2021-12-07 432

பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?

கேள்வி: பாவனையிலுள்ள வாகனத்திற்கு ஸகாத் கொடுக்க வேண்டுமா?

பதில்: கொடுக்க வேண்டியதில்லை.

விளக்கம்: அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்...

‘ஸகாத்’ என்பது பொருட்கள் மூலம் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். அதாவது குறிப்பிட்ட பொருட்களில் குறித்த நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிறைவேற்றப்படும் பொருள்சார் வணக்கமே ‘ஸகாத்’ ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் கடமையாகக்கூடியஇ கடமையாகாத பொருட்களை வேறுபடுத்திக் கூறியிருப்பதை நாம் ஆதாரமான அறிவிப்புகளில் காணலாம். அந்த வகையில் நாம் தற்காலத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் காணப்படவில்லை என்றிருந்த போதிலும் அக்காலத்தில் போக்குவரத்திற்காக பயன்படுத்திய குதிரை தொடர்பாக நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறியிருப்பதைக் காணலாம்....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் தம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ((ஸஹீஹுல் புகாரி))

ஆக (பணமாக இருக்கும் போது ஸகாத் கடமை நிறைவேற்றப்பட்ட பணத்தில் வாங்கிய) வாகனத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தும் போது அதற்கென்று ஒவ்வொரு வருடமும் ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒருவர் வாகனங்களை தனது வியாபாரப் பொருளாக பயன்படுத்தினால் அவ்விடத்தில் ஸகாத் கடமையாகும் அளவான ‘நிஸாப்’ அளவு அடையப்பெற்றால் கட்டாயம் ஸகாத் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஏனெனில் இவ்விடத்தில் வாகனங்கள் அவரின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படாமல் விற்பனைப் பொருள் என்று கருதப்பட்டு பணத்தின் அந்தஸ்தை அடைகிறது.

ஆக குறித்த காலம் கடமையாகும் அளவு அடைந்ததென்றால் ஸகாத் கடமையை நிறைவேற்றுவது அவசியமாகின்றது. எனவே தன் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஸகாத் கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை; அவ்வாகனத்தின் பெறுமதி அதிகமாக இருந்தாலும் சரியே! “அல்லாஹ் அனைத்து விடயங்களையும் நன்கறிந்தவன் என்று அறிந்துகொள்ளுங்கள்!” (சூரத்துல் பகறா: 231)

பதிலளிப்பவர்: மெளலவி ஆ.ஐ.அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம்: உம்மு அமதில்லாஹ் (ஷரஇய்யா)