தப்ஸீர் கலையின் தோற்றம் - அல்குர்ஆன் விளக்கவுரை
தப்ஸீர் கலையின் தோற்றம்
அத்தப்ஸீர் எனும் அ.றபுப் பதத்திற்கு “விரிவுரை செய்தல்” எனப் பொருள்படும். என்றாலும் இச்சொல் அல்குர்ஆனிற்கு விளக்கவுரை செய்வதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அல்குர்ஆன் விளக்கவுரைக்கு “அத்தஃவில்” என்ற அறபுப் பதமும் பாவிக்கப்பட்டு வருகிறது.
அல்குர்ஆன் விளக்கவுரை – தோற்றமும் காரணிகளும்
அல்குர்ஆன் இறக்கப்பட்ட அந்த சமூகம் அறபியர்களாக இருந்ததால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை இலேசாக புரிந்துகொள்வதற்காக அவர்களின் தாய்மொழியான அறபிப் பாசையிலேயே அதனை இறைக்கிவைத்தான். இதைப்பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
எந்த ஒரு தூதரையும் (அவருடைய சமூகத்திற்கு) அவர் விளங்கப்படுத்த வேண்டுமென்பதற்காக அவருடைய சமூகம் (பேசுகின்ற) பாசையிலேயே அன்றி நாம் அனுப்பவில்லை (சூறதுல் இப்றாஹிம் 4)
நீங்கள் புரிந்து கொள்வதற்காக இந்த வேதத்தை அறபிப் பாசையிலான குர்ஆனாக இறக்கி வைத்தோம் (சூறது யூஸ_ப் 2)
அந்த சமுதாயம் பேசிய பாசையில் அல்குர்ஆன் இறங்கியிருக்கும் போது அதை விளங்குவதற்கு மேலதிக விளக்கவுரை தேவைதானா? என்றொரு கேள்வி ஏற்படலாம்.
ஆம் தேவையானதாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு பல காரணிகள் இருக்கின்றன.
1. அல்குர்ஆனில் வரும் வார்த்தைகளுக்கு நேரடிப் பொருள் கொடுப்பதே அடிப்படையாக இருந்தாலும் சில வேளைகளில் சில வார்த்தைகளுக்கு நேரடிப் பொருள் நாட்டமாக இருக்காது. மாறாக அதன் விளக்கம் வேறொன்றாக இருக்கும்.
இதை ஓர் சம்பவத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்
அல்குர்ஆனில் சூறதுல் அன்ஆம் 82 ம் வசனம்
எவர்கள் ஈமான் கொண்டு அவர்களின் ஈமானை (இணைவைத்தல்) எனும் அநியாயத்தைக் கொண்டு கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே பாதுகாப்பு இருக்கிறது. அவர்களே நேர்வழிபெற்றவர்கள்.
என வசனம் இறங்கியபோது எங்களில் யார் தனக்கு அநியாயம் செய்யாதவர் என்று ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று மிகுந்த மனப்பாரத்துடன் முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் கூறுவதைப் போன்று இல்லை. சூறதுல் லுக்மானில் அல்லாஹ்வின் வார்த்தையை நீங்கள் ஓதவில்லையா? நிச்சயமாக இணைவைத்தல் பிரமாண்டமான அனியாயமாகும். (புஹாரி)
இங்கு முதல் வசனத்தில் வந்த அறபு வார்த்தை “ளுல்முன்” என்பதாகும். இதற்கு வெளிப்படையான பொருள் “அனியாயம்” என்பதாகும். இஸ்லாத்தின் பார்வையில் இணைவைத்தலும் அனியாயத்தின் ஓர் வகையே.
எனவேதான் அல்;லாஹ் லுக்மானில் இணைவைத்தலை அனியாயம் என சுட்டிக் காட்டியதால் அவ்வாறே முதல் வசனத்தில் குறிப்பிடப்பட்ட அநியாயம் என்ற வார்த்தையின் விளக்கத்தை இணைவைத்தல் எனப் புரிந்து கொள்ளவேண்டும். என அவ்வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் (தப்ஸீர்) செய்தார்கள்.
இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி அவர்களின் காலத்திலிருந்தே தப்ஸீர் கலை ஆரம்பிக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
2. அல்குர்ஆனில் சில விடயங்கள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கும் அதனை நபி(ஸல்) அவர்கள் விரிவாக விளங்கப்படுத்துவார்கள். அன்னாரின் அந்த விளக்கவுரை அல்குர்ஆனிற்கு தப்ஸீராக அமைகின்றது.
உதாரணமாக சூறதுல் புறூஜில்
விசுவாசம் கொண்ட ஓரு சாரார் நிராகரிப்பாளர்களால் நெருப்புக் கிடங்குகளில் போடப்பட்டார்கள். எனும் செய்தி சுருக்கமாக வருகின்றது. அவர்களைப் பற்றிய விரிவான தகவல்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே அல்குர்ஆனில் பல இடங்களில் தொழுங்கள் எனும் கட்டளை வந்திருக்கிறது. ஆனால் தொழுகை என்றால் என்ன? அதை எவ்வாறு மேற்கொள்வது எனும் விரிவான விபரங்கள் நபி(ஸல்) அவர்களினாலேயே விளங்கப்படுத்தப் பட்டுள்ளது
இவைகளைப் போன்ற சொல்சார்ந்த, செயல்சார்ந்த நபி(ஸல்) அவர்களின் விளக்கவுரைகள் அல்குர்ஆனிற்குரிய தப்ஸீராக வருவதை அல்லாஹ் அல்குர்ஆனிலேயே குறிப்பிடுகின்றான்.
