2020-05-18 1258

கொரோனா வைரசினால் இறக்கும் ஒரு முஸ்லிமுக்கு ஷஹீதின் கூலி கிடைக்குமா?


கொரோனா வைரசினால் இறக்கும் ஒரு முஸ்லிமுக்கு ஷஹீதின் கூலி கிடைக்குமா?

 

அல் ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் முஹம்மத் வ அலா ஆலிஹி வ அஷ்ஹாபிஹி வ அஹ்லி பைத்திஹி வ மன் தபியஹும் பி இஹ்சானின் இலா யவ்மித்தீன். அம்மா பஃத்..

 

தற்காலத்தில் பலராலும் பரவலாக கேட்கப்படும் இக் கேள்விக்கான பதிலை காலத்தின் தேவை கருதி கூறுவது பிரயோசனமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

 

நபி (ஸல்) அவர்கள் இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக எதையும் கூறவில்லை; என்றாலும், இந்த நோயைப் போல் பலரும் பாதிக்கப்படுகின்ற ‘தாஊன்’ (கொலரா) என்ற நோயைப் பற்றி சொல்லியுள்ளார்கள்.

 

இந்த கொலரா நோய் பற்றி நபி (ஸல்) அவர்கள் பல செய்திகளை கூறியிருப்பதை ஆதாரமான ஹதீஸ்களிலே காணலாம். இந்நோய், அல்லாஹ் பனூ இஸ்ராயீல் கூட்டத்தினர் மீது அவனை மாறு செய்த போது இறக்கிய ஒரு தண்டனையாகும்.

 

கொலரா நோய் தொடர்பாக பல சஹாபாக்கள் ஹதீஸ்களை அறிவிப்பதைக் காணலாம். அந்த வகையில் உஸாமா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் பின்வருமாறு...

ஆமிர் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் உஸாமா இப்னு ஸைத் (ரழி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளை நோய் (கொலரா) பற்றி நீங்கள் செவிமடுத்திருக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரழி) அவர்கள் “இறைத்தூதர் அவர்கள் கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீலின் ஒரு கூட்டத்தார் மீது அல்லது உங்களுக்கு முன் இருந்தோர்களின் மீது அனுப்பப்பட்ட ஒரு வகை வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள் நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவிவிட்டால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக அங்கிருந்து வெளியேறாதீர்கள் என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

((ஸஹீஹுல் புஹாரி : 3473))

 

மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கும் ஹதீஸ் பின்வருமாறு....

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளை நோய் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் “அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும், அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும் “கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையாளனாகவும், நன்மையை ஆதரவு வைத்தவராகவும், அல்லாஹ் தனக்கு எழுதியுள்ளதைத் தவிர வேறெதுவும் தன்னை பீடிக்காது என்று நம்பிக்கை கொண்டவராக தன் ஊரிலே தங்கி இருப்பாராயின் இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் நிச்சயம் அவருக்குக் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

((ஸஹீஹுல் புஹாரி : 3474))

 

மனித சமுதாயம் அல்லாஹ்வுடைய கட்டளைகளை மீறி இந்த பூமியில் மாறு செய்யும் போது அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடையும். இவ்வாறு மாறு செய்யும் சமுதாயம் பல வகைப்படும். அவற்றை பின்வருமாறு சுருக்கமாக கூறலாம்...

 

1-அல்லாஹ்வை முற்று முழுதாக மறுத்து தானே கடவுள் என்று வாதிடும் சமுதாயம்.

 

2-அல்லாஹ்வை வணக்க வழிபாட்டில் ஒருமைப்படுத்தாமல் அவனுக்கு இணைகளை ஆக்கும் சமுதாயம்.

 

3-அல்லாஹ்வை வணங்குகின்றோம் என்ற பெயரில் அவன் தடுத்தவற்றை அனுமதியாக ஆக்கிக்கொள்ளும் சமுதாயம்.

