2021-10-03 804

நபி வழித்தொழுகை விளக்கம் - பாகம் - 01

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துல்லில்லாஹ்.

சலவாத்தும் சலாமும் எம் பெருமானார் முகம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகுவதாக! இந்நூல், இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் தொடர் தர்பியா நிகழ்ச்சியில் நபிவழித்தொழுகையை விளக்கும் முகமாக உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களால் நடாத்தப்பட்ட உரைகளின் தொகுப்பாகும்.

இவ்வுரையில் நபி (ஸல்) அவர்களை தொட்டும் வந்துள்ள ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மாத்திரம் வைத்து நபி வழித்தொழுகையை விபரிப்பதோடு தொழுகையின் ஒவ்வொரு அசைவிற்குரிய தக்க ஆதாரத்தையும் மேற்கோள்காட்டியிருக்கின்றார்.

இன்னும் தொழுகை சம்பந்தமாக சமூகத்தில் பரவியுள்ள ஆதாரமற்ற ஹதீஸ்களை சுட்டிக்காட்டி, அதன் பலயீனத்திற்கான காரணங்களையும் ஹதீஸ்கலை அடிப்படையில் உரையின் இறுதியில் தெளிவுபடுத்துகின்றார்.

இதுதவிர அவரிடம் வினவப்பட்ட வினாக்களுக்கும் அல்குர்ஆன் அல்ஹதீஸின் ஒளியில் விடையளிக்கின்றார். இவ்வுரையின் பிரதான நோக்கம் நபி வழித்தொழுகையை விபரிப்பதாக இருந்தாலும் தொழுகையோடு சம்பந்தப்பட்ட பல முக்கியமான சட்டங்களையும் இவ்வுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான சட்டங்கள் இவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை அனைத்து முஸ்லிம்களின் கைகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நன்னோக்கத்தோடு இவ்வுரையை எழுத்தாக்கம் செய்கின்றோம்.

இதிலே தொழுகை சம்பந்ததப்பட்ட அனைத்து பலயீனமான ஹதீஸ்களின் விளக்கங்களையும் விரிவஞ்சி தவிர்ந்துகொள்கின்றோம். தம் தொழுகைகள் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழுகைகளாக அமையவேண்டும் என ஆசைப்படும் தொழுகையாளிகளுக்கும் இன்னும் தொழுகையின் சர்ச்சையான விடயங்களில் சரியான ஒரு தீர்ப்பை பெறவேண்டும் என ஆர்வம் கொண்ட நடுநிலைவாதிகளுக்கும் இந்நூல் சிறந்த ஒரு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகின்றோம் இன்ஷா அல்லாஹ்.

நேர்வழியில் நடக்க அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்புரிவானாக! நபிவழியில் நாம் தொழுவோம்

இஸ்லாத்தை ஏற்றுகொண்ட ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரு நாளில் ஐவேளைகள் தொழுவது கட்டாயக்கடமையாகும். நாம் தொழும் தொழுகை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் பூரண கூலியை தருவதாகவும் அமைய வேண்டுமானால் அத்தொழுகையின் ஒவ்வொரு அசைவும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் அமைய வேண்டும்.

நபிவழியல்லாத தொழுகையை எத்தனை வருடங்கள் எங்களில் ஒருவர் தொழுதாலும் அறவே ஒரு வேளையும் தொழாதவனை போன்றுதான் கணக்கெடுக்கப்படுவார். இதை பின்வரும் நபிமொழி எடுத்துக்காட்டுகின்றது.

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது :- ஒரு மனிதன் (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். (பள்ளிவாசலுக்குள் நுழைந்த) அவர் தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம் திரும்ப சென்று தொழு ஏனெனில் நீ தொழவில்லை” என்றார்கள். ஆகவே திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னார் அப்போதும் நபி அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு ஏனெனில் நீ தொழவில்லை“ என்றார்கள். இரண்டாம் தடவையிலோ அல்லது அதற்கு பின்னரோ அவர் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழும் முறையை) கற்றுத்தாருங்கள் என்றார்கள்................ (புகாரி 6251) உபாதா இப்னு ஸாமித் (ரழி) அறிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ் தன் அடியார்கள் மீது கடமையாக்கிய ஐவேளைத் தொழுகைகளின் வுழுவை யார் அழகாகச் செய்து, அதை அதற்குரிய நேரத்தில் தொழுது, அதன் ருகூவையும் சுஜூதையும் இறையச்சத்தையும் பூரணப்படுத்துகின்றாரோ அவருக்கு அவரை மன்னிப்பதாக அல்லாஹ்விடத்தில் ஒப்பந்தம் (வாக்கு) இருக்கின்றது. யார் இவ்வாறு செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடத்தில் ஒப்பந்தம் இல்லை. அவரை விரும்பினால் அல்லாஹ் மன்னிப்பான் இன்னும் விரும்பினால் அவரை அவன் தண்டிப்பான்.” (முஸ்னத் அஹமத் 22704)

