2020-06-15 780

பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?

பிரச்சார இயக்கங்களுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா ?

சமகாலத்தில் உள்ள பிரச்சார அமைப்புக்களை இருவகைப் படுத்தலாம் .
முதலாவது தூய்மையான மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் ஒளிவு மறைவின்றி இயக்க வெறியின்றி மத்ஹப் வாதமின்றி பிரச்சாரம் செய்யும் அமைப்புகள்.

இரண்டாவது மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் பிரச்சாரம்  செய்துகொண்டு இன்னும் சில விடயங்களை பிரச்சாரம் செய்யாமல் மௌனியாக இருக்கும் அமைப்புக்கள். 

இதில் முதலாம் தரப்பினருடன் சேர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை நாமும் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யலாம்.  இரண்டாம் தரப்பினர் பின்வரும் வழிகேடான காரணிகளில் ஏதேனும் ஒரு காரணத்தை கொண்டவர்களாக இருப்பர் 

1. சில விடயங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லாமல் மறைத்தல்.

இச்செயல் யூதர்களின் செயலுக்கு ஒப்பாக ஆகிவிடுகின்றது. 

அல்லாஹ் கூறுகின்றான்.

தெளிவான அத்தாட்சிகள் நேர்வளியிலிருந்தும் நாம் மனிதர்களுக்காக தெளிவாக எடுத்துச் சொன்ன பின்னர் எவர்கள் அவைகளை மறைகின்றார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் அவர்களை சபிக்கின்றனர்(அல் குர்ஆன் :  2:159  )

இவ்வசனங்கள் வழிகேட்டின் ஓர் வடிவத்தை தெளிவாக எடுத்துச் செல்கின்றது.

2) மார்க்கத்தைப் பற்றிய தெளிவான அறிவின்மையின் காரணமாக அறியாமை என்ற இருளில் மூழ்கி வழிதவறிச் செல்லுதல் 
இதுவும் வழிகேட்டின் ஒரு காரணியாகும்.

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் அறிவை  அப்படியே அடியார்களிடமிருந்து பிடுங்கி விடமாட்டான். என்றாலும் உலமாக்களைக் கைப்பற்றுவதன்மூலம் அறிவைக் கைப்பற்றிக் கொள்வான். எதுவரை எனில்  ஓர் உண்மையான அறிஞரையும் விட்டுவைக்கமாட்டான். மக்கள் அறிவீனர்களை தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் தீர்ப்புக் கேட்கப்படும்.  அறிவில்லாமல் தீர்ப்புக் கூறுவார்கள். அவர்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுத்து விடுவார்கள் (புகாரி , முஸ்லிம் ) 

மேலுள்ள  ஹதீஸ் அறியாமையுடன் மார்க்கத் தீர்ப்புக் கொடுப்பதை வழிகேடாக எடுத்துச் சொல்வதுடன் அதை நம்பி பின்பற்றுவதையும் வழிகேடாக தெளிவாக முன்வைக்கின்றது.

3) உண்மையைத் தெளிவாகத் தெரிந்தும் சுய நலன்களுக்காக உண்மைக்குப் புறம்பாக மார்க்கத்தை மாற்றிக் கூறல் இதுவும் வழிகேட்டின் ஓர் காரணியாகும். 

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்துக்கு தீர்ப்புச் சொல்லிவிட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஓர் ஆணுக்கும் எந்த ஓர் பெண்ணுக்கும் அனுமதியில்லை. அதில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிராரோ அவர் நிச்சயமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார் (அல் குர்ஆன் :    33:35 )

இவ்வசனம் தம் சுய விருப்பங்கள் அது எதுவாக இருந்தாலும் அதை மார்க்கமாக எடுத்துக் கொள்வது வழிகேடு என்று தெளிவாகக் கூறுகின்றது 

4) தம் அமைப்பின் தலைவரின் அல்லது வழிகாட்டுபவரின் தீர்ப்பை கண் மூடிப் பின்பற்றல் இதுவும் ஓர் அமைப்பு இதுவும் ஓர் அமைப்பு வழிகேட்டில் சென்றுகொண்டிருக்கின்றது என்பதின் அடையாளமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்கள் அவனையன்றி தங்கள் மதகுருமார்களையும் தங்கள் பாதிரிகளையும் மர்யமுடைய குமாரர் மசீஹையும் தங்கள் றப்புகளாக எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒரே ஒரு இரட்சகனையே வணங்கவேண்டுமென்றுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனையன்றி வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லை அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்.  (அல் குர்ஆன் :    9:31 )

