2021-11-18 606

உள்ளச்சத்திற்காக கண்களை மூடி தொழ முடியுமா?

அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்...

மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் தடுக்கப்படாத எந்தவொரு விடயமும் தடையாக கருதப்படமாட்டாது. அந்த அடிப்படையில், தொழுகையில் கண்களை மூடும் விடயத்தில் எந்தவொரு தடைகளையும் அல்குர்ஆனிலோ, அஸ்ஸுன்னாவிலோ நாம் இதுவரை காணவில்லை.

அதாவது, ஒரு மனிதர் தன் தொழுகையில் உள்ளச்சத்தோடு தொழுவதற்காகவும் ஏனைய விடயங்கள் அவரை பராமுகமாக்காமல் இருப்பதற்காகவும் கண்களை மூடிக் கொண்டு தொழுவதில் எந்த வித தடைகளுமில்லை.

ஒருவர் கண்களை மூடிக்கொண்டு தொழும் போது அவரின் முன்னுள்ள அனைத்து விடயங்களும் இருளாகி அவர் இருளில் தொழும் மனிதனுக்கு சமனாகிவிடுகிறார். தொழுகை முடியும் வரை சுஜூத் செய்யும் இடத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என சில கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவற்றுக்கான ஆதாரமான எந்தவொரு நபிமொழியையும் இதுவரை நாம் காணவில்லை.

மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருளில் தொழுதார்கள் என்பதை சுட்டிக்காட்டக்கூடிய ஆதாரமான ஹதீஸ்களை பின்வருமாறு காணலாம்....

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது.

அப்போது அவர்கள் அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

(பொருள்: இறைவா உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும் உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன் கருணையினைக் கொண்டு உன் தண்டனையினைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னை நீ ( உன் தகைமைக் கேற்ப துதித்ததைப் போன்றே நீ இருக்கின்ற நிலையில் என்னால் உன்னை உன் தகைமைக் கேற்ப துதிக்க முடியாதுள்ளது .) (ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றுமொரு அறிவிப்பில் விளக்குகள் இல்லாத இருளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்பது தெளிவாக இடம்பெறுவதைக் காணலாம்...

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக விரிப் பில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் ‘சஜ்தா’ செய்யுமிடத் தில்) இருந்து கொண்டிருக்கும். 

அவர்கள் ‘சஜ்தா’வுக்கு வரும்போது என்னை (தமது விரலால்) தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்துவிட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை. (ஸஹீஹுல் புகாரி)

அதுமட்டுமன்றி, தொழுகையில் பராக்காக்ககூடிய விடயங்களை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேணுதலாக இருந்தார்கள் என்பதை உணர்த்தும் ஆதாரமான நபிமொழிகள் இடம்பெறுவதையும் காணலாம்....

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும்போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும் “எனது இந்தக் கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) ‘அன்பிஜான்’ (நகர எளிய) ஆடையை (வாங்கி) என்னிடம் கொண்டுவாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில் “நான் தொழுது கொண்டிருக்கும்போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. ஆகவே ஒரு மனிதர் தனது உள்ளச்சத்திற்காகவும் (விரிப்பு, சுவர், மஸ்ஜிதுகளில் உள்ள நிலவேலைப்பாடுகள் போன்றவற்றிலுள்ள) அலங்காரங்கள் தொழுகையை பராக்காக்காமல் இருப்பதற்காகவும் கண்களை மூடிக்கொண்டு தொழுவதற்கு நேரடியான எவ்வித தடைகளுமில்லை.

“ஈமான் கொண்டவர்கள் திட்டமாக வெற்றிபெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.” (சூரத்துல் முஃமினூன்: 1,2)

பதில்: மௌலவி ஆ.ஐ.அன்சார் (தப்லீகி) அதிபர் (தத்பீகுஷ் ஷரீஆ அரபிக் கல்லூரி)

எழுத்தாக்கம்: உம்மு அமதில்லாஹ் (ஷரஇய்யா)