2020-06-03 401

தஃவா களம்

தஃவா களம் 

எந்த ஓர் விடயமாயினும் அதில் ஈடுபடுபவர் அதைப்பற்றி முற்கூட்டி தெரிந்துகொள்வது அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். இதேபோன்று இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் அந்த அழைப்புப் பணிக்கான அறிவை தேவையான அளவுக்கு சந்தர்ப்பங்களுக்கேற்ப தன்னிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

கல்வியின் அவசியம் 
இஸ்லாம் மார்க்கத்தில் ஏவப்பட்ட ஒரு விடயத்தை செய்வதற்காக அல்லது தடுக்கப்பட்ட ஒரு விடயத்தை செய்யக் கூடாது என மக்களை அழைக்கின்றவர் அது தொடர்பான தெளிவான ஆதாரங்களை அல்குர்ஆன் ஆதாரமான ஹதீஸ்களில் இருந்து அறிந்துகொள்வது மிக அவசியமாகும்.  அவ்வாறன்றி தெளிவான ஆதரங்களைத் தெரிந்துகொள்ளாமல் குறிக்கப்பட்ட விடயத்தின் பக்கம் அழைக்கின்றபோது அவரையும் அவரால் அழைக்கப்பட்டவர்களையும் அவ்வழைப்பனது வழிகேட்டின் பக்கம் இட்டுச் சென்றுவிடலாம்.

ரசூலுள்ளா(ஸல் ) அவர்களின் பொன்மொழி இது தொடர்பாக பாரிய எச்சரிக்கையை விடுக்கின்றது. ``நிச்சயமாக அல்லா அறிவை அப்படியே அடியார்களிடமிருந்து பிடுங்கிவிடமாட்டான். என்றாலும் உலமாக்களைக் கைப்பற்றிக் கொள்வதன் மூலமே அதனை கைப்பற்றிக் கொள்வான். எதுவரை எனில்  ஒரு உண்மையான அறிஞனையும் விட்டுவைக்கமாட்டான். அதனால் மக்கள் அறிவீனர்களைத் தலைவர்களாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் தீர்ப்புக் கேட்கப்படும். அறிவில்லாமல் தீர்ப்புக் கூறுவார்கள். அவர்களும் வழிகெட்டு மக்களையும் வழிகேட்டில் ஆழ்த்திவிடுவார்கள்." (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையை மார்க்கத் தீர்ப்புக் கொடுப்பவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இஸ்லாமிய அளைப்பாளனும்  மனக் கண் முன்னே கொண்டு வரல் வேண்டும் . அதன் அடையாளம் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அது தொடர்பாக வந்த திருக்குர்ஆன் வசனங்களையும் ஆதாரமான ஹதீஸ்களையும் இனங்கண்டு தேடி எடுக்க வேண்டும்.   தான் முன்வைக்கும் விடயத்தை எத்தனை உதாரனங்களை உவமானங்களை கூறி விளங்கப்படுத்தினாலும் அவைகள் அல்லாஹ் ரசூலின் வார்த்தைக்கு ஈடாகாது.

ஒரு விடயத்தை விளங்கப்படுத்த உதாரணம் கூறுவதற்கு அனுமதி இருந்தாலும் அல் குர்ஆன் அல் ஹதீஸை அங்கு ஓரம் தள்ளக் கூடாது. ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான் 

``எனது எச்சரிக்கையைப் பயரக்கூடியவர்களுக்கு குர்ஆனைக்கொண்டு உபதேசம் செய்வீராக"" (சூரா காஃப் 45)
மேலும் கூறுகின்றான்  ``நாம் இந்தக் குர் ஆனிலே மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் கொண்டுவந்துள்ளோம்  (சூரா அல் இஸ்ரா 89) 

இவ்வசனங்களின் வழிகாட்டி முகம்மத் (ஸல் ) அவர்களுக்கு அழைப்புப்பணியில் அல் குர்ஆனை எந்தளவு முற்படுத்தவேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக இறங்கியது என்பது நமக்குத் தெரியும். எனவே அவர்கள் கடைப்பிடித்த  அதே வழியை நாமும் கடைப்பிடிப்பது அவசியமாகும் 

அல்குர் ஆண் , அல்ஹதீஸ் புறக்கணிக்கப்படுதல்
இன்று அழைப்புப்பணியில் ஈடுபடுகின்ற அதிகமான அழைப்பாளர்கள் அல்குர்ஆன் வசனங்களையும் ஆதாரமான ஹதீஸ்களையும் முன்னிறுத்தி அழைப்பதைவிட சம்பந்தமில்லாத நாம் பேசும் விடயத்துக்கு எந்தவகையிலும் ஒத்துப் போகாத உதாரணங்களையும் கற்பனையில் எழுதப்பட்ட பொய்யான சம்பவம்களையும் பிரயோகித்துப் பிரச்சாரம் செய்வதை கண்கூடாக காண்கின்றோம். 

இதற்குக் காரணம் அவர்கள் அல் குர்ஆன் ஆதாரமான ஹதீஸ்களைக் கொண்டு பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டப்படாமல் அழைப்புப்பணிக்கு ஈடுபடுத்தப்படுவதாகும். இதனால் ஏற்படும் இறுதி விளைவு தானும் வழிகெட்டு சமுதாயத்தையும் வளிகேடுப்பதாகும். இறுதியாக வழிகெட்டவர்களுக்கான  இருப்பிடம் நரகம் என்பதைத் தவிர வேறில்லை. 

