2020-06-02 785

​அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது

அல்லாஹ்வை எப்படி விசுவாசிப்பது?



``அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்" என நம்பும் முஸ்லிங்களில் அதிகமானவர்கள் அந்த அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடிய   பல பண்புகளை நம்பாமல் இருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடிய பல பண்புகளையும் இருப்பதாக நம்புகின்றனர். இவ்வாறு அவனுக்கு இருப்பதை இல்லை எனவும் இல்லாததை இருப்பதாகவும் நம்புவது இறை நிராகரிப்பான ``குப்ர்"" எனும் " மாபெரும் பாவத்தில் அவர்களை இட்டுச் செல்கின்றது. 

இவ்வாறான நம்பிக்கை மக்களிடத்தில் வருவதற்கு முக்கிய காரணம் மக்களின் ஆரம்பக் கல்வியில் இது போன்ற இறை நம்பிக்கையே ஊட்டப்படுகின்றது. திருக்குர்ஆன் மதரசாக்களுக்கு அல் குர்ஆனை படிக்கச் செல்லும் சிறார்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிக் கற்றுக் கொடுக்கும்போது எங்கும் நிறைந்த அல்லாஹ், கண் இல்லாமல் பார்ப்பவன், கை இல்லாமல் பிடிப்பவன், அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றெல்லாம் போதிக்கப் படுகிறது.

இவ்வாறே பாடசாலைக் கல்வியைத் தொடருகின்ற வேளையிலும் முதலாம் தரத்திலிருந்து பதின் மூன்றாம் தரம் வரை அல்லாஹ்வின் பண்புகளை அல்குர்ஆன் ஆதாரங்களுடன் கற்பிப்பதில்லை. குறிப்பாக இஸ்லாமியக் கல்வி முன்பிருந்ததை விட பல மடங்கு மக்கள் மத்தியில் அதிகரித்திருந்த போதும் பல மௌலவிமார்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இஸ்லாமியக் கல்வியில் மேற்படிப்புப் படித்து பல பட்டம் பெற்று வந்திருந்தும் பாடத்திட்டத்தில் இவ்விடயத்தை நுழைவிக்க இதுவரை முன்வரவில்லை. 

அதனால் அல்குர்ஆன் அல் ஹதீஸின் அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகளை மக்கள் மன்றத்தில் நாம் முன்வைக்கும் போது இஸ்லாத்தில் இல்லாத விடயங்களைப் புதிதாக நாம் நுளைவிப்பதைப் போன்று அதிகமான மக்கள் எம்மை நோக்குவதோடு குழப்பவாதிகளாகவும் சித்தரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  என்றாலும் அல்லாஹ்வின் பண்புகளை சரியாக இந்த சமுதாயம் விளங்கிக் கொள்ள வேண்டும் அதில் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக ஹிஜ்ரி 400 க்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பல இமாம்கள் பல கிரந்தங்களை விவ்விடயத்துக்கென குறிப்பாக எழுதியுள்ளார்கள். அதாவது நபி மொழிகளை அதன் தூய வடியில் பாதுகாக்க பல கிரந்தங்களை அவர்கள் எழுதியதைப் போன்று இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாட்டில் மிக முக்கிய இடம் பிடிக்கும் அல்லாஹ்வின் பண்புகளை சரியாகப் புரிந்து வழி தவறாத நம்பிக்கையில் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமான கிரந்தங்களை சமகாலத்தில் அந்த இமாம்கள் எழுதி வைத்துள்ளார்கள்.

உதாரணத்துக்கு சில 
இமாம் அஹ்மதிற்குரிய ``அர்ரத்து அலல் ஜஹ்மிய்யா 
இமாம் புகாரியின்  - கல்கு அப்ஆலில் இபாத் 
இமாம் நஸாயியின்  - அன்னுஊத் 
இமாம் இப்னு குசைமாவின்  - அத்தௌஹீத்

இமாம் இப்னு அபீ சைபாவின் அல் ஈமான் .....
                   இன்னும் எத்தனையோ கிரந்தங்களைக் குறிப்பிடலாம். 

இந்தக் கிரந்தங்கள் எதுவும் அரபிக் கல்லூரிகளில் பாடத்தில் இதுவரையில் உள்வாங்கப் படாதிருப்பதால் சஹாபாக்கள் தாபியீன்கள் மற்றும் தபஉத்தாபிஈன்கள் அல்லாஹ்வின் பண்புகளை எவ்வாறு நம்பியிருந்தார்கள் எனும் உண்மையான அறிவு மௌலவிமார்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பொது மக்களிடம் சரியான முறையிலான இறை நம்பிக்கை சென்றடைவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைந்துவிட்டது.

