2021-10-08 475

சுன்னத் தொழுகையின் பலாபலன்கள்

ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரைப் பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன்.

நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 6502

உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் பர்ளான தொழுகையின் முன், பின் சுன்னத்துகள் எத்தனை, அவற்றின் சிறப்பு யாது என்பதைக் காணலாம். “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1319)

“அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த (ஃபர்ள் அல்லாத) கூடுதலான தொழுகைகளைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் லுஹருடைய ஃபர்ளுக்கு முன் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

பிறகு புறப்பட்டுச் சென்று மக்களுக்கு (ஃபர்ள்) தொழுவிப்பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; மக்களுக்கு மஃக்ரிப் (உடைய ஃபர்ள்) தொழுவித்து விட்டு (வீட்டுக்கு) வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்; இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ர் தொழுகையும் அடங்கும். இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள். இரவில் நீண்ட நேரம் அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும்போது நிலையிலிருந்தே ருகூஉ மற்றும் சஜ்தாவுக்குச் செல்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூஉ மற்றும் சஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ர் நேரம் வந்து விட்டால் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (முஸ்லிம் 1323)

மேற்ச் சென்ற ஹதீஸ்களில் பன்னிரெண்டு ரக்அத்துகள் தொழுதால் சுவனம் கிடைக்கும். அந்த பன்னிரெண்டு ரக்அத்துகள் எவை என்பதையும் ஹதீஸில் காணலாம். அதாவது சுப்ஹூடைய பர்ளுக்கு முன் இரண்டு (2) ரக்அத்துகளும், ளுஹருடைய பர்ளுக்கு முன் நான்கு (4) ரக்அத்துகளும், ளுஹருடைய பர்ளுக்குப் பின் இரண்டு (2) ரக்அத்துகளும், மஃரிபுடைய பர்ளுக்குப் பின் இரண்டு(2) ரக்அத்துகளும், இஷாவுடைய பர்ளுக்குப் பின் இரண்டு(2) ரக்அத்துகளாகும். ஆக, தொழுகை என்பது எம் மார்க்கத்தின் அடிப்படைத் தூண் என்பதனால் அதனை முழுமையான முறையில் நிறைவேற்றி நிலையான சுவனத்தின் சொந்தங்களாக மாறுவோமாக!!!

                                                                         

                                                                           உம்மு அமதில்லாஹ அஷ்ஷரயிய்யா