பிரச்சாரக் குழுக்களின் நடைமுறைகள் 

தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் அல் குர்ஆனை விளங்குவதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் மிக மிகக் குறைவாக இருப்பதால் அதில் ஈடுபடக்கூடிய பல்லாயிரக் கணக்கான அழைப்பாளர்கள் தங்களது அழைப்புப்பணியில் உதாரனங்களையும் ஆதாரமற்ற சம்பவங்களையும் மிகக் கூடுதலாகப் பிரயோகிக்கின்றார்கள்.  ஆதாரமான ஹதீஸ் எனக் கற்பிக்கும் நடைமுறை அவர்களின் பிரச்சாரப் பணிக்குள் இல்லாததால் அதிகமான பலகீனமான ஹதீஸ்களையும் மற்றும் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளையும் கண்மூடித்தனமாக தங்களின் பிரச்சாரங்களில் கூறுகின்றனர்.

இவர்களைவிட சற்றுக் குறைவாக இருந்தாலும் ஜமாஅதே இஸ்லாமி இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தம் கருத்தை நிலைநாட்ட பலஹீனமான ஹதீஸ்களை மக்கள் மன்றத்தில் ஆதாரமான ஹதீஸ்களைப்போன்று  முன்வைத்து விடுகின்றனர் . ஒரு பலஹீனமான ஹதீஸை பிரச்சாரப் பணியில் மக்கள் மத்தியில் முன்வைப்பவர் என்னென்ன விதிகளையெல்லாம் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ அவ்விதிகள் அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல் முன்வைப்பதால் நபி (ஸல் ) அவர்களின் பெயரில் பொய் கூறுவதைப் போன்ற ஓர் நிலை அங்கே உருவாகின்றது

இதனால் ரசூல்(ஸல் ) அவர்களின் பின்வரும் எச்சரிக்கைக்கு அளாகவேண்டி வரும். ``பொய்யாக ஒரு செய்தியை என்னத்தொட்டும் யார் கூறுகின்றாரோ அவர் மிகப் பெரிய பொய்யர்களில் ஒருவராவார்""

மேலும் ``யார் என் மீது வேண்டுமென்று பொய் கூறுகின்றாரோ அவர் நரகத்திளிருந்தும் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்ளட்டும்" (ஆதாரம் : புகாரி.)

இவ்வாறே இவ்வியக்கங்களைச் சேர்ந்த ஒரு சாராரும் இன்னும்  இயக்கம் சாராத ஒரு சாராரும் சில அழைப்பாளர்களும் அல்குர்ஆண் வசனங்களை தம் பிரச்சாரங்களில் முன்வைக்கும் வேளையிலும் அது தொடார்பான சரியான கருத்தை தெரிந்துகொள்ளாமல் தவறான விளக்கங்களையும் கூறிவிடுகின்றனர். 

மேலும் பெரும்பான்மையான அழைப்பாளர்கள் சுய ஆய்வு அற்றவர்களாக இருப்பதால் தம் இயக்கத்தைச் சார்ந்த பெரிய அறிஞரின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை மட்டுமே முழுமையாக நம்பி செயற்படுகின்றனர்.  உண்மையில் இந்நம்பிக்கை அவர்களை சில சந்தர்ப்பங்களில் சரியான கருத்தை விளங்க தடையாக ஆகிவிடுகின்றது.  இவ்வாறே அல் ஹதீஸ் விடயத்திலும் இதுபோன்ற பிரச்சாரங்கள் தமது பெரிய அறிஞர்களின் கருத்தோடு மட்டும் நிற்பதால் பலஹீனமான ஹதீஸ்களையும் ஆதாரமான ஹதீஸாகக் கூறிவிடுகின்றனர்.

எனவே அல்லாஹ்வைப் பயந்த உணமையான அழைப்பாளன் சர்ச்சையான விடயங்களில் மிக நடு நிலையாக  எல்லோரின் கருத்துக்களையும் கவனத்திற் கொண்டு நாடு நிலையான முடிவோடு மக்கள் மன்றத்தில் மார்க்க விடயங்களை முன்வைக்கப் பழகிக் கொள்ள வேண்டும் . 
குறிப்பாகச் சொல்வதாயின்  ``தன் வழிகாட்டியும் தவறு விடலாம் மற்றவர் சரியாகவும் கூறலாம்"" என்ற ஓர் உண்மையான மனோ நிலையுடன் மற்றவர்களின் கருத்துக்களையும் பார்க்கவேண்டும் இல்லேயேல் தவறுகளும் சரியாகப் புலப்படும்.

இந்நிலை தொடருமாயின் அழைப்பாளர்களின் அழைப்புக்கள் எல்லாம் இஸ்லாத்தை நோக்கியும் தூய்மையான் அல் குர் ஆன் அல் ஹதீஸை நோக்கியும் இருப்பதற்கு மாறாக இயக்கங்களையும் நவீன மத் ஹபுக்களையும் நோக்கியும் அமைந்துவிடும். 

அல்லாஹ் நம் அனைவரையும் இந்த முசீபத்துக்களை விட்டும் கார்மானப்படுத்தி தூய்மையான உண்மையான அவன் விரும்பும் பிரச்சாரப் பணியில் நிலைப்படுத்துவானாக!