எனவேதான் அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பாக அல்குர் ஆன், அல் ஹதீஸ் ஆதாரங்களுடன் சஹாபாக்கள் தாபியீன்கள் மற்றும் தபஉத்தாபிஈன்களின் கொள்கையயும் இத்தொடரில் முன்வைக்கலாம் எனக் கருதுகின்றேன்.

ஒருவனான அல்லாஹ்வுக்கு அவனுக்கென்று சொந்தமான பல பண்புகள் இருக்கின்றன. அப்பண்புகள் எதுவும் அவனுடைய எப்பண்புக்கும் ஒப்பாகிவிடாது.
அல்லாஹ் கூறுகிறான்  ``அவனுக்கு நிகராக  ஒருவரும் இல்லை" (அல் இக்லாஸ் 4ம் வசனம் )

மேலும் சூரத்துஸ் சூறா 11ம் வசனத்தில் கூறுகின்றான் ``அவனைப் போன்று எதுவுமே இல்லை. அவன் செவியுறுபவனும் பார்க்கக் கூடியவனுமாவான்"

இவ்வசனம் அல்லாஹ்வின் எப்பண்பையும் அவனின் படைப்புக்களின் பண்புகளுக்கு எவ்வகையிலும் ஒப்பாக்கக் கூடாது என்பதை வரையறுத்துக் கூறுகின்றது.  இதேவேளை அல்லாஹ் செவியுறுபவன் எனக் கூறியிருப்பதால் படைப்பினங்களின் செவியுறும் தன்மைக்கு அவன் ஒப்பாகிவிட்டான். எனக் கருதக் கூடாது.  மாறாக அல்லாஹ்வின் செவியுறும் தன்மை அல்லாஹ்வுக்கு உள்ளதைப் போன்று அவனின் படைப்பினங்களின் செவியுறும் தன்மை இல்லை. என இருவரின் பண்புகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதே கடமையாகும். அவ்வாறன்றி படைப்பினங்கள் செவியுறுபவையாக இருப்பதால் அல்லாஹ் தனக்கு சொன்ன பண்பான ``செவியுறுபவன்""எனும் பண்பை படைப்பினங்ளுக்கு ஒப்பாக்கிவிடும் எனக் கருதி அவனுக்கு இல்லை எனக் கூறவும் கூடாது அவ்வாறு நம்பவும் கூடாது. 

அதாவது அல்லா அவனின் தகுதிக்கேற்ப  அவன் மட்டுமே அறியும் விதத்தில் எப்படைப்பிற்கும் ஒப்பில்லாமல் ``செவியுறுபவனாக"" இருக்கின்றான். படைப்பினங்கள் அவைகளின் தன்மைக்கும் தகுதிக்குமேற்ப செவியுறுபவையாக இருக்கின்றன. இரண்டுக்குமிடையில் வேறுபடுத்தி நம்பவேண்டும். இங்கு அல்லாஹ்விற்கும் செவியுறும் பண்பை படைப்புகளுக்கு ஒப்பாக்காமல் திரிவுபடுத்தவேண்டும். அவ்வாறே அவனின் படைப்புகளுக்கும் செவியுறும் பண்பை அவனின் பண்புக்கு ஒப்பில்லாமல் திரிவுபடுத்தவேண்டும்.

​இந்த ஒரு பண்பை எவ்வாறு அல்லாஹ்வுக்கு நிலைப்படுத்திகிறோமோ அவ்வாறே அல்லாஹ் தனக்கு எப்பன்புகளெல்லாம் இருப்பதாக அல் குர்ஆனிலும் நபி(ஸல் ) அவர்கள் அல் ஹதீஸிலும் கூறினார்களோ அவை அனைத்தையும் படைப்பினங்களுக்கு ஒப்பில்லாமல் திரிவு படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையை நாம் மனதில் பத்திய வைத்தவர்களாக அல்லாஹ்வின் பண்புகள் அனைத்தையும் அல்குர்ஆன் அல் ஹதீஸில் தேடியெடுத்து அவை அனைத்தையும் தவறில்லாமல் புரிந்து நாம் விசுவாசிக்கும்போதே அல்லாஹ்வை நம்பவேண்டிய முறையில் நம்பிய உண்மை முஃமின்களாக நாம் ஆக முடியும்.

இவ்வடிப்படையில் அடுத்துவரும் ஆக்கங்களில்  அல்லாஹ்வின் பண்புகளாக அவன் கூறுகின்ற இரு கைகள், முகம், கண்கள், பாதம், மற்றும் ஏனைய பண்புகள் அனைத்தயும் விரிவாக இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாகப் பார்ப்போம் .

​தொடரும்...