அவர்களுக்கு இறக்கப்பட்டதை நீ விளங்கப்படுத்துவதற்காக உமக்கு நாம் (மேலதிகமாக) திக்ர் வஹியை இறக்கிவைத்தோம். (அன்னஹ்ல் 44)
நபி(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனிற்கு விளக்கமாக கூறும் எந்த விளக்கமும் அவரது சொந்த கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்விடமிருந்து வருகின்ற வஹியாகும்.
3. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அல்குர்ஆன் வசனங்களின் மூலம் மார்க்கமாக்கப்பட்ட சில சட்டங்கள் பின்னர் இறக்கப்பட்ட சில வசனங்களின் மூலம் அல்லாஹ் மாற்றிவிடுவான். ஆனால் எது இறுதி சட்டம் எனும் விபரம் அல்குர்ஆனில் திகதிக் குறிப்புகளுடன் இடம்பெற்றிருக்காது.
அது தொடர்பான விடயங்களை அந்த வசனங்கள் அல்லாஹ்விடமிருந்து இறங்குகின்ற போது அங்கிருந்த நபித் தோழர்கள் விளக்கமாக சொல்லியிருப்பார்கள். அந்த தரவுகளை அறிந்து கொண்டால்தான் அல்குர்ஆன் வசனங்களுக்கிடையில் முரண்பாடுகள் இல்லாமல் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இதனால் ஸஹாபாக்களை அடுத்த சமூகத்திற்கு அவ்விளக்கங்கள் அல்குர்ஆனை விளங்குவதற்கு இன்றியமையாததாக இருந்தது.
உதாரணமாக கணவனுடைய மரணித்திற்காக மனைவி இத்தா இருக்கின்ற சட்டத்தை கூறலாம்.
சூறதுல் பகரா 240 ம் வசனத்தின் படி ஆரம்பகாலத்தில் கணவன் மரணித்த பெண் ஒரு வருடம் இத்தா இருக்க வேண்டும் எனும் சட்டம் இருந்தது. பின் இச் சட்டம் சூறதுல் பகரா 224 ம் வசனத்தின் மூலம் நான்கு மாதமும் பத்து நாளும் இத்தா இருக்க வேண்டும் என அல்லாஹ்வினால் மாற்றப்பட்டது.
இவ்விரு வசனங்களும் அல்குர்ஆனிலேயே உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களை அறியாத ஒருவர் அல்குர்ஆனை படிக்கின்ற போது அல்குர்ஆனில் முரண்பாடுகள் இருப்பதாக எண்ணுவதோடு அவர் குழப்பத்தில் ஆகிவிடுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. எனவே இவ்விபரங்களை அறியும் பட்சத்தில் அல்குர்ஆனை சரியாக தவறில்லாமல் விளங்கிக் கொள்ள முடியும்.
இதுபோன்று இன்னும் பல காரணிகளையும் கூறலாம் விரிவஞ்சி சுருக்கிக் கொள்கின்றேன்
தப்ஸீர் கிரந்தங்கள்
இக்காரணிகளைக் கருத்தில் கொண்டு அல்குர்ஆனை தவறின்றி சரிவர விளங்கிக் கொள்ளவேண்டும். என்ற ஒரே நோக்கத்தில் சில ஆரம்ப கால இமாம்கள் அல்குர்ஆன் விளக்கவுரை “தப்ஸீர்” ற்கென தனித்துவமான கிரந்தங்களை எழுத தொடங்கினர்.
அதில் எவ்வசனங்களை விளங்குவதில் அறபுப் பாசையுடன் மேலதிய விளக்கங்கள் தேவைப்படுமோ அவ்விபரங்களை தங்களுக்கு முடியுமானவரை தொகுத்தெழுதினார்கள்.
இவ்வாறு எழுதப்பட்ட தப்ஸீர்களில் சில..
1. தப்ஸீருத் தபரி - எழுதியவர் இமாம் இப்னு ஜரீர் அத் தபரீ
2. தப்ஸீர் இப்னி அபீஹாதிம் - எழுதியவர்- இமாம் இப்னு அபீஹாதிம்
3. தப்ஸீருல் குர்ஆனில் அளீம் - எழுதியவர் இமாம் அப்துர்ரஸ்ஸாக் அஸ்ஸன்ஆனி
இவ்வாறே பிற்பட்ட காலங்களில் பல இமாம்கள் பல தப்ஸீர்களை எழுதினார்கள். அவற்றில் சில…
1. தப்ஸீர் பத்ஹ_ ல் கதீர் - இமாம் ஸவ்கானி
2. அத்தப்ஸீருஸ் ஸஹீஹ்
3. அள்வாஉல் பயான் - முக்தார் ஸன்கீதி
இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தப்ஸீர் கிரந்தங்களை அறபிப்பாசையில் மட்டும் எழுதப்பட்டுள்ளது
இவ்வாறு பல கிரந்தங்கள் இன்றுவரை ஏன் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது? இவைகளுக்கிடையிலான வேறுபாடுகள் என்ன? மற்றும்.. பல தப்ஸீர் கலையுடன் தொடர்பான பல கேள்விகளுக்கான விடைகளை அடுத்த இதழில் பார்ப்போம். இன்ஷாஅல்லாஹ்
தொடரும்……..
ஆக்கம்:- அன்ஸார் தப்லீகி