 

தற்போது 15௦ கோடி முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் சாந்தியான மார்க்கம் சொல்லும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது சொற்பமானவர்களே. இவ்வாறு கெடுதிகள் அதிகரித்தால் மக்கள் படிப்பினை பெற்று தங்களை நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ் தண்டனைகளை அனுப்பிவைக்கின்றான். என்றாலும், மேற்கூறப்பட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸின் அடிப்படையில் இது ஒரு உண்மையான முஃமினுக்கு அவன் பொறுமையாளனாக இருந்தால் ஒரு அருளாக மாறும் என்று கூறப்படுகின்றது.

 

ஒரு உண்மையான முஃமின் இவ்வாறான நோய் ஏற்படும் போது அல்லாஹ்வின் விதியை நம்பி நன்மையை எதிர்பார்த்தவனாக பொறுமையாக இருப்பான். ஆனால், இது அல்லாஹ்விடம் கேட்டுப் பெறும் ஒரு அருளல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். மாறாக ஒரு முஃமின் தான் இருக்கும் இடத்தில் அந்நோய் வந்தால் அவ்வூரிலே தரித்திருப்பான், வராத நிலையில் அதை அருள் என்று தேடிச் செல்லமாட்டான்.  

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போரில் மரணித்தவர்களை மாத்திரமன்றி இன்னும் சிலரையும் ஷஹீத் (உயிர்த்தியாகிகள்) கூட்டத்தில் கூறுவதைக் காணலாம். இது தொடர்பாக அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் பின்வருமாறு...

 

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடம் “உங்களில் உயிர் தியாகிகள் குறித்து உங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார்” என்று பதிலளித்தார்கள். “அப்படியானால், என் சமுதாயத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் குறைந்துவிடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் “அவ்வாறாயின், உயிர்த்தியாகிகள் யார்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகியாவார், அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த்தியாகியாவார்,  வயிற்றோட்டத்தில் இறந்தவர் உயிர்த்தியாகியாவார், கொள்ளை நோயால் இறந்தவர் உயிர்த்தியாகியாவார்” என்று பதிலளித்தார்கள்.

 

இன்னுமோர் அறிவிப்பில் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகியாவார்” என்று இடம்பெறுகிறது.

((ஸஹீஹ் முஸ்லிம் : 3878, அத்தியாயம்:33 ஆட்சியதிகாரம்))

 

மேலும், அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “உயிர்த்தியாகிகள் ஐந்து பேர் ஆவர்.

1-பிளேக் நோயால் இறந்தவர்.

2-வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர்.

3-தண்ணீரில் மூழ்கி இறந்தவர்.

4-வீடு, கட்டிடம் இடிந்து விழும் போது இடிபாட்டில் சிக்கி இறந்தவர்.

5-இறை வழியில் (அறப்போரில்) இறந்தவர்.

((ஸஹீஹுல் புஹாரி : 2829))

 

ஆக, அல்லாஹ் ஷஹீத் என்ற பதவியை புனிதப்போரில் கலந்து இறந்தவருக்கு தனித்துவமாக கொடுத்தாலும் அதே கூலியைப் போன்று  பெறக்கூடியவர்களாக மேற்சொன்னவர்களையும் ஆக்கியுள்ளான்.

 

எனவே, நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொலரா நோயைப் போன்றே இந்த நோயை அவதானிக்கின்றோம். அல்லாஹ்வின் நாட்டத்தில் இந் நோயினால் கஷ்டப்பட்டு மரணிக்கக்கூடியவரின் நிலை கொலராவினால் மரணிப்பவரைப் போன்று இருக்குமென்றால் அல்லாஹு தஆலா ஷஹீதின் கூலியைக் கொடுக்கப் போதுமானவன். என்றாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நோயைப் பற்றி நேரடியாகக் கூறாத காரணத்தால் எங்களால் உறுதியாகக் கூற முடியாது.

 

“இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிந்தவன்”

((சூரதுல் பகறா: 282))

 

பதில்: மௌலவி M.I.அன்சார்(தப்லீகி)

அதிபர்

(தத்பீகுஷ் ஷரீஆ கல்லூரி)

எழுத்தாக்கம்: 

உம்மு அமதில்லாஹ் ஷரயிய்யா