலைத்தான் எடுக்க வேண்டும்.

இவ்வாறு தான் வுழுவில் தலையை தடவும் விடயத்திலும் அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக்காட்டியதற்கு நபி (ஸல்) அவர்களது செயற்பாடு விளக்கமாக அமைந்துள்ளது. அதனையே நாம் எடுத்து நடக்க கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறில்லாமல் ஹதீஸை விட்டு விட்டு குர்ஆனை மாத்திரம் நாம் நடைமுறைப்படுத்த நினைத்தோமேயானால் அது எம்மை வழிகேட்டிலும் மேலும் சில சிக்கல்களிலும் விழச் செய்துவிடலாம்.

உதாரணமாக அல்லாஹ் குர்ஆனில் திருடியவரின் கைகளை வெட்டுமாறு ஏவுகின்றான். இதிலே கை என சொல்லப்படுவது ஒரு மனிதனின் முழுக்கையையுமா? அல்லது கையில் ஒரு பகுதியையா? என்பது தெளிவாக வரவில்லை. ஆனால் அதனை நபி (ஸல்) அவர்களது வழிகாட்டல் மூலம் மணிக்கட்டு வரை என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆகவே குர்ஆனிலே அல்லாஹ் சொல்லிக்காட்டியுள்ள ஒரு விடயத்திற்கு நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களில் விளக்கம் சொல்லப்பட்டிருந்தால் அதனை தான் அதற்குரிய விளக்கமாக எடுக்க வேண்டுமே தவிர நமது எண்ணங்களில் தோன்றும் விடயங்களை முற்படுத்தக்கூடாது. எனவே நாமும் மேற்சொல்லப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு வுழு செய்யும் போது தலையை பூரணமாக மஸஹ் செய்து நபிவழியை நடைமுறைப்படுத்துவோம்.

அவ்வாறு நமது வுழுவை பூரணமாக்கும் வரை நமது தொழுகையும் பூரணமாகாது என்பதை கருத்திற் கொண்டு அதனைப் பூரணமாகவும் அழகாகவும் செய்து அதனது முழுக் கூலியையும் பெற்றவர்களாக மாற அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி) 

எழுத்தாக்கம் : உம்மு Bபஹிய்யா ஷரயிய்யா