எவ்வாறு தோழவேண்டும் ?

மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரழி) கூறியதாவது: சமவயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கினோம். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் செல்ல ஆசைப்படுகின்றோம் என நபி (ஸல்) எண்ணி, எங்களின் குடும்பத்தாரில் நாங்கள் விட்டுவந்தவர்களைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி தெரிவித்தோம். நபி(ஸல்) அவர்கள் நல்ல தோழராகவும் இரக்கமுடையவராகவும் இருந்தார்கள்.

எனவே நபியவர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்று அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுங்கள்! இன்னும் அவர்களை ஏவுங்கள் “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்!” தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் அதான் சொல்லட்டும்! பின்னர் உங்களில் பெரியவர் உங்களுக்கு தொழுவிக்கட்டும் என்றார்கள் (புகாரி 6008)

ஆரம்பகாலகட்டத்தில் ஷாபி, ஹன்பலி, அஹ்மத், ஹனபி போன்ற மத்ஹபுடையவர்கள் தங்களின் மத்ஹபுப்படி தொழுகை முறையை அவரவர் மத்ஹபில் எழுதிவைத்தனர். அல்குர்ஆன், அஸ்ஸுன்னா எழுச்சி ஏற்பட்ட வேளையில் பின்வந்த இமாம்கள் மத்ஹபுக்களை புறந்தள்ளிவிட்டு நபி வழியில் தொழுகைமுறை இருக்க வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை ஆய்வுசெய்து, அவைகளில் ஆதாரமான ஹதீஸ்களை மாத்திரம் வைத்து, தொழுகைமுறையை அறபு மொழியில் வழிகாட்டினார்கள்.

இந்த வரிசையில் ஹதீஸ்கலை அடிப்படையில் நான் ஆதாரமாக காணும் ஹதீஸ்களை வைத்து தொழுகைமுறையை தமிழ் மொழியில் வகுத்துள்ளேன். மனோயிச்சை, கௌரவத்திற்கு அப்பால் அல்லாஹ்வின் திருப்தியை நாடி, எனது சக்திக்குட்பட்டவரை ஆய்வு செய்து ஹதீஸ்களை முன்வைக்கின்றேன்.

சிலவேளை நான் இவ்விடயத்தில் பலயீனமாக கருதும் சில ஹதீஸ்களை மாற்றுக்கருத்துடையோர் ஆதாரமாக கருதலாம். இன்னும் நான் ஆதாரமாக கருதும் ஹதீஸ்களை அவர்கள் பலயீனமானதாக கருதலாம். என்றாலும் என்சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களில் அல்லாஹ் என்னை குற்றம் பிடிக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு என்னால் முடிந்த அளவு தமிழ் பேசும் மக்களுக்கு “நபிவழித்தொழுகை“ எனும் தொகுப்பை வழங்குகின்றேன்.

அத்தோடு இந்த விடயத்தில் சமுதாயத்தில் பரவியுள்ள பலயீனமான சில ஹதீஸ்களின் விளக்கங்களை உரையின் இறுதியில் தொகுத்துத்தரவும் எண்ணியுள்ளேன். இதில் தவறுகள் இருப்பின் அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சுட்டிக்காட்டுமாறு சகோதர வாஞ்சையோடு உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

தொழுகையில் ஆடை (அவ்றத்தை மறைத்தல்) தொழுகைக்கென்று குறிப்பிட்ட ஆடைகளோ அல்லது இத்தனை ஆடைகள்தான் அணிய வேண்டும் என்ற நிர்ணயமோ இல்லை. மாறாக தவிர்க்கப்பட்ட ஆடைகளை தவிர்ந்து, அவரவர் வசதிக்கேற்ப தங்களின் ஆடைகளை சுத்தமாக அணிந்து கொள்ளலாம்.

