2020-09-16 1363

தஃவா இயக்கங்கள்

தஃவா இயக்கங்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் பல பெயர்களில் பல இயக்கங்கள் இயங்குகின்றன இக்கால கட்டத்தில் இயக்கம் சாராத தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இயக்கங்களாகவும் தனி நபர்களாகவும் இயங்குகின்ற இவர்களுக்கிடையில் அவர்களின் பிரச்சாரப் பணியின் வழிமுறைகளில் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளில் உள்ள முரண்பாடுகள் இயக்கவெறியை பாரிய அளவில் தோற்றுவிப்பதற்கு காரணமாகவும் இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

தீர்வு என்ன? அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டோர்களே அல்லாஹ்விற்கும் (அவனுடைய) தூதருக்கும் உங்களில் அதிகாரமுடைய (அமீர்களுக்கும்) வழிபடுங்கள். ஏதேனும் ஓர் விடயத்தில் நீங்கள் சர்ச்சைப்பட்டால் அல்லது அவனுடைய தூதரின் தீர்ப்பளவில் அதனை திருப்பிவிடுங்கள் நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பியிருந்தால் அதுவே சிறந்ததும் விளக்கத்தால் மிக அழகானதுமாகும். (அன்னிஸா: 59)

முஸ்லிம்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் அவர்கள் எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும். என்பதை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் தெளிவாக கட்டளையிட்டுள்ளான்.

அல்லாஹ்வின் இக்கட்டளைப்படி இயக்க வேறுபாடுகளை விட்டுவிட்டு அல்குர்ஆன் அஸ்ஸ_ன்னாவின் கீழ் ஒன்றுபட்டு சகோதரத்துவமாக ஒருவருக் கொருவர் உதவி செய்து கொண்டு தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு நாம் தயாராகுவதே எம் ஒற்றுமைக்கு வழியாகும்.

ஏன் உடன்பாடில்லை? ஆனால் இக்கருத்தை எல்லா இயக்கத்தவரும் வாயளவில் ஏற்றுக்கொண்டாலும் செயற்பாட்டுக்கு அழைக்கும் போது ஏதோ சில காரணங்களைக் கூறி விலக்கிக்கொள்கின்றனர். இவ்வியக்கங்களின் வழிகாட்டிகள் இயக்கத்தை காத்துக்கொள்வதற்காக தம் சொந்த விளக்கங்களை அல்லது மனோஇச்சையிலான கருத்துக்களை தம் பின்னால் உள்ளவர்களுக்கு மார்க்கமாக எடுத்துக்கூறி அவ் இயக்கத்தின் பின்னே அவர்களை கட்டிவிடுகின்றனர்.

இங்கு அல்லாஹ்வின் சரியான வழிகாட்டல் மறைக்கப்படுகின்றது அல்லது மறுக்கப்படுகின்றது அல்லது மழுங்களிக்கப்படுகின்றது. இவ்வாறே சில இயக்கம் சாராத பிரச்சாரம் செய்யக்கூடிய மௌலவிமார்களும் நடந்து கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சுய நலன்களை, கௌரவங்களை பாதுகாத்துக் கொள்ள அல்லது மனோ ஆசைகளை தீர்த்துக்கொள்ள தேவைக்கேற்ப தமது பிரச்சாரங்களை மாற்றிக்கொள்வதோடு பிழையான மார்க்கத் தீர்ப்புகளையும் உண்மைக்குப் புறம்பாக வழங்கிவிடுகின்றனர்.

விளைவுகள்: இதனால் இப்பிரச்சாரர்களின் மனோஇச்சையினாலான போக்குகளை அறியாத அவர்களை நம்பியிருக்கக்கூடிய பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு சில வேளைகளில் வழிகேடுகளான காரியங்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர். இவ்வாறே அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களும் உண்மைக்கு புறம்பாக மறைக்கப்பட்டு விடுகின்றது.

உண்மையைறைத்தலும் அல்லாஹ்வின் எச்சரிக்கையும்

இங்கு தெரிந்து கொண்டே மார்க்க விடயங்களை உண்மைக்குப் புறம்பாக மக்களுக்கு கூறி தங்கள் வருமானத்தை காத்துக் கொள்ளும் ஆலிம் எனும் பெயர்தாங்கியவர்கள் அல்லாஹ்வின் பின்வரும் எச்சரிக்கைக்கு ஆளாக வேண்டிவரும்.

நிச்சயமாக வேதத்திலிருந்து அல்லாஹ் இறக்கிவைத்ததை மறைத்து அதன் மூலம் சொற்பமான ஆதாயத்தை வாங்கிக் கொள்பவர்கள் அவர்களின் வயிறுகளில் நெருப்பையே தவிர அவர்கள் சாப்பிடவில்லை. அல்லாஹ் மறுமை நாளில் அவர்களுடன் பேசமாட்டான் அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினையான வேதனை இருக்கிறது.

அவர்கள்தான் நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டையும் பாவமன்னிப்புக்குப் பகரமாக தண்டனையையும் வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தின் (தண்டனை) மீது இவர்களை பொறுமையாக்கியதுதான் என்ன? (அல்பகரா: 104, 105)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: தெளிவான ஆதாரங்கள் நேர்வழியிலிருந்து நாம் இறக்கிவைத்ததை வேதத்திலே மக்களுக்கு நாம் அவற்றை தெளிவாகச் சொன்னதன் பின்னர் எவர்கள் மறைக்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் சாபமிடுபவர்களும் அவர்களை சபிக்கின்றார்கள். (அல்பகரா: 159)

அறிவில்லாமல் மார்க்கம் கூறுதல்

இதேவேளை மார்க்க விடயங்களை தெளிவாக ஆய்வு செய்யாமல் குறை அறிவுடன் தீர்ப்பு வழங்கக்கூடிய அறிவுகுறைந்த அறிஞர்களின் நிலையைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் அறிவை அப்படியே அடியார்களிடமிருந்து பிடுங்கி விடமாட்டான். என்றாலும் உலமாக்களை கைப்பற்றுவதன் மூலமே (அறிவை கைபற்றிக் கொள்வான்) எதுவரையெனில் ஓர் உண்மையான அறிஞரையும் விட்டுவைக்க மாட்டான். மக்கள் அறிவீனர்களை தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் (தீர்ப்புக்) கேட்கப்படும். அறிவில்லாமல் தீர்ப்புக் கூறுவார்கள். அவர்களும் வழிகெட்டு மக்களையும் வழிகேட்டில் ஆழ்த்திவிடுவார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே அல்லாஹ் விரும்பக்கூடிய இஸ்லாமிய எழுச்சியை நாம் விரும்பினால் முதலாவதாக அல்குர்ஆன் அஸ்ஸ_ன்னாவின் மீது ஒன்றுபட வேண்டும். பிரச்சாரப் பணியில் ஈடுபடக்கூடிய எவராக இருப்பினும் இஹ்லாஸ் உள்ளவர்களாகவும் உண்மையை உண்மையின் படி பேசக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும் எந்த ஓர் மார்க்க விடயத்திலும் குறை அறிவோடு தீர்ப்பு வழங்காமல் இருப்பதுடன் தெரியாததை தெரியாது எனக் கூறும் பணிவும் இருக்க வேண்டும். மேலும் தெளிவான அறிவை தேடும் பண்பும் விடாமுயற்சியும் பிரச்சாரகர்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் அறியாமையும் கண்மூடித்தனமான பின்பற்றலும் வழிகேடுமே இச்சமுதாயத்தில்; தலைதூக்கும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக. தொடரும் தஃவா களம்……..

                                              ஆக்கம்: அன்ஸார் தப்லீகி