2022-03-22 500

கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா??

‎الرحيم கட்டாயம் கணவன் வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா?

அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்...

பல விடயங்கள் அல்லாஹ்வின் சட்டங்களில் தெளிவாக மக்களுக்கு சொல்லிக் காட்டப்பட்டுள்ள போதிலும் அதனுடைய பாரதூரம் தெரியாமல் அவைகளை வீணானவைகளாகவும் விளையாட்டாகவும் எடுத்து அவைகளில் பொடுபோக்காக இருந்துவருகிறோம்.

அல்லாஹ் அந்த விடயங்களுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை அதனோடு அவன் சம்பந்தப்படுத்தி சொல்லக்கூடிய விடயங்களை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் மிகவும் கவலைக்குரிய விடயம் எமது சமுதாயத்தில் உலமாக்கள் என கருதப்படும் மௌலவிமார்களில் பலர் அந்த விடயங்களை அல்லாஹ் சொன்ன பிரகாரம் மக்களுக்கு நடைமுறைப்படுத்த வழிகாட்டுவதுமில்லை, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் இல்லை.

உதாரணமாக ஸகாத், நோன்பு, ஹஜ் போன்றவைகளின் சட்டங்கள் மக்களுக்கு மத்தியில் பேசப்படுவது போன்று இன்னும் சில முக்கிய சட்டங்கள் பேசப் படுவதில்லை. அப்படியானவைகளில் ஒன்று தான் தலாக் (விவாகரத்து) சட்டம் ஆகும்.

அல்லாஹ் தனது திருமறையில் "அத் தலாக்" என்று ஒரு அத்தியாயத்தையே இறக்கிவைத்திருப்பதை நாம் பார்க்கின்றோம். அதிலே "ஒரு பெண் விவகாரத்திற்கு பின் கணவனது வீட்டில் தான் இத்தா இருக்க வேண்டுமா?" என்று இன்று எமக்கு மத்தியில் எழும் கேள்விக்கு நாம் பதிலை பெற்றுக்கொள்ளும் முகமாக பின்வருமாறு அல்லாஹ் கூறுகின்றான்.

"(நீங்கள் விவாகரத்து செய்த) பெண்களை பகிரங்கமான மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்தாலே தவிர அவர்கள் (இருக்கும் உங்களுடைய) வீடுகளில் இருந்து (இத்தாவின் காலம் முடிவடையும் முன்னர்) நீங்கள் வெளியேற்றிவிடவும் வேண்டாம். அவர்களும் வெளியேற வேண்டாம்". (சூரதுத் தலாக் - 01)

அதாவது ஒரு ஆண் தனது மனைவியை முதலாவது அல்லது இரண்டாவது தலாக் சொல்லிவிட்டார் என்றால் அப்பெண்ணை இத்தா காலம் முடியும் முன்னர் (3 மாதவிடாய் காலம் அல்லது 3 மாதங்கள்) தனது வீட்டிலிருந்து வெளியேற்றுவதையும் , அப்பெண் தானாக அவ்வீட்டிலிருந்து வெளியிறங்குவதையும் அல்லாஹ் தடுத்திருப்பதை இவ்வசனத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால் அப்பெண் மானக்கேடான ஒரு காரியத்தை செய்தால் அப்போது அவளை இத்தா முடிவதற்கு முன் வீட்டை விட்டு வெளியிறக்குவது அவருக்கு அனுமதி என்பதையும் வசனம் உணர்த்தி நிற்கின்றது. அதேபோல இவ்வசனத்தில் இச்சட்டத்தை கூறியபின் தொடர்ந்தும் கூறுகை‌யி‌ல் "மேலும் இவை அல்லாஹ்வின் வரம்புகள் ஆகும்.

எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ அவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர் ஆவர்" என்று இச்சட்டத்தை மீறுபவரைப் பற்றி சொல்லிக்காட்டுகின்றான். இவ்வாறு இத்தா காலம் முடியும் வரை அவ்வீட்டிலேயே அப்பெண் இருக்க வேண்டும் என்று கூறியமைக்கு காரணத்தையும் தொடர்ந்தும் பின்வருமாறு சொல்லிக்காட்டுகின்றான். "அதற்குப்பின் ஒரு (நல்ல)தோர் விடயத்தை அல்லாஹ் ஏற்படுத்தலாம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.".

அதாவது தலாக் சொல்லப்பட்ட மனைவி கணவன் வீட்டிலேயே இத்தா இருக்கும் வேளையில் இருவரும் மீண்டும் சே‌ர்‌ந்து வாழுமளவு ஒரு நல்ல நிலை உருவாகலாம் என்பதாகும். இவ்விவாகரத்து சட்டங்களை தொடர்ச்சியாக சொல்லி விட்டு இறுதியாக 5 ஆவது வசனத்தில் இச்சட்டங்களை எடுத்து நடப்பவருக்குரிய கூலியையும் பின்வருமாறு கூறிக் காட்டியுள்ளான்.

"அது அல்லாஹ்வின் கட்டளை ஆகும். அதனை உங்களின் பால் அவன் இறக்கிவைத்தான்; எவர் அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்கிறாரோ அவருக்கு அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்து, அவருக்கு கூலியை மகத்தானதாகவும் ஆக்குகிறான்".

ஆகவே ஒரு பெண் தலாக் சொல்லப்பட்டு அத்தலாக் முதலாவது அல்லது இரண்டாவது தலாக்காக இருந்தால் அதனது இத்தா காலம் முடியும் வரை கணவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்பதும் அதனை எடுத்து நடந்தால் கூலி உண்டு என்பதும் அதனை மீறும் பட்சத்தில் தமக்கு தாமே அநீதி இழைத்தவாராகி விடுகின்றோம் என்பதும் மேற்சொல்லப்பட்ட வசனங்களில் இருந்தும் தெளிவாகிறது.

எனவே அல்லாஹ்வின் சட்டங்களில் அவனது வரம்புகளை மீறாமல் அவன் ஏவிய அடிப்படையில் வாழ்ந்து மரணிக்க எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!

பதில் : மௌலவி MI. அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம் உம்மு Bபஹிய்யா ஷரயிய்யா