ஆண்களை பொருத்தமட்டில் தங்களின் அவ்றத்தை மறைப்பதோடு தங்களின் இரு தோற்புயங்களையும் மறைக்க வேண்டும். ஷாபி மத்ஹபை சேர்ந்தவர்கள் ஆண்களின் அவ்ரத்தின் எல்லையை தொப்புளுக்கும் முழங்கால்களுக்கும் மத்தியில் உள்ள பகுதி என வரையறை செய்து, அப்பகுதிகளை மறைத்தால் போதுமானது எனக்கருதுகின்றனர். என்றாலும் ஒரு ஆடை மாத்திரம் இருப்பவர் தொழுகையில் அந்த ஆடையை கொண்டு தன் இரு தோற்புயங்களையும் மறைக்க வேண்டும் என பின்வரும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.

அபூஹுறைறா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் யாரும் தமது இருதோற்புயங்களின் மீது எதுவும் இல்லாதிருக்க ஒரு ஆடையை (அணிந்து) கொண்டு தொழ வேண்டாம்” (புகாரி 359, முஸ்லிம் 516) உமர் இப்னு அபீஸலமா (ரழி) அவர்கள் அறிவிப்பதானது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆடையின் இரு ஓரங்களையும் தன் இரு தோற்புயங்களிலும் வைத்து, அந்த ஆடையைக் கொண்டு சுத்தியவராக ஒரே ஒரு ஆடையில் உம்மு சலமாவின் வீட்டில் தொழுததை நான் பார்த்தேன். (முஸ்லிம் 517)

எனவே ஒரே ஒரு துணி (நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெரும்பாலும் ஒரு ஆடையாக மதிப்பிடப்பட்டது. அத்துணியை வைத்து வேட்டியாகவோ அல்லது போர்வையாகவோ அணிந்து கொள்வார்கள். ஒரு துணி மாத்திரம் இருப்பவர்கள் அந்த துணியால் தனது இரு தோற்புயங்களையும் மறைத்துக்கொள்ளும் வகையில் அணிந்து கொள்ளவேண்டும்.

அதாவது அந்த துணியின் இரு ஓரங்களாலும் (இரு முனைகளையும் கொண்டு) இரு தோற்புயங்களையும் மறைத்து கழுத்தின் பின்னால் கட்டிவிடும் போது ஆடையை கீழேவிழாமல் பாதுகாப்பதுடன். சுன்னத்தையும் நடைமுறைப்படுத்தலாம். இதேவேளை ஆண்களுக்கு, அவ்றத்தான பகுதியும் இரு தோற்புயங்களையும் மாத்திரம் மறைப்பதோடு ஏனைய பகுதிகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அவர்களுக்கு ஹலாலான முறையில் எந்த ஆடையும் அணிந்து கொள்ளலாம். மாறாக ஒரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு தோற்புயங்களில் துணி இல்லாத நிலையில் தொழுவதுதான் ஆண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை முகம், மணிக்கட்டு,கால்பாதம் போன்றவற்றை தவிர்த்து ஏனைய உடற்பாகங்கள் அனைத்தையும் கட்டாயம் மறைத்துக்கொள்ளவேண்டும்.

அதேபோன்று முகம், கால்பாதம், மணிக்கட்டு போன்றவற்றை தொழுகையில் கட்டாயம் திறந்து வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில பெண்கள் அந்நிய ஆண்களுக்கு தங்களின் கால்பாதங்களை வெளிக்காட்டிவிட்டு அல்லாஹ்விற்கு மாத்திரம் தங்களின் கால்பாதங்களை மறைத்து (காலுறை அணிந்து) தொழக்கூடியவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதை அவர்கள் கட்டாயமாகவும் கருதுகின்றனர். இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடாகும். ஏனெனில் பெண்களின் கால்பாதங்கள் ஆண்களுக்கு வெளிக்காட்டத்தகாத அவறத்தே தவிர அல்லாஹ்விற்கு மறைக்கப்ப்பட வேண்டிய பகுதியல்ல.

                                                                                                                                      தொடரும் இன்ஷாஅல்லாஹ்...

          தொகுப்பு :-உம்மு அய்மன் அஷ்ஷரயிய்யா