2020-05-21 878

​பெருநாள் குத்பா ஓத உங்களுக்கு தெரியாதா? இவ்வளவும் போதும்!

பெருநாள் குத்பா ஓத உங்களுக்கு தெரியாதா? இவ்வளவும் போதும்! 
அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மதின் வ அலா ஆலிஹி வ அஷ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்.. பெருநாள் தொழுகை என்பது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டதொருஸுன்னாவாகும். பர்ளான தொழுகைக்குக்கூட பெண்களை வருமாறு கட்டாயப்படுத்தாத (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு வருமாறு கூறியுள்ளதை ஸஹீஹான ஹதீஸ்களிலே காணலாம். இத்தொழுகை வெறுமனே இரண்டு ரகாஅத் தொழுவதை மட்டுமல்லாமல் குத்பாவையும் பொதிந்துள்ளது. குத்பா இல்லாமல் தொழுகையை மாத்திரம் நடாத்துவதுஅனுமதி என்று சில அறிஞர்கள் கூறினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையில் இக்கூற்றுக்குஎவ்வித ஆதாரமுமில்லை. பெருநாள் தின குத்பா என்பது பெருநாள் தொழுகையோடு இணைத்துக் கூறப்பட்ட விடயமாகும்; அதில் ஒன்றை விட்டுவிட்டு மற்றதை செய்யும் உரிமை எமக்கில்லை. மாறாக, பெருநாள் தொழுகையை நடாத்தக்கூடிய ஆண் (பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும்) தன் சக்திக்கு ஏற்ப அவ்வுரையை நடாத்துவார். அவர் சாதரணமாக கீழ்வருமாறு கூறுவதற்கு சக்தி பெற்றிருந்தாலும் அதுவும் குத்பாவாகவே அமையும்... 1-அல்லாஹ்வை புகழ்தல்: “அல் ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன்” 2-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுதல்: “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் வ அலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் வ அலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதுன் மஜீத் வ பாரிக் அலா முஹம்மத் வ அலா ஆலி முஹம்மத் கமா பாரக்தஅலா இப்ராஹீம் வ அலா ஆலி இப்ராஹீம் இன்னக ஹமீதுன் மஜீத்” 3- சிறியதொரு நல்லுபதேசம் செய்தல்: “அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்; குடும்ப உறவைப் பேணி நடங்கள்; ஒவ்வொருவரும் மற்றவரை மன்னித்து வாழுங்கள்; ஏழைகளுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்யுங்கள்!” இவ்வாறுஆரம்பத்தில்அல்லாஹ்வை புகழ்ந்து அடுத்ததாகஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மீது நாம் அறிந்த வகையில் ஸலவாத்தைக் கூறிவிட்டு தாம் அறிந்த மார்க்கத்திலுள்ள சில நல்ல விடயங்களைக் கூறினாலே அது குத்பாவாக அமையும். ஏனென்றால்மார்க்கம் ஒரு மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதை வேண்டமாட்டது. இது தொடர்பாக அல்லாஹ்வும் அவனின் தூதர் (ஸல்) அவர்களும் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்.... 1-அல்லாஹ் அல் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்: “அல்லாஹ் எந்தவோர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை” ((சூரத்துல் பகறா:286)) 2-மேலும், அல் குர்ஆனில்மற்றுமோர் வசனத்தில் இவ்வாறு கூறுகிறான்: “ஆகவே, உங்களுக்கு முடியுமான அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்” ((சூரதுத் தகாபுன்:16)) 3-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள்: “நான் உங்களுக்கு ஒருவிடயத்தை ஏவினால்அதிலிருந்து உங்களுக்கு முடியுமான அளவிற்கு செய்யுங்கள்” ((ஸஹீஹுல் புஹாரி:7288)) ஆக, மிம்பரில் நின்று இரண்டு குத்பா ஓதி தொழுகை நடாத்துவது (சில மத்ஹப்கள் கூறினாலும்) பெருநாள் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையல்ல; ஒவ்வொரு முஸ்லிமும் தம் சக்திக்குட்பட்ட அளவுக்கு அல்லாஹ்வை அஞ்சி அவனது ஏவல்களை எடுத்து நடந்து விலக்கல்களை தவிர்ந்து வாழ வேண்டும். மாறாக ஏவப்பட்ட விடயங்களில் சிலதை எடுத்து சிலதை விடுவது மார்க்கமல்ல. தொழுகையோடு இணைந்ததாக குத்பாவையும் கூறி இருப்பதால் தமக்கு முடியுமான அளவிற்கு அந்த ஏவலை நடைமுறைப்படுத்துவோம். ஏனென்றால், மார்க்கம் சொன்ன விடயங்களை கூட்டல், குறைத்தல் செய்யும் உரிமை நமக்கில்லை. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையின் அடிப்படையில் எங்களின் எதிர்வரும் பெருநாள் தினத்தை அமைத்து அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்ற அடியார்களாக மாறுவோமாக! “எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு ஏற்றவாரல்லாது சிரமப்படுத்தப்பட மாட்டாது” ((சூரத்துல் பகறா:233))