அல்லாஹ் இறக்கிவைத்ததைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் இல்லை ``நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதன்மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் எனக் கூறுகின்றனர் . அவர்களுடைய மூதாதையர்கள் எதையுமே விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா அப்படியே  பின்பற்றுவார்கள் (அல் குர்ஆன் :          )

இவ்வசனங்கள் தலைவர்களை வழிகாட்டுபவர்களை அல்லது தமக்கு முன்வந்தவர்களை முழுமையாக சரிகண்டு அவர்கள் வழியில் கண்மூடி நடப்பதை வழிகேடு என்பதை உணர்த்துகின்றது.

மேற்கூறிய இக்காரனிகளில் ஒன்று எந்தப் பிரச்சார இயக்கங்களின் பண்பாக இருக்கின்றதோ அவ்வியக்கங்களும் அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களும் வழிகேட்டின் பக்கம் அழைக்கின்ற அழைப்பாளர்களே.

அவர்கள் முன்னெடுத்துச் செல்கின்ற பல மார்க்க விடயங்கள் எவ்வளவு அழகானதாக இருந்தாலும் அவர்களின் மற்றொரு பகுதி வழிகேட்டை அடிப்படையாகக் கொண்டதால் அங்கே அந்த வலிகேடுகளின் மூலமாக அவர்களின் நல்ல செயல்கள் கணக்கில்லாததைப் போன்றாகிவிடும். 

இதற்கு உதாரணமாக கவாரிஜ்களின் செய்தியைக் குறிப்பிடலாம்.

நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள் 

உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள் அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையும் அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பும் அவர்களுடைய நற்செயல்களுடன் உங்கள் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்கள் தொழுகை  நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமாகக் கருதுவீர்கள்.  அவர்கள் அல் குர்ஆனை  ஓதுவார்கள் ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது.  வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு மறு புறம் வெளிப்பட்டுச் செல்வதைப் போல மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள்  (புகாரி -   5058 )

நபி (ஸல் ) அவர்கள் அந்தக் கவாரிஜ்களின் வணக்கங்களையும் மார்க்கத்திலுள்ள பற்றுதலையும் சிலாகித்துக் கூறியும் அவர்களிடமிருக்கும் வழிகேடான தன்மையின் காரணமாக அவர்கள் நரகவாதிகளாக மாறுவதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்கள் 

இவ்விடத்தில் ஓர் விடயத்தைச் சுட்டிக் காட்டுவது அவசியம். அதாவது ``பாவம்" என்று சொல்லப்பட்ட ஒரு காரணிக்கும் ``வழிகேடு" என்று சொல்லப்பட்ட ஒரு காரணிக்கும் இடையில் வித்தியாசப்படுத்திக் கொள்ளவேண்டும்.  ஒரு நல்லவர் ஒரு பாவத்தை செய்யும்போது அதை அவர் பாவம் என்று அறிந்தே செய்கிறார். அவர் அதற்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரலாம். காரணம் அவருக்கு அது பாவம் என்று தெரியும். 

இதேவேளை ஒரு ஒரு வழிகேட்டை மார்க்கமாக எடுத்துக் கொண்டவர் அதிலிருந்து தௌபா செய்யமாட்டார். காரணம் அவர் அதை நேர்வழியாகக் கருதுகின்றார். இதனாலேயே வழிகேடான வழிமுறை நேர்வழி எனக் கருதி தம் பிரச்சாரப் பணியின் கொள்கையாக எடுத்துக் கொண்டவர்களுடன் நாம் சேர்ந்து பிரச்சாரம் செய்வதோ அவர்களின் நிபந்தனைகளுக்கிணங்க அவர்களின் போங்கிலேயே ஒரு சில தலைப்புகளில் பேசுவதோ அனுமதியாகமாட்டாது.  

ஏனெனில் கொள்கையளவில் அவர்கள் வழி தவறியவர்கள் அவர்களின் கொள்கை கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லுமுகமாக அவர்களின் பிரச்சாரங்களில் நாங்கள் கருவியாக அமைவது  அனுமதியாகாது. 

அல்லாஹ் கூறுகின்றான் 

எவர்கள் அவர்களின் மார்க்கத்தைப் பிரிந்து குழுக்களாக ஆகிவிட்டார்களோ எந்த விடயத்திலும் நீ அவர்களை சேர்ந்தவனாக இல்லை. அவர்களின் விடயம் அல்லாஹ்வின் பக்கமே கொண்டு செல்லப்படும். பின்னர் அவர்கள் செய்துகொண்டிருந்தவைகள் பற்றி அவன் அவர்களுக்கு தெரியப்படுத்துவான்.

மேலும் அல்லாஹ்வுடைய வசனங்கள் நிராகரிக்கப்படுவதையயோ அல்லது பரிகாசிக்கப்படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விடயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உடகாரவேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ்வாகிய அவன் வேதத்தில் இறக்கிவைத்திருக்கின்றான். ஏனென்றால் அவ்வாறு அவர்களுடன் உட்க்கார்ந்தால் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் நிச்சசயமாக அல்லாஹ் முனாபிக்குக்கள் இன்னும் நிராகரிப்போர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்றுசேர்த்ததுவிடக்  கூடியவன்.  (அல் குர்ஆன் - 4:140)


குறிப்பு 

இன்று சில தௌஹீத் பிரச்சாரகர்கள் தங்கள் வழிகேடான கொள்கையை உடையவர்கள் என்று கருதக் கூடிய அமைப்புக்களின் பிரச்சார மேடைகளில் அவர்களின் நிபந்தனைகளுக்கிணங்க உரை நிகழ்த்துவதைப் பலரும் காணலாம் .  இது இஸ்லாமிய தஃ வாக்களத்தை தெளிவாகப் புரியாமல் வழிகேட்டிற்கும், வழிகேடர்களுக்கும் உதவிசெய்யும் காரணியாகும். 

அடிப்படைக் கொள்கையை சீர்செய்யாதவர்கள் அல்லது சீர்படுத்தத் தயாராகாதவர்கள் அல்லது அடிப்படையைப் பேசுபவர்களைத் தடுப்பவர்கள் அவர்களின் சபையில் அவ்வடிப்படைக் கொள்கைகளை ஆரம்பத்தில் தெளிவுபடுத்துவதே அவசியமாகும்.  இதனால்தான் இஸ்லாம் பிரச்சார பணியின் முதற் கட்டத்தில் தௌஹீத் பிரச்சாரத்தை முதன்மைப் படுத்துவத்தைக் கட்டாயப்படுத்தியுள்ளது. 

கொள்கையில் தெளிவு இல்லாத இப்பிரச்சாரகர்களின் இச் செயல் வழிதவறிய ஷீஆக்கள் வழிகேடான அவர்களின் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய அமைத்த மேடைகளில் ``நற்குணம்"" என்ற தலைப்பில் அவர்களின் வேண்டுதலுக்கிணங்க நாம் பேசிவிட்டு வருவதை போன்றுள்ளது.

வழி  தவறிய அமைப்புக்களின் சில ரூபாய்களுக்காக அல்லது சில சலுகைகளுக்காக தமது கொள்கையை அடகு வைக்கும் பிரச்சாரகர்களாக இன்று சிலர் மாறிவருவது கவலைக்குரிய விடயமாகும் அவ்வாறானவர்களை தூய்மையான பிரச்சார பணி  செய்பவர்களுடன் சேர்ப்பதற்கு மாற்றமாக வழிதவறிய அமைப்பைச் சேர்ந்தவர்களாகவே கருதவேண்டிவரும் 

இறுதியாக எந்த  ஒரு சபையில் இஸ்லாமிய அடிப்படைக்கு கொள்கையை ஒளிவு மறைவின்றி எடுத்துச் சொல்வதற்கு இடம் கிடைக்குமாக இருந்தால் அந்த சபைகளில்  அதை எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். 

மறைக்கப்படுகின்ற மறுக்கப்படுகின்ற உண்மைகள் உடைத்துச் சொல்லப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை நாம் பயன்படுத்தத் தவறவிடக